"2 போலிசும் - நல்லாயிருக்கும் மாநிலமும்"!
தமிழ்நாட்டில் இரண்டு முன்னாள் போலிஸ் புகுந்து அடிக்கும் கொட்டம் அளவு கடக்கிறது. 'நாலு போலிசும் நல்லாயிருந்த ஊரும்' என்ற திரைப்படம் ஒன்று, சில வருடங்களுக்கு முன் வெளியானது! அமைதியான கிராமம்: அங்கு மக்களெல்லாம் ஒன்றாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! அந்த ஊரில் இருந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய நாலு போலிசுக்கும் எந்த வேளையும் இல்லாத அளவு நிலைமை இருந்தது! 'தேவை இல்லாத ஊரில் காவல் நிலையம் எதற்கு' என்று எண்ணிய அரசு அந்தக் காவல் நிலையத்தை மூடி, அந்த போலிசாரை வேறு ஊருக்கு மாற்றிட திட்டமிடுகிறது.
இது தெரிந்ததும் மாற்றலை விரும்பாத காவலர்கள் ஊருக்குள் புகுந்து கிராமத்தில் பிரச்சினைகளை உருவாக்கி, குழப்பங்களுக்கு இவர்களே 'எரு' போட்டு அந்த கிராமத்தின் மக்களிடையே பிளவை உருவாக்குகின்றனர். ஒன்றாயிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள தூபமிடுகின்றனர். இப்படிச் செல்கிறது அந்த திரைப்படத்தின் கதை!
இன்று தமிழ்நாட்டில் இரண்டு முன்னாள் போலிசின் செயல்களைப் பார்த்தால், படத்தில் வரும் அந்த நான்கு போலிஸ்கள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றனர்! தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னாள் போலிஸ் ஒன்றிய அரசாலும், இன்னொரு முன்னாள் போலிஸ் ஒன்றிய அரசை ஆளும் பா.ஜ.க.வினாலும் அனுப்பப்பட்டுள்ளனர்!
தமிழ்நாட்டை குழப்பி, குழம்பிய குட்டையி லாவது 'தாமரை'யை மலரச் செய்து - மேலிடத்து நன்மதிப்பைப் பெற்றிட துடியாய் துடிக்கின்றனர் இருவரும்! தங்களது முயற்சிகள் எல்லாம் முனை முறிந்துபோவதால் பாவம் துடிக்கின்றனர்; வெடிக்கின்றனர்! கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை வைத்து கழக ஆட்சிக்கு அவப்பெயர் உருவாக்கிட இரண்டு போலிசும் தொடை தட்டி புறப்பட்டனர்!
அய்யகோ.. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஒரு முன்னாள் போலிஸ் முதலைக் கண்ணீர் வடித்தது; இன்னொரு முன்னாள் போலிசோ, தான் வகிக்கும் பதவி என்ன என்பதை மறந்து, என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகாம்)வுக்கு இந்த கார் வெடிப்பு வழக்கை மாற்ற தமிழக அரசு காலதாமதம் செய்துவிட்டது, இதனால் பயங்கரவாத சதித்திட்டத்தின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புண்டு என வாய் புளித்ததோ, மங்காய் புளித்ததோ என முழுவிபரத்தை மறைத்து பொது மேடையில் தமிழக அரசு மீது பழிசுமத்திட முற்பட்டார்! இந்தச் சம்பவம் தொடர்பாக, இந்த இரண்டு முன்னாள் போலிசுகளும் பேசிய பேச்சுக்களும் நடந்து கொண்ட முறையும் அவர்கள் செயல்பாடுகளின் உள்நோக்கத்தை வெளிக்காட்டியது!
