ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!
பலருக்கு 'மைக்மேனியா' - இன்னும் சிலருக்கு ‘கேமரா மேனியா' என்பார்கள்! அதாவது, கேமராவில் முகத்தைக் காட்ட வேண்டும், மைக்கில் பேச வேண்டும் எனும் 'மேனியா' - அதாவது ஒருவித மனவியாதி சிலருக்கு அதிகம் உண்டு! அத்தகைய மனநோய் நமது தெலுங்கானா ஆளுநர்; மன்னிக்கவும் அவரை ஆளுநராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை; அவரும் 'மதியாதார் வாசல் மிதியேன்' - என்ற முறையில் அங்கு அதிகம் செல்வதைத் தவிர்த்து இப்போதெல்லாம் புதுச்சேரி மாநிலத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!
பெரியவர் ரங்கசாமியும், முதலமைச்சர் நாற்காலி இருந்தால் போதும், என்ற நிலையில் மனதிருப்தி கொண்டு பெட்டிப் பாம்பாய்' அடங்கிக் கிடக்கிறார். ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரியில் யாரையும் எதிர்த்து அரசியல் நடத்த இயலவில்லை; தெலுங்கானாவில் வாயைத் திறக்க முடியவில்லை! அவர்களை மிரட்ட இவர் முறத்தை எடுத்தால்; தெலுங்கானா ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து மிரட்டி ஓடஓட விரட்டுகிறார்கள்!.
தெலுங்கானா அரசுக்கு 'செக்' வைக்க தமிழிசையை அனுப்பிய ஒன்றிய பா.ஜ.க. அரசு அங்கே ஆளுநர் தமிழிசை படும் பாட்டைப் பார்த்து கைபிசைந்து நிற்கிறது! "எனக்கு ஆளுநருக்குரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை. குடியரசுத் தின விழாவில் கொடி ஏற்ற அழைப்பு இல்லாததால், நான் எனது ராஜ்பவனிலேயே கொடியேற்றி, எனக்கு நானே கொண்டாடிக் கொண்டேன், 'கவர்னர் உரை' ஆற்றக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை ..." - எனப் போகுமிட மெல்லாம் புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்; ஆளுநர் தமிழிசை!
தெலுங்கானாவுக்கு அவரை ஆளுநராக அனுப்பிய ஒன்றிய அரசோ, அம்மையாரின் கதறலுக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை! ஆளுநர் அம்மையாருக்கு ஆதரவாக தெலுங்கானா அரசினை பகைக்க நினைத்தால் - ஒட்டுமொத்த தெலுங்கானாவும் பற்றி எரியும்; பா.ஜ.க. என்ற பெயரில் யாரும் நடமாட முடியாத நிலை உருவாகி விடும்; என்பதெல்லாம் ஒன்றிய அரசுக்கு அதன் புலனாய்வுத் துறை தகவல் அளித்திருக்கும்! வீண் வம்பை விலைக்கு வாங்க விரும்பாத ஒன்றிய அரசு அம்மையார் அலறலுக்கு செவிசாய்க்கவில்லை!
இதை எல்லாம் அறியாது ஆளுநர் தமிழிசை ஒன்றிய அரசு பின்னால் இருப்பதாகக் கருதி பிதற்றுகிறார்! ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதுகூட புரியாது, தமிழ்நாட்டின் ஆளுநர் ரவிக்கு இவர் வக்காலத்து வாங்கி, பிரபல தொலைக்காட்சியின் விவாத மேடையில் தோன்றி ஆவேசமாக பேசியுள்ளார். அவரது பேட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் அவர் எந்த அளவு தெலுங்கானாவில் காயப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக்கியது, ஆளுநர் பதவியில் இருந்தாலும் அதற்கான அதிகாரங்கள், நடைமுறைகள் போன்றவை குறித்த அறியாத்தனம் அவரது பேட்டியில் பலநேரங்களில் பளிச்சிட்டது!
