பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆம் தேதி என இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் முப்பெரும் விழாவாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் நடைபெறுகிறது.1949-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்தியாவுக்கே முன்னோடி கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தலைவர் கலைஞர் அவர்கள், 'சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன்' என்று சொன்னார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அதற்கும் மேலாக 'சொன்னதை செய்வேன், சொல்லாததையும் செய்வேன்' என்று மகளிருக்கு இலவச பேருந்து பயணம்,இல்லம் தேடிக்கல்வி, புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், உங்களில் ஒருவன், மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டம் , பள்ளிகளில் காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை ஈடில்லா இரண்டாண்டு சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாளெல்லாம் உழைத்து,ஆற்றல் மிகுந்த படைப்புகளால் அரசியல் வரலாற்றில் தனக்கான ஒரு தனி சரித்திரத்தை படைத்து அடையாளம் காட்டியவர் தலைவர் கலைஞர். அத்தகைய தலைவரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்களை முன்வைத்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை
ஓராண்டு முழுவதும் அனைத்து துறைகளிலும் அவரது புகழை எட்டுத்திக்கும் ஒலிக்கசெய்யுமாறு கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தினார்.
"தந்தை பெரியாரின் இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சென்று, ஜனநாயக முறையில் அவற்றை நடைமுறைப்படுத்தத் தனி இயக்கம் கண்டவர் பேரறிஞர் அண்ணா. அந்த இலட்சியங்களை நிறைவேற்ற அண்ணாவுக்குத் துணையாகவும், அண்ணாவுக்குப் பிறகு கழகத்தின் தலைவராகவும் இருந்து நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவர்களின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகளாம் உங்களின் பேராதரவுடன் கழகத்தின் பயணம் உங்களில் ஒருவனான என் தலைமையில் தொடர்கிறது’’என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருக்கிறார்.
தமிழகம் எங்கும் காற்றில் அசையும் கருப்பு சிவப்பான திமுகவின் இருவர்ணக் கொடி வெறும் கொடியல்ல. அது கருப்பும் சிவப்பும் கலந்த ஒவ்வொரு உடன்பிறப்புகளின் உயிரோட்டம் “கறுப்பு நிறம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அடையாளமாகும். . சிவப்பு நிறம் அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் குறியீடாகும். இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். இருண்ட வானில் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன் கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது” என இருவண்ணக் கொடிக்கான விளக்கத்தை எடுத்துரைத்தவர் பேரறிஞர் அண்ணா.
1969ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு அண்ணாவின் முதலாமாண்டு நினைவு நாளில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை முன்னெடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்,ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைகளை முன்னெடுத்து திராவிட முன்னேற கழகத்தை வழிநடத்தினார்.
ஆண்டுதோறும் கழகத்தில் அயராத உழைக்கும் தொண்டர்களை கௌரவிக்கும் விதமாக முப்பெரும் விழாவில் பெரியார்,அண்ணா,பாவேந்தர்,கலைஞர் விருது வழங்கப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும் பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்கும்,அண்ணா விருது - மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கும் கலைஞர் விருது - அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கும் பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்கும்பேராசிரியர் விருது - பெங்களூர் ந.இராமசாமி வழங்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் என்றாலே மக்கள் தூங்கிக்கொண்டிருந்த காலங்களை மாற்றி, திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்கூட்டங்களில் பேசி பேசியே திமுகவை வளர்த்த அனைத்து அணி தலைவர்களும் தொண்டர்களும் நெஞ்சை நிமிர்த்தி 75ஆம் ஆண்டில் இந்த முப்பெரும் விழாவில் கம்பீரத்துடன் அடியெடுத்து வைக்கிறார்கள்.
- வினித்