இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடக்கும் சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரங்களை தொட்டு அதிரவைத்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் இது மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இஸ்ரேலை அதிரவைக்கும் இந்த போராளி குழுக்களின் பின்னணி என்ன ? அவர்களால் எப்படி இஸ்ரேல் போன்ற வலிமையான ராணுவத்தை எதிர்க்க முடிகிறது என்பதற்கு அதன் உருவாக்கம் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும்.
முதலாம் உலகப்போரின் போது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் பாலஸ்தீன் வந்தது. அப்போது ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனுக்கு குடிபெயர்ந்தனர். இதனிடையே பாலஸ்தீனில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க பிரிட்டன் ஒப்புதல் அளித்தது. இது குறித்த 'பால்போர் அறிக்கை' வெளியானதும் பாலஸ்தீனியத்தில் இருந்த அரேபியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் சிறிது சிறிதான ஏராளமான போராளி குழுக்கள் உருவானது. இதே காலத்தில் இஸ்ரேலில் இருந்த யூதர்களும் போராளி குழுக்களை உருவாக்கி கொண்டன. இந்த இரு குழுக்கக்கும் இடையே அடிக்கடி வன்முறைகள் நடைபெற்றது. அதன் உச்சமாக 1936-ம் ஆண்டு அப்போது பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டன் அரசுக்கு எதிராகவும் யூதர்களுக்கு எதிராகவும் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பிரிட்டன் கொடூரமாக ஒடுக்கியது. இந்த வன்முறையில் அரபியர்கள், யூதர்கள் என இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், பிரிட்டன் தான் கூறியதுபடி பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்கும் பொறுப்பை ஐ.நா-விடம் ஒப்படைக்க, பல்வேறு நாடுகளின் ஒப்புதலுடன் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாம் அரபு- இஸ்ரேல் போரில், இஸ்ரேல் வெற்றிபெற்றது. ஐ.நா-வால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதோடு இந்த போரில் பாலஸ்தீன மக்களுக்காக போரில் இறங்கிய எகிப்து, ஜோர்டான், சிரியா போன்ற நாடுகள் போரில் பின்வாங்கி போர் நிறுத்தம் செய்து கொண்டன. மேலும், ஐ.நா-வால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதிகளான காசா, மேற்குக்கரை பகுதிகளை தங்கள் நாட்டோடு இணைத்து கொண்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான பாலஸ்தீன அரபியர்கள் அகதிகளாகினர்.
இந்த போர்தான் பாலஸ்தீனத்தில் போராளி இயக்கங்கள் உருவாக முக்கிய காரணமாக இருந்தது. அதுவரை சக அரபு நாடுகள் தங்களுக்கு துணை நிற்கும் என நினைத்திருந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு சக அரபு நாடுகளின் துரோகம் அதிர்ச்சியை அளித்தது. இதனால் இனி தாங்கள்தான் போரிட வேண்டும் என்ற மனநிலையில், அங்கு ஏராளமான போராளி இயக்கங்கள் உருவாகின.
அப்படி உருவான இயக்கங்களின் முக்கியமானது யாசிர் அரஃபாத்தின் அல் ஃபத்தா இயக்கம். ஏராளமான இயக்கங்கள் தனித்தனியாக இஸ்ரேலை எதிர்த்தால் அதனால் எந்த நன்மையையும் ஏற்படாது என்பதை உணர்ந்த பாலஸ்தீன போராளி இயக்கங்கள், அரபு லீக்கின் உதவியோடு 1964-ம் ஆண்டு PLO (Palestine Liberation Organization) என அழைக்கப்படும் பாலத்தீன விடுதலை இயக்கத்தை உருவாக்கின. இந்த இயக்கத்தின் முதல் தலைவராக அகமத் ஷகிரி என்பவர் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டி அப்போது கொரில்லா தாக்குதல் முறையில் சிறந்து விளங்கிய யாசிர் அரஃபாத் PLO-வின் தலைவராக பொறுப்பேற்றார். இவரின் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலின் ராணுவ மற்றும் காவல்நிலையங்கள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலை திணறடித்தது.
