கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.
கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் தி.மு.க.வின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.
அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். மேலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் டாப் 5 அதிரடிகளை இப்போது பார்க்கலாம்..
எய்ம்ஸ் செங்கல் :
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் என்று பேச்சை எடுத்தாலே அதில் முதலில் பேசப்படுவது அவரின் எய்ம்ஸ் செங்கல் அரசியல்தான். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக மற்றும் பாஜகவை ஒற்றை செங்கல்லை வைத்து தமிழகம் முழுவதும் கலங்கடித்தவர்தான் உதயநிதி ஸ்டாலின்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டவந்து விட்டோம் என்று ஏமாற்றித்திரிந்த அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை அதே எய்ம்ஸ் செங்கல்லை வைத்து தகர்த்தார் உதயநிதி ஸ்டாலின். அதோடு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதையும் இதன் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு புரிய வைத்தார்.
பொதுமக்களை தாண்டி அதிமுக கட்சி தொண்டர்களிடையே கூட உதயநிதியின் இந்த பிரச்சாரம் நன்கு எடுபட்டது. அதோடு உதயநிதி பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றாலே எதிர்க்கட்சிகள் மனதில் பயத்தை விதைத்ததில் பெரும்பங்கு எய்ம்ஸ் செங்கலுக்கு உண்டு.
காரை எடுத்து கமலாலயம் மட்டும் போய்விடாதீர்கள் :
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்லும் சிறப்பான அரசியலை செய்து வருகிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களோடும் நல்ல உறவில் இருந்து வருகிறார். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தனது காரை உரிமையோடு எடுத்துச்செல்லலாம் என்று கூறியதோடு அதிலும் தனது அரசியல் நிலைப்பாட்டை சேர்த்து அதகளப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டமன்ற கூட்டத்தொடரின்போது வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தனது கார் என நினைத்து அங்கிருந்த உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். அப்போது பாதுகாவலர்கள் தவறை அவருக்கு சுட்டி காட்டிய நிலையில், "ஓ அந்த வண்டியா சாரி..ஏன்பா நம்ம வண்டிக்கு கரெக்டா கூட்டிட்டு போக மாட்டீங்களா " என பழனிசாமி கூறியிருப்பார்.
இது குறித்து அறிந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், "நான்கூட மூன்று நாளைக்கு முன்னர் உங்க கார்ல ஏறப்போய்டேன். அடுத்த முறை நீங்கள் தாரளமாக என்னுடைய காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், தயவுசெஞ்சு கமலாலயம் சென்று விடாதீர்கள்" எனக் கூறி அதிமுக எங்க பங்காளிகள்தான் ஆனால் பாஜக எங்க எதிராளிகள் என்பதை அழுத்தமாக கூறியிருப்பார்.
காலில் விழுந்ததை மறக்கவேண்டாம் :
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை திமுக எதிர்கொண்டது.
அந்த தருணத்தில் அதிமுக தலைவர்களான பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர். சட்டமன்றத்தையே முடக்கப் போகிறோம் என்றெல்லாம் பழனிசாமி பேசிவந்தார். இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பாருங்கள்.
திமுக கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். மீண்டும் தேர்தல் வைத்தால் ஒரு சீட்டு கூட அதிமுகவுக்கு கிடைக்காது. இரண்டு அமாவாசைகளுக்கும் புரியமாட்டேங்குது. இந்த திமுக ஆட்சி மக்களால் உருவாக்கப்பட்டதே தவிர கூவத்தூர் போய் சசி காலில் விழுந்து ஆட்சி அமைத்தது மறந்து விடவேண்டாம்” என திமுகவுக்கே உண்டான பாணியில் பதிலடி கொடுத்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் :
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது குறித்து செய்தி வெளியானதும் தமிழகத்தின் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தலைமையிலான திமுக இளைஞரை தமிழ்நாடு முழுக்க பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம்.
அது எங்கள் மாநில உரிமை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது" என ஆக்ரோஷமாக பேசியதுடன் "நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம்" எனக் கூறி டெல்லி பாஜக தலைமையையே அதிரவைத்தார்.
மோடிக்கு பதிலடி :
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி அதிமுக -பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழகம் வந்தார். அப்போது தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் மோடிக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி இணையத்தில் வரவேற்ப்பை பெற்றது. மோடியின் அரசியல் பயணம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், " பாஜகவில் அத்வானினு ஒருத்தர் இருந்தார். ரத யாத்திரை போய் அடுத்த பிரதமர் என்று பேசப்பட்டார்.
ஆனால், இப்போ அத்வானி எங்க இருக்கார்னு யாருக்குத் தெரியும்? யாருக்கும் தெரியாது. ஓரங்கட்டிட்டாங்க. யஷ்வந்த் சின்ஹானு ஒருத்தர் இருந்தாரு… மோடியோட டார்ச்சர் தாங்காம வெளியவந்துவிட்டார். வெங்கய்ய நாயுடுனு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் அடுத்த பிரதமர்னாங்க.. அவரையும் ஓரங்கட்டிட்டாங்க" என மோடியின் அரசியல் குறித்து பேசி அதிரவைத்தார்.