ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், கடந்த ஜன. 31-ம் தேதி அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டார். நில மோசடி தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினரை பாஜக குறி வைத்து ED, CBI உள்ளிட்டவைகளை ஏவி மிரட்டி அடிபணிய வைக்க முயன்று வரும் நிலையில், நில மோசடி வழக்கை காரணம் காட்டி ஹேமந்த் சோரனை கைது செய்துள்ளது பாஜக அரசு. தான் கைது செய்யப்படுவதை உணர்ந்த ஹேமந்த் சோரன், தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, அம்மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை முதலமைச்சராக நியமிக்குமாறு அம்மாநில ஆளுநரிடம் பரிந்துரை செய்ததையடுத்து, சம்பாய சோரன் முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன், ஜாமீன் கேட்டு பலமுறை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த சூழலில் ஹேமந்த் சோரனின் இரத்த உறவினர் ராஜாராம் சோரன் கடந்த ஏப். 30-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக மே 4 முதல் 6-ம் தேதி வரை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு 3 நாள்கள் ஜாமீனை மறுத்து, இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான மே 6-ம் தேதி மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் இன்று தனது கிராமத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தாடியுடன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து, "எனது விமானம் சிறியதாக இருப்பதாக அவர்கள் (பாஜக) நினைக்கிறது. ஆனால் வானம்தான் கொஞ்சம் சிறியதாக இருக்கிறது" என்று பாஜகவினரை தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது தாடியுடன் இருக்கும் ஹேமந்த் சோரன் புகைப்படத்தை அக்கட்சியினர் இணையத்தில் பகிர்ந்து அவருக்கு நம்பிக்கை கொடுத்து வருகின்றனர். முதலமைச்சாராக பதவியில் இருக்கும்போதே அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் மட்டுமின்றி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.