ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளும் (2022 வரை) பாஜக மட்டும் சுமார் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியிலிருந்து 58% ஆகும். எனவே தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 15-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை SBI வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.
அந்த விவரங்களை நேற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், அந்த பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இடம்பெறாமல்,எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்றும், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன என்ற தரவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் பத்திரங்கள் ஆவணங்களை திருப்பிக் கொடுப்பது தொடர்பாக விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது SBI வங்கி ஏன் தேர்தல் பத்திர எண்களை வெளியிடவில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அரசியலைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில் தெளிவாகத்தானே அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட ஆல்பா எண்ணை SBI வெளியிடவில்லை. இது குறித்து SBI வங்கிக்கு நோட்டீஸ் வழங்கலாம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.