அரசியல்

மணிப்பூரில் மானபங்கபடுத்தப்பட்ட கார்கில் ராணுவ வீரரின் மனைவி.. எங்கே பதுங்கியுள்ளார் அண்ணாமலை ?

அண்ணாமலை இப்போது, மூச்சே விடாது தனது எல்லா பொறிகளையும் அடக்கிக் கொண்டு எங்கே போய் பதுங்கியுள்ளார்?

மணிப்பூரில் மானபங்கபடுத்தப்பட்ட கார்கில் ராணுவ வீரரின் மனைவி.. எங்கே பதுங்கியுள்ளார் அண்ணாமலை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு ஒரு அரைக்கால் வேக்காடு அரசியல்வாதியைத் தலைவராக்கினர் முந்திரிக்கொட்டைத்தனமாக செயல்பட்டு அடிக்கடி மூக்குடைபட்டு மூலையில் பதுங்குவதை வாடிக்கையாகக்கொண்டவர் அவர்! அந்த நபரைத்தான் தேடுகிறோம்! மணிப்பூரில் அரங்கேற்றப்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து - அங்கே நடந்த படுகொலைகள், அலங்கோலப் படுத்தப்பட்டு அலறித் துடித்த தாய்மார்கள், இளம் பெண்கள், வைக்கப் பட்ட தீயில் வெந்து கருகிய குடியிருப்புகள், கதறக் கதற மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள்; அதனைத் தொடர்ந்து பார்ப்போர் விழிகளைக் குளமாக்குமாறு வெளியாகிக்கொண்டிருக்கும் வீடியோக்கள், இது குறித்தெல்லாம் வாயையேத் திறக்காத அந்த அண்ணாமலை எங்கே போய் பதுங்கியுள்ளார்! என்றுதான் கேட்கிறோம்!

எதற்கும் பதிலளிக்காது கற்பாறை போன்று நிற்கும் நமது பிரதமரையே பேச வைத்திடும் அளவு குலை நடுங்க வைத்த விவகாரம் ஆயிற்றே! அதை எல்லாம் விடுங்கள். இந்த நாட்டில் எந்த மூலையிலும் நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கு ஒன்று என்றால், அண்ணாமலை எனும் இந்த முன்னாள் போலீஸ் துடித்துத் துவண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி ஒரு கூலிப் படையை சேர்த்துக்கொண்டு போர்க்களத்தில் குதித்து விடுவாரே;அவரைத் தான் தேடுகிறோம்! மனிதர் எங்கே பதுங்கி விட்டார்!. கிருஷ்ணகிரி அருகே விடுமுறையில் வீடு திரும்பியிருந்த இராணுவ வீரர் பிரபுக்கும் அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமுற்ற அந்த இராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்!

இந்தத் தகவல் அறிந்த போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எல்லாரையும் (தி.மு.க. கவுன்சிலர் சின்னச்சாமி உள்பட) கைது செய்தனர். இருந்தும் அப்போது இந்த அண்ணாமலை எப்படி எல்லாம் எகிறிக் குதித்தார்! நாட்டைக் காக்கும் ராணுவ வீரருக்கே இந்த கதியா என்றெல்லாம் பொங்கி எழுந்து போராட்டம் அறிவித்தாரே; அந்த அண்ணாமலையைத்தான் தேடுகிறோம்? எங்கே போய் பதுங்கி தொலைந்துள்ளார்?

இராணுவ வீரர் கொலையுண்டதைக் கண்டித்து மெழுகுவர்த்தி சகிதமும் சில ஓய்வுபெற்ற பா.ஜ.க. ஆதரவு இராணுவ வீரர்களைப் பிடித்து அவர்கள் அங்கும் இங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினாரே; அந்த இராணுவ வீரர்களுக்கு ராணுவ பேட்ஜ், தொப்பி அணிவித்து வேஷம் கட்டி நாடகம் நடத்தினாரே; அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒரு நபர், குண்டு வைப்பது குறித்தெல்லாம் பேசினாரே நினைவிருக்கிறதா?

மணிப்பூரில் மானபங்கபடுத்தப்பட்ட கார்கில் ராணுவ வீரரின் மனைவி.. எங்கே பதுங்கியுள்ளார் அண்ணாமலை ?

அந்தப் பேச்சை அனுமதித்த அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதி அண்ணாமலை எந்தப் பொந்தில் பதுங்கிக் கிடக்கிறார்? ஏன் அவரைத் தேட வேண்டும்? என்ற எண்ணம் பலருக்கு எழலாம்! இந்தியா மட்டுமல்ல: இந்திய எல்லை தாண்டியும் மனிதாபிமான உணர்வு படைத்துள்ளவர்கள் அனைவரும் வலை தளங்களில் வலம் வந்த அந்த வீடியோ பார்த்து பதிவைப் இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். நாட்டின் குக்கிராமங்க ளில் உள்ள தேநீர்கடைகள், பேருந்து நிலையங்கள், அங்காடிகள், இரயில் பயணம் மேற்கொள்வோர். விமான நிலையங்கள் என எல்லா இடங்களிலும் ஆடவர். இளைஞர் பெண்டிர், சிறார் என எல்லா தரப்பினரும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து எப்போதுமே எதற்கும் வாய்திறக்காத மோடியே வாய் திறந்து வருந்தியுள்ளார். ஆனால் அண்ணாமலையின் மூச்சையே காணோமே; எங்கே போய் பதுங்கிக்கொண்டுள்ளார்?