இந்த விவகாரத்தில் இந்த இரண்டு போலிசுகளும் காட்டிய வேகமும், நடந்து கொண்ட முறையும், அமைதிப்பூங்காவாக விளங்கிடும் நாட்டில் குழப்பத்தை உருவாக்கிட, அதாவது ஒற்றுமையுடன் இருந்த ஊரில் குழப்பத்தை உருவாக்கிய திரைப்படத்தில் வந்த நான்கு போலிசோடு ஒப்பிடும்படியாகவே இருந்தது! அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஒரு போலிசும், அரசு சரியான முறையில் இதனைக் கையாளவில்லை எனும் தோற்றத்தை உருவாக்கிட மற்றொரு போலிசும் போட்ட திட்டங்கள் அனைத்தையும், கருநாடக மாநிலத்தில் நடந்த ஆட்டோ வெடித்த விவகாரமும், அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அதனைக் கையாண்ட முறையும், அதுகுறித்து வந்த செய்திகளும்; தவிடு பொடியாக்கி விட்டன!.
கார் சிலிண்டர் வெடிப்பால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவரான முன்னாள் போலிஸ் கூக்குரலிட்டது. கருநாடகாவில் ஆட்டோ குக்கர் வெடித்ததே, அதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாக விசாரணை வேகம் எடுக்கிறதே, அப்படியானால் அங்கும் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதா? கேள்விகள் எழத்தொடங்கின.
தமிழக அரசு என்.ஐ.ஏ.வுக்கு வழக்கை ஒப்படைக்க தாமதப் படுத்தி விட்டது; அதனால் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஆளுநர் போலிஸ் கூறியதே; கருநாடகாவில் அங்கே ஆளும் பா.ஜ.க. அரசு ஏறத்தாழ ஆறு நாட்கள் சென்ற பின்தான் அந்த ஆட்டோ வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது! அங்கே முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப் பில்லையா? என எழுந்த கேள்விக்கு ஆளுநர் போலிஸ் வாயையே திறக்கவில்லை!.
போட்ட திட்டமெல்லாம் புஸ்வாணம் ஆனதால் புழுங்கிப் போன போலிஸ் இரண்டும் நொந்து நூலாகின. இப்போது, திடீரென இரண்டு போலிசுகளும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தியுள்ளன! கடந்த ஜூலை மாதம் 28ந் தேதி சென்னையில் தொடங்கிய "செஸ் ஒலிம்பியாட்" நிகழ்ச்சியில் "சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அதாவது, ஏறத்தாழ 1,700 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது, அதன் துவக்க விழாவுக்கு வந்த பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவரான முன்னாள் போலிஸ், தமிழக ஆளுநராக உள்ள மற்றொரு முன்னாள் போலிசிடம் புகார் தந்துள்ளது!
நமக்கு எழும் ஐயமெல்லாம்; ஒரு சராசரி அறிவு படைத்தவனுக்கு உள்ள தெளிவுகூட ஐ.பி.எஸ். படித்துள்ள இந்த பிரகஸ்பதிக்கு எப்படி இல்லாமல் போனது என்பதுதான்? பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி என்றால், அதனை பிரதமரின் பாதுகாப்பு அலுவலகம், தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பி அதற்கான விளக்கங்களைக் கேட்டிருக்கும்!
பிரதமர் அலுவலகம்கூட அதனை ஆளுநருக்கு அனுப்பி, அரசிடம் விளக்கம் கேட்டு பதிலளிக்கக் கேட்காது! இந்த அடிப்படை தெளிவுகூட இல்லாது, செயல்படும் ஒருவர் எப்படி ஒன்றியத்தினை ஆளும் கட்சியில் தமிழகத் தலைவராக இருக்கிறாரோ?
"எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே" - என்று பல ஒரிஜினல் பா.ஜ.க. தலைவர்கள் பொறுமிக் கொண்டிருப்பது மட்டுமல்ல; அண்ணாமலை போன்ற அரைக்கால் வேக்காட்டைப் பிடித்து தங்கள் தலையில் கட்டிய தலைமையை நொந்து கொண்டு ஒதுங்கிக் கொண்டுள்ளனர்!
