பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கப்பார்கிறது.
இந்நிலையில், நாட்டின் பல மொழிகளை இந்தி ஒன்றிணைக்கிறது. பிராந்திய மொழிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், மேம்படுத்தவும் இந்தி ஒரு ஊடகமாக இருக்கிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்திற்குத் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள x சமூகவலைத்தள பதிவில், "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.
தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிரப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.