பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து ஒன்றிய பாஜக அரசு தங்கள் அதிகாரத்தை வரையறையின்றி கட்டவிழ்த்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அரசின் அமைப்புகளை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தொடர்ந்து இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதோடு, அவர்களை மிரட்டி பாஜகவில் இணைத்துள்ளது. இவ்வாறு மற்ற அரசியல் கட்சிகளில் இருக்கும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, பாஜக மிரட்டி தனது பக்கம் இழுத்து வருகிறது. அப்படி அடிபணியாத ஆட்களை கைது செய்து தொல்லைகொடுத்து வருகிறது.
இதனாலே பாஜக அரசை எதிர்க்கட்சிகள் பாசிச அரசு என விமர்சனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கண்டனங்கள் போராட்டங்கள் என எழுந்த நிலையில் கூட, பாஜக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதே போல் ஊழல்வாதி, கொலை குற்றவாளி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பயங்கரவாதி என யார் மீதெல்லாம் குற்றங்கள் சுமத்த படுகிறதோ, அவர்கள் எல்லாம் பாஜகவில் இணைந்தால் அது நீக்கப்பட்டு விடுகிறது.
இவ்வாறாக பலரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். யாரெல்லாம் பாஜகவில் இணைந்தார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது புனிதராகி விடுகிறார்கள் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
அதன்படி இன்று செய்தியாளரை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, “புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் ’மோடி வாஷிங் பவுடர்’. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை ரூ.8,552 கோடி. சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது.” என்றார்.
மேலும் கொலை, ஊழல், கொள்ளை, வன்கொடுமை, பயங்கரவாதிகள் உள்ளிட்ட குற்றங்களை டி-ஷர்ட்டில் எழுதி, அதனை வாஷிங் மெஷின் ஒன்றில் போட்டு, அதில் மோடி வாஷிங் பவுடரை வைத்து சுத்தம் செய்தால், 'பாஜக மோடி வாஷ்' என சுத்தமாக வெளியே வருகிறது என்பதை செய்து காட்டினார்.
அதோடு இதில் முக்கியமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், பிரஃபுல் படேல், சகன் புஜ்பல், முகுல்ராய், சுவேந்து அதிகாரி, நாராயணன் ரானே, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 21 பேர் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, இவர்கள் எல்லாம் பாஜகவில் ஐக்கியமான பிறகு சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக விமர்சித்துள்ளார்.