சரி அதுபோகட்டும், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு நடந்து ஏறத்தாழ ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன; இப்போது வந்து கூறுகிறீர்களே! அதற்கு ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய (ஒன்றிய) அரசு சார்பில் மாநில அரசுக்கு எழுத்துப் பூர்வமான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மாநில புலனாய்வுத் துறை எழுத்துப்பூர்வமாக போவிஸ் சூப்பிரண்டெண்டுகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தின் நகல் இருக்கிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை!. நமக்கு எழும் எண்ணமெல்லாம் இவர் ஒரிஜினல் போலிசா அவர் பெற்ற ஐ.பி.எஸ். பட்டம் ஒரிஜினலா,
என்பதுதான்! இந்த ஐயம் கூட ஏன் எழுகிறது என்றால், ஒரு சாதாரண போலிஸ் கான்ஸ்டபிளுக்குக் கூடத் தெரிந்த விபரங்கள்; ஐ.பி.எஸ். படித்ததாகக் கூறும் உயர் அதிகாரியாக, சில காலங்கள் பணியாற்றிய இவருக்கு எப்படித் தெரியாமல் போய் விட்டது! மத்திய (ஒன்றிய) அரசு தரப்பில் மாநில அரசுக்கு எழுத்துப்பூர்வமான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில புலனாய்வுத் துறை எழுத்துப்பூர்வமாக போலிஸ் சூப்பிரண்டெண்டன்டு களுக்கு அணுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தின் நகல் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்! அவர், அப்போது செய்தியாளர் களுக்கு எந்தவித ஆதாரமும் தராது நழுவி விட்டார். மறுநாள் ஒரு நாளேட்டில், 'அண்ணாமலை குறிப்பிட்ட ஆதாரம்' என்று ஒரு சுற்றறிக்கையின் படம் வெளிவந்துள்ளது! அண்ணாமலையின் பிதற்ற லுக்கு வலுவூட்டுவதாக நினைத்து அவரது முகத்தில் தார்பூசியுள்ளது).
அந்த ஏடு ஆதாரமாக வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றிய அரசு சார்பில் மாநில அரசுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல; மாநில காவல் துறை உளவுப் பிரிவின் கூடுதல் இயக்குநர், அனைத்துக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், அவர்கள் செய்திட வேண்டிய பணிகளையும் அவர்களது பொறுப்பில் உள்ள பாதுகாப்புக் கருவிகளின் செயல்பாடுகள் சீரிய முறையில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும் அறிவுறுத்தி வழக்கமாக அனுப்பப்படும் கடிதம்!
அந்த ஏடு வெளியிட்ட கடிதத்தில் கூட அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுப்படி ஒன்றிய அரசு சார்பில் மாநில அரசுக்கு எழுதப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்பட வில்லை. மாநில அரசின் காவல் துறையே பிரதமர் வருகையின் போது, "மெட்டல் டிடெக்டர் களில் சில சரியாக வேலை செய்து உள்ளதா என சோதித்த நிலையில், ஒரு சில சரியாக இல்லாததைக் குறிப்பிட்டு, அது போன்றவைகளை அகற்றி, அவற்றை சரி செய்திடவோ அல்லது புதியது வாங்கிடவோ, உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்பதை அந்த சுற்றறிக்கையை சரியாகப் படித்தால் புலப்படும்! அந்த சுற்றறிக்கையில் எங்குமே அத்தகைய மெட்டல் டிடெக்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை ஐ.பி.எஸ். தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் அண்ணாமலை எழுதியிருப்பார் என்று எண்ணுகிறோம்.
அண்ணாமலை தனது அரைகுறைத்தனத்தை விட்டு விட்டு, ஒழுங்காக சிந்தித்து அரசியல் நடத்த முன்வர வேண்டும். ஒன்றிய அரசு மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தை ஆதாரமாகக் காட்டிட வேண்டும்!
அதை விடுத்து, தமிழகத்தில் அரசியல் நடத்த இரண்டு போலிசும் சேர்ந்து நாடகம் ஆட நினைக்க வேண்டாய்! திரைப்படத்தில் காட்டப்பட்ட ஊர் மக்கள், அப்பாவி மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள். ஆனால், தமிழக மக்கள் பகுத்து உணரும் பக்குவ மிக்கவர்கள். தமிழ் மண் அரசியலில் பண்படுத்தப்பட்ட மண்; உணர்வீர், தெளிவீர்.
- சிலந்தி