தலைநகர் டெல்லியில் மூன்றாக இருந்த மாநகராட்சிகள் கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி மாநகராட்சியாக ஒன்றாக இணைக்கப்பட்டது. 250 வார்டுகளுக்கு கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை வென்றது. அதே வேளையில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் சுயேட்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியது.
டெல்லி மாநகராட்சி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மேயர் தேர்தல் நடைபெறு நிலையில், 5 ஆண்டு காலத்திற்கு, சுழற்சி அடிப்படையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ஆண்டில் ஒரு பெண், 2-வது ஆண்டில் Open கேட்டகரி, 3-ம் ஆண்டில் பட்டியலின பிரிவு, 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் Open கேட்டகரி என்ற முறையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த சூழலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக மேயர் தேர்தல் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் என்பவர், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷெல்லி ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு (2024) டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில், டெல்லி அரசியல் களத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாஜக - ஆம் ஆத்மி கட்சி மோதல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உள்ளிட்ட பல பதற்றமான சூழல் ஏற்பட்டதால், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் 7 மாத காலத்திற்கு பிறகு டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று (நவ.14) நடைபெற்றது. அதன்படி டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று (நவ.14) நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி சார்பில் மகேஷ் குமார் கிச்சியும் (Mahesh Kumar Khichi), பாஜக சார்பில் கிசான் லாலும் (Kishan Lal) போட்டியிட்டனர்.
டெல்லியில் மொத்த 265 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், மேயர் பதவியைத் தக்கவைக்க 133 வாக்குகள் பெற வேண்டியது அவசியம். ஆனால் இந்த 265 வாக்குகளில் 2 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பாஜக வேட்பாளர் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து தேவ் நகர் கவுன்சிலரான மகேஷ் கிச்சி, 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே வேளையில் பாஜக வேட்பாளர் 130 வாக்குகளைப் பெற்றிருந்தார்
தலைநகர் டெல்லிக்காக பாஜகவுக்கும் - ஆம் ஆத்மிக்கு நீண்ட காலமாக கடும் மோதல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி மேயர் மகேஷ் கிச்சி, அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் வரை, அதாவது வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே மேயராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.