மொஹக் மங்கள் என்பவர் இந்தியாவில் பிரபலமான யூடியூப் பிரபலங்களில் ஒருவர். தனது யூடியூப் பக்கத்தில் அரசியல், நாட்டு நடப்பு, மற்றும் சமூக ரீதியிலான கருத்துக்களை பகிர்ந்து வரும் இவரின் பக்கத்தை சுமார் 20 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.
இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவ என்ன காரணம் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். சுமார் 11 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
குஜராத்தில் பெரும் வரவேற்பு மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மோடி வந்தால் ஈயாடுவது ஏன் என்ற கேள்வியுடன் காணொளியை தொடங்கியுள்ள அவர், தமிழ்நாட்டில் பாஜகவை நுழைய விடாமல் தடுக்கும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக விவரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 200 ஆண்டுகால வரலாற்று பின்னணியை முன்வைத்து பேசியுள்ள அவர், இந்தியாவிலிருந்து தமிழ்நாடு எப்படி தனித்து நிற்கிறது என்பதையும் கூறியுள்ளார். இந்தியா முழுக்க அரசு வேலைகளில் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே பார்ப்பனியத்துக்கு எதிரான சிந்தனை பெரும் அளவில் மக்கள் செல்வாக்கு பெறுகிறது.
அப்போது இந்திய அளவில் பிரபலமாக இருந்த காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனரே ஆதிக்கம் செலுத்திய நிலையில், காங்கிரஸ்க்கு மாற்றாக தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதவர் உரிமைக்காக 'நீதி கட்சி' உருவாக்கம் பெறுகிறது என்பதை கூறியுள்ள அவர், பின்னாளில் பெரியார் தலைமையில் 'நீதி கட்சி' திராவிடர் கழகமாக மாறி எப்படி தமிழ்நாட்டின் பண்பாட்டு தளத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதையும் கூறியுள்ளார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இந்தி திணிப்பு எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு ஆகியவற்றை பேசும் அவர், இந்தியாவிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கொண்டுவந்த இந்தி திணிப்பை எப்படி தமிழ்நாடு எதிர்த்து நின்றது என்பதையும், தமிழையும், தமிழின் தனித்தன்மையையும் முன்வைத்து எழுந்த போராட்டங்களையும் கூறியுள்ளார்.
அப்போது தமிழ்ப்பெயரை நீக்கி ’டால்மியாபுரம்’ என்கிற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் தலை வைக்க துணிந்து பின் தமிழ் நாட்டின் பெரும் அரசியலறிஞராக உருவெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரின் போராட்டம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
ராஜாஜி உள்ளிட்டோரின் பார்ப்பனிய சிந்தனைக்கு தமிழ்நாடு எப்படி பெரியாரின் தலைமையில் எதிர்த்து திராவிடராக திரண்டது என்பதையும் அறிஞர் அண்ணாவின் எழுச்சியையும் தமிழ்மொழிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த எழுச்சி காரணமாக தமிழ்நாட்டில் வளமாக இருந்த காங்கிரஸ் எப்படி தனது வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் பாஜகவை குறித்து பேசியுள்ள அவர், பாஜக எப்படி தமிழ்நாட்டுக்கு நேரெதிரான கொள்கைகளை கொண்டிருக்கிறது என்கிற உண்மையை முதலில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாடு-ஒரு மொழி என்ற பாஜகவின் கொள்கையை தமிழ்நாடு மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திய அவர், பாஜகவின் இந்தி மொழி திணிப்பு, உயர்சாதி ஆதிக்கம், மதவாதம், ஒற்றை இந்தியா போன்ற எல்லாமுமே தமிழ்நாட்டின் வரலாற்றுக்கே எதிரானவை என்பதையும் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு, நீட், அனிதா மரணம் போன்றவை பாஜகவை எப்படி தமிழ்நாட்டில் இருந்து அந்நியபடுத்தியது என்பதைு தனது காணொளியில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கைகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலேயே அரசியல் பேச வேண்டிய துயரத்தில் அக்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் விவரித்துள்ளார். பாஜகவின் இந்த இரண்டு விதப் பேச்சுகளை எடுத்துக்காட்டியுள்ள அவர், இதனை தமிழ்நாடு மக்கள் ஏற்கவில்லை என்பதையும் கூறி இதுபோன்ற காரணத்தால் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என்று கூறி தனது காணொளியை நிறைவு செய்கிறார்.