பா.ஜ.க ஆட்சி காலத்தில் மறுக்கப்படும் நீதியால், மக்களின் ஆதரவு குறைந்து வரும் வேளையில், நாட்டின் தலைவர்களுக்கு காவி சாயம் பூசி, தம் ஆதரவை பெருக்கும் வேலையில் பா.ஜ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அம்பேத்கரும், திருவள்ளுவரும் கூட விலக்கில்லை. எனினும், அம்பேத்கரின் ஆதரவாளர்களும், திருவள்ளுவரின் திருக்குறளைப் படித்தவர்களும் அரசியல் தெளிவுகொண்டு, பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் மாயையில் சிக்கிக்கொண்ட காந்தியடிகளின் குடும்பத்தவர் ஒருத்தவரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. அப்பேச்சில் அவர், காந்தி தற்போது இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார் என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், தனது X தளத்தில் பதிவிட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், “மகாத்மா காந்தி தற்போது உயிரோடு இருந்திருந்தால், மோடியை ஆதரித்திருப்பார் என மகாத்மா காந்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு, நான் என்னையே கேட்டுக்கொள்ளும் கேள்விகள்,
சாதிமறுப்பு திருமணங்கள் நடப்பதற்கு எதிரான வன்முறையை காந்தி ஆதரித்திருப்பாரா?
கையகப்படுத்தம் என்கிற பெயரில் ஏழை மக்களின் வீடுகளை, புல்டோசர் கொண்டு இடிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
பொது உரிமையியல் சட்டம் மூலம் குறிப்பிட்ட வகுப்பு மக்கள் வஞ்சிக்கப்படுவதை ஆதரித்திருப்பாரா?
பிரிவினையை அதிகரிக்கிற வகையில் கொண்டுவரப்படும் அரசு திட்டங்களுக்கு செவி கொடுத்திருப்பாரா?
ஜம்மு - காஷ்மீரின் மாநிலத்தகுதியைக் குறைத்து, யூனியன் பிரதேசமாக மாற்ற ஒத்துப்போகியிருப்பாரா?
மேலும் பல கேள்விகள் நீண்டிருக்கின்றன...” என தெரிவித்துள்ளார்.