1967-ம் ஆண்டு இஸ்ரேல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளின் மீது தாக்குதலில் நடத்தியது. 6 நாள் போர் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலின் முடிவில் எகிப்து வசமிருந்த காசா, ஜோர்டான் வசமிருந்த மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம், சிரியா வசமிருந்த கோலான் பகுதிகள் ஆகியவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தன.
அதன் பின்னர் இஸ்ரேல் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் இருந்த பாலஸ்தீனியர்களை விரட்டி விட்டு அங்கு யூதர்களை குடியமர்த்தியது. இது பாலஸ்தீனியர்களை ஆத்திரத்தில் ஆழ்த்த PLO தலைமையில் பாலஸ்தீனியர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் 'இண்டிபதா' என்ற பெயரில் மாபெரும் ஊர்வலங்களை இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து நடத்தினர். அமைதியான இந்த ஊர்வலங்களில் இஸ்ரேல் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச ஊடகங்கள் மூலம் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரபரப்பட்டது. . இதனால் பல்வேறு நாடுகளும் இஸ்ரேல் அரசை கண்டிக்க, வேறு வழியே இன்றி PLO அமைப்பிடம் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக இஸ்ரேல் அரசுக்கும் PLO அமைப்பின் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையே 1993-ம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தம் நடந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீனுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி காசா, மேற்குக்கரையின் சில நகரங்களை ஆளும் பொறுப்பு 'பாலஸ்தீன் அத்தாரிட்டி' என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. காசா, மேற்குக்கரையில் இருந்து இஸ்ரேல் ராணுவமும் விளக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பாலஸ்தீன் வளர்ச்சி பணிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும், மூடப்பட்டிருந்த பள்ளிகளும் செயல்படத்தொடங்கின. ஆனால், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு மதிக்காமல் பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களின் மீண்டும் குடியேற்றங்களை ஆரம்பித்தது. இதனால் அங்கு தொடர்ந்து போராளி இயக்கங்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் சண்டைகள் ஏற்பட்டு மீண்டும் பெரும் வன்முறை பாதைக்கு பாலஸ்தீன் திரும்பியது. ஏராளமான பாலஸ்தீன் போராளிகளும், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இஸ்ரேலிய நகரங்களின் தினமும் குண்டுகள் வெடித்தன.
இதனால் மீண்டும் ஒரு உடன்படிக்கையை எட்டவேண்டிய நிலை இஸ்ரேலுக்கும், அதனை தீவிரமாக ஆதரிக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கொண்டுவந்த 'ரோட் மேப்'பின் பல்வேறு கருத்துக்களை PLO மற்றும் இஸ்ரேலிய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், நாளடைவில் அந்த திட்டத்தையும் இஸ்ரேல் வழக்கம்போல தூக்கியெறிந்து பாலஸ்தீன பகுதியில் தனது குடியேற்றத்தை அதிகரித்தது. இதனிடையே 2004-ம் ஆண்டு யாசிர் அரஃபாத் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிறகு பாலஸ்தீன் அத்தாரிட்டியின் அதிபராக மம்மூத் அப்பாஸ் பொறுப்பேற்றார்.
PLO இயக்கம் உருவான அதே காலகட்டத்தில் காசா பகுதியில் உருவான அமைப்புதான் ஹமாஸ். யாசிர் அரஃபாத்தின் PLO அமைப்புக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் அதன் அடிப்படையிலேயே பெரும் வித்தியாசம் இருந்தது. யாசிர் அரஃபாத் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொண்டு காசா, மற்றும் மேற்கு கரையை உள்ளடக்கிய சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
ஆனால், ஹமாஸ் அமைப்பு யூதர்களை அழித்து, இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் செய்து, அதன் பின்னர் பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டது. இதன் காரணமாக PLO அமைப்புக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சச்சரவு தொடர்ந்து வந்தது. PLO அமைப்பின் முக்கிய தலைவர்கள் மேற்குக்கரை பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால், ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் காசா பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் ஆரம்பத்தில் இருந்தே ஹமாஸ் அமைப்புக்கு காசாவில் தீவிர ஆதரவு இருந்தது.
