நடப்பு T20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று முன் தினம் மோதின.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் இந்திய வீரர்களை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வீரர் முகமது ஷமி வீசிய ஓவர்களினால்தான் பாகிஸ்தான் அணி வெற்றியை பெற்றுள்ளது என்றும் அவர் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறார் என்றும் அவதூறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதனையடுத்து சக நெட்டிசன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பில் இருந்தும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.
அவ்வகையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு எவரும் அன்பை தராததால் வெறுப்பால் நிரம்பி போயிருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள் முகமது ஷமி” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இதேபோல, பாகிஸ்தான் உடனான போட்டிகளில் நானும் விளையாடி உள்ளேன். அப்போது நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என எவரும் எங்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லவில்லை. இது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவின் நிலை. ஆனால் தற்போது நடைபெறும் இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு ஷமிக்கு ஆதரவாக இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக,. இந்திய கிரிக்கெட் அணி ஏன் முகமது ஷமிக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணியின் 11 பேரில் ஷமியும் ஒருவர்.
சக வீரர் மீது வெறுப்பை கக்குவோருக்கு எதிராக ஒரு பதிவை கூட இடாமல், கறுப்பின மக்களுக்காக மைதானத்தில் ஆதரவு தெரிவிப்பது எந்த விதத்திலும் பொருட்படுத்த முடியாததாக கருதப்படும் என சாடியுள்ளார்.
இதனிடையே சில நெட்டிசன்களின் வன்மமான பேச்சுகளை எதிர்க்கும் வகையில் #WeStandwithShami என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.