உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. மேலும் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது.
ஆனால் இதை எல்லாம் கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாதத் உத்தரப் பிரதேச மாநிலம் தான் இந்தியாவின் முன்னணி மாநிலம் என பொய் பேசி வருவதைக் கடந்த ஐந்து நாளில் நடந்த இரண்டு சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஒன்று, உத்தர பிரதேச மாநிலம் எட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஆகஸ்ட் 21ம் தேதி பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கடித்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இரண்டாவது சம்பவம், பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - இதைவிட மோசமான ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது என ராகுல் காந்தி எம்.பி கண்டித்துள்ளார்.