தான் தோன்றிய காலம் முதல் ஹமாஸ் அமைப்பு எப்போதும் இஸ்ரேல் மீது தொடர்ந்து வலுவான தாக்குதலை நடத்தி வந்துள்ளது. PLO அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் ஓஸ்லோ ஒப்பந்தம் நடந்த தருணத்தில் அதை எதிர்த்த பலர் ஹமாஸில் இணைந்தனர். இதனால் அந்த காலகட்டத்தில் ஹமாஸ் அமைப்பு பெரும் வளர்ச்சியடைந்தது. PLO அமைப்பின் தலைவராக இருந்த யாசிர் அரஃபாத் இறந்த பின்னர், PLO அமைப்புக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை ஹமாஸ் நடத்தியது.
2006-ம் ஆண்டு PLO படைகளை வீழ்த்தி காஸாவை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ஆண்டு நடந்த பாலஸ்தீன சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு காசா பகுதியில் பெரும் வெற்றியை பெற்றது. அதே காலத்தில் மேற்கு கரை பகுதியில் PLO அமைப்பு அதிக இடங்களில் வெற்றிபெற்றது.
யாசிர் அரஃபாத்தின் மரணத்துக்கு பிறகு PLO அமைப்பு தொடர்ந்து வலுவிழந்து வந்தாலும், பாலஸ்தீன் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அந்த அமைப்பின் காரணமாகவே ஏற்பட்டது என்பதே நிதர்சனம். உலகளவில் பாலஸ்தீன் என்ற நாட்டை பல்வேறு நாடுகள் ஆதரிக்க PLO-வின் மிதவாத நடவடிக்கையே காரணமாக இருந்துள்ளது. அதன் செயல்பாடுகளே பாலஸ்தீனத்தில் சிறிது காலமாவது அமைதியை கொண்டுவந்துள்ளது.
ஆனால், ஹமாஸின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிரானவை. பதில் தாக்குதல் என்பதே அதன் கொள்கையாக இருப்பதால் இஸ்ரேலுடன் எந்த ஒப்பந்தத்துக்கும் அது மறுக்கிறது. அதனின் ஆக்ரோஷ முகம் காரணமாக சர்வதேச அங்கீகாரம் என்பதே ஹாமாஸ்க்கு கிடையாது. இதனால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவின் பெயரளவுக்கு கூட வளர்ச்சி பணிகள் என்பதே கிடையாது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது பலமுறை தாக்குதல் நடத்தியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அதைவிட வலுவான தாக்குதலை காசா மீது நடத்தியுள்ளது. அதாவது ஹமாஸ் தாக்குதலின் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் அதற்க்கு 100 பாலஸ்தீனியர்கலாவது இஸ்ரேலின் தாக்குதலில் இறப்பது தொடர்ந்து வருகிறது.
அதோடு கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலின் அத்துமீறிய குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இது வன்முறையால் பாலஸ்தீன் மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதையே காட்டுகிறது. இஸ்ரேல் -பாலஸ்தீன் நிரந்தர தீர்வு எதையும் சொல்லமுடியாது என்றாலும், தனது மக்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்து இஸ்ரேல் - பாலஸ்தீன் போராளிகள் என இரு தரப்பாரும் ஒரு உடன்படிக்கைக்கு வருவதே தற்காலிக தீர்வாக இருக்கும்.
முந்தைய பாகத்துக்கு : https://www.kalaignarseithigal.com/politics/2023/10/08/what-is-the-historical-background-of-the-israel-palestine-conflict