முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 100 நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 37 வது நிகழ்வாக சென்னை வால்டாக்ஸ் சாலை அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மேயர்,பிரியா ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 21 பேருக்கு ஆட்டோவும், 600 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகளுடன் கூடிய அறுசுவை உணவையும் வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, " திமுக இளைஞரணிக்கு ரோல் மாடலாக இருந்தவர் மு. க.ஸ்டாலின். அந்த வகையில் இன்றைக்கு இளைஞரணிக்கு ரோல் மாடலாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம்.
ஆனால், எப்போது தேர்தல் நடந்தாலும் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெல்லும். நாடாளுமன்ற தேர்தலுக்காக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை பா.ஜ.க அறிவித்திருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் ஒரு வேட்பாளரை கூட அறிவிக்க இயலாத திறனற்ற நிலையில் தான் பா.ஜக உள்ளது.
நாட்காட்டியில் நாட்கள் நகருவதை விட அதிக முறை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகின்றார். இந்தியாவின் எந்த மூலைக்கும் பிரதமர் சென்றாலும் திமுகவை தான் விமர்ச்சிக்கின்றார்.அந்த அளவிற்கு தமிழக மக்களின் மனங்களை திமுக வென்றிருக்கின்றது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றார் மோடி , ஆனால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் இல்லை திமுக ,பா.ஜ.க கட்சி உருவாவதற்கு முன்னரே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கட்சி திமுக.
பல அடக்குமுறை யை கண்ட கட்சி திமுக என்றும் மிசா போராட்டத்தில் நம் முதல்வர் சிறை சென்றதை மோடி அண்ணாமலைக்கு தெரியபடுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வென்று பா.ஜ.கவிற்கு பாடம் புகட்டுவோம்" எனக் கூறினார்.