இந்த நாட்டுக்காக தியாகம் செய்யும் இராணுவ வீரருக்கு ஒன்று என்றால், துடித்து வெடித்துக் கிளம்பும் இவரது போராட்ட குணம் எங்கே ஊர் மேயச் சென்றுள்ளது? இன்று நாடெங்கும் பெருந் தீயாகப் பரவி - மக்களைக் கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த மணிப்பூர் சம்பவங்கள் குறித்து அண்ணாமலைக்குத் தெரியுமா? தெரியாதா? இன்று ஏடுகளில், ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டி ருக்கும் செய்திகளில் ஒன்று மணிப்பூரில், கார்கில் போர்க்களத்தில் முன்னணி வீரராக நின்ற ஒரு இராணுவ வீரரின் கதறல்தான்; இன்று இந்த நாட்டை மட்டுமின்றி, உலகையே குலுக்கிக் கொண்டிருக்கிறது. 'வீடியோவில்' பதிவாகி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கார்கில் யுத்தத்தில் களத்தில் நின்று போராடிய இராணுவ வீரரின் மனைவி!

ஜூலைத் திங்களில் கார்கில் போரின் நினைவு தினத்தை இந்தியா அனுசரிக்கும் கால கட்டத்தில்தான், அந்த வீடியோ நாட்டையே குலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இணையதளங்க ளில் பர்கா தத் (Barkha Dutt) தோன்றி, பேசி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வலம் வந்து கொண்டி ருக்கிறது. பர்கா தத் பிரபலமான ஒரு ஊடகவியலாளர் (Television Journalist) என்பதை அண்ணாமலை உட்பட அனைவரும் அறிவர்! அவர் என்.டி.டி.வியில் செய்தியாளராகவும், நெறியாளராகவும் பல காலம் பணியாற்றியவர்! அவர் தற்போது அந்த கார்கில் போரில் முன்கள போர் வீரராகப் பணியாற்றியவரை பேட்டி கண்டு வெளியிட்ட வீடியோ காட்டுத் தீயாக நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் மானபங்கபடுத்தப்பட்ட கார்கில் ராணுவ வீரரின் மனைவி.. எங்கே பதுங்கியுள்ளார் அண்ணாமலை ?

“நான் கார்கில் போரில் நாட்டுக்காகப் போராடியுள்ளேன். ஆனால் எனது மனைவியை என்னால் பாதுகாக்க முடியவில்லை. என்னுடைய மனைவி துகிலுரிக்கப்பட்டு, முழு நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டுள்ளாள்; எனது வலியின் கொடுமை வருணிக்க இயலாதது! நான் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டதாகக் கருதி கதறியழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அரசு சார்பிலோ, காவல்துறை சார்பிலோ யாரும் சந்திக்கவுமில்லை. எதையும் செய்யவுமில்லை. பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் எங்கோ தூரத்தில் உள்ள நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். என்னுடைய மனைவியால் இதுவரை எந்த மருத்துவரையும் சந்திக்க இயலவில்லை; அங்கே எந்த மருத்துவருமே இல்லை; எனது மனைவி மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

இளம் பெண்கள் கூட்டு கற்பழிப்புக்கு ஆளாகியுள்ளனர். நான் நிராதரவாக நிற்கிறேன். ஆயுதம் தாங்கிய குண்டர்கள் எங்கள் வீடுகளுக்கு தீ வைத்து விட்டதால் எங்கள் குடும்பங்கள் வழி தெரியாது அங்கும் இங்கும் ஓடுகின்றன. நான் இந்திய இராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்! நான் பெருமைமிகு இந்தியனாகவே என்னைக் கருதுகிறேன். கார்கில் போரில் களத்தில் போராடிய என்னால் எனது மனைவியை காப்பாற்ற முடியவில்லையே எனக் கூனிக்குறுகிக் கொண்டிருக்கிறேன். எனது மனைவி துகிலுரியப்பட்டு, நிர்வாணக்கோலமாக அழைத்துச் செல்லப்பட்டு மானபங்கம் படுத்தப் பட்டுவிட்டாள்...”

இவ்வாறு அந்த இராணுவ வீரன் அளித்துள்ள பேட்டியை கேட்டவர்கள் எல்லாரும் பதறுகின்றனர்; துடிக்கின்றனர்; இந்த நாட்டினை காக்கும் போர் வீரனை இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த நிகழ்வுகளைக் கண்டு நெஞ்சம் பதை பதைக்கின்றனர்; ஆனால் அன்று ஒரு இராணுவ வீரன் தமிழ்நாட்டில் குடும்பத் தகராறில் கொலையுண்டதற்கு குதித்து, கூத்தாடி அறிக்கை மேல் அறிக்கை விட்டு ஒரு பெரும் நாடகமே நடத்தி முடித்த அண்ணாமலை இப்போது, மூச்சே விடாது தனது எல்லா பொறிகளையும் அடக்கிக் கொண்டு எங்கே போய் பதுங்கியுள்ளார்? நாடு தேடுகிறது! அந்த அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதி எங்கே பதுங்கியுள்ளார்? எப்போது வெளியே வருவாரோ?

banner

Related Stories

Related Stories