விபரம் அறிந்தவர்கள் ஆளுநர் தமிழிசையின் பேட்டியைப் பார்த்த போது, 'குருவித்தலையில் பனங்காய்' என்ற உதாரணம் பலரது எண்ணத்திலும் எழுந்திருக்கக்கூடும். முதலில் அவர் தமிழ்நாட்டு அரசியலில் வேறு ஒரு மாநில ஆளுநராக இருந்து தலையிடுவதே தவறு! இதுபோன்ற ஆளுநர்கள் தலையீட்டால் குழப்ப நிலை உருவாகும் என்ற நோக்கில், ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்கக் கூடாது எனும் நடைமுறை பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடைமுறையின் தாத்பர்யத்தை உணராமல், நான் தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன், தேவைப்பட்டால் வாலை நுழைப்பேன் என்றெல்லாம் பேசி வருகிறார்! தமிழ்நாட்டுக்கு என ஒரு ஆளுநர் இருக்கும் போது - அவரது எல்லைக்குள் ஏன் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் இங்கு மூக்கை நுழைக்கிறார் என்ற கேள்வியின் நியாயத்தை உணராது, அடிக்கடி தமிழ்நாட்டின் விவகாரங்களில் தலையிடுகிறார். தமிழ்நாட்டு ஆளுநர் ரவி விபரம் தெரியாதவர் போல அவருக்காக இவர் பேச முற்படுகிறார்.
தனது இத்தகைய எல்லை தாண்டி ஆதிக்கம் செலுத்த நினைக்கும் செயல் தமிழக ஆளுநர் ரவியை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை எண்ணாமல், வாரண்ட் இன்றி ஆஜராகி, தனது அறியாமையை அவரே வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்! ஆளுநர்கள் 'ரப்பர் ஸ்டாம்ப்' தான் என்கிறார்களே என்று நெறியாளர் கேட்டபோது, அவர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல; இரும்புக்கரங்கள் ( Iron hand ) என்று வாதிடுகிறார்.
இந்த ஆளுநர்களின் நியமன உத்தரவில் கையெழுத்திடும் குடியரசுத் தலைவரையே 'ரப்பர் ஸ்டாம்ப்' என்று குறிப்பிட்டு, அதனை ஒட்டிய வாதப் பிரதிவாதங்கள் இன்றுவரை நடந்து கொண்டிருப்பதை அம்மையார் அறிந்திருப்பார் எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு அரசை பொறுத்தவரை அரசியல் சட்டத்தை மதித்து ஆளுநருக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதையை வழங்கி வந்துள்ளது. ஆளுநர் பதவி ஏற்பு விழாவிலிருந்து மற்ற மற்ற நிகழ்வுகளில், அவர் அவருக்கென வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செயல்பட்டபோது, அவருக்கு எதிராக யாரும் எந்தக் கருத்தும் தெரிவித்ததில்லை!
அரசு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றும் போது, அதனை விரைந்து செயல்படுத்த முடியாது - தடுத்திடும் வகையில் ஆளுநர் செயல்பட்டபோதுகூட, தமிழக முதலமைச்சர், அமைச்சர்களோடு சென்று பலமுறை சந்தித்து விரைவுபடுத்தக் கோரியுள்ளார்! சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, முக்கிய எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி. தவிர இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்களை எல்லாம் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஒன்றே ஆளுநர் எந்த நோக்கில்பயணிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டவில்லையா?
234 உறுப்பினர்கள் ஆதரித்து நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில், ஆளுநரின் ஒப்புதல் தாமதப்படுத்தப்படுகிறது. அதாவது, பா.ஜ.க. வின் 4 உறுப்பினர்கள் சார்பில் ஆளுநர் செயல்படுகிறார்; அவர்கள் ஏற்காத தீர்மானத்தை தன்னால் ஏற்றிட இயலாது என்று காட்டிடும் வகையில் ஆளுநர் செயல்படத் தொடங்கினால், இந்திய ஒன்றியம் ஏற்றுள்ள ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் எல்லாம் கேலிக்கூத்தாகக் கருதப்படாதா?
எல்லை தாண்டியும், பேச்சில் எல்லை மீறியும் பேசிடும் ஆளுநர் தமிழிசைக்கு ஒரு ஆளுநரின் எல்லை எது என்பதற்கு அவர் சுலபமாகப் புரிந்து கொள்ள ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்! சட்டமன்றங்களில் ஆளுநர் உரை நிகழ்த்தப்படுகிறதே அது என்ன ஆளுநரின் சொந்தக் கருத்தைக் கூறிடும் உரையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் அவர் படித்திட முடியும்! அது ஒன்றே ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது என்பதை தெளிவாக்கிடும்.
கேரளத்தில் அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளுநர் உரையின் போது, குடியுரிமை சட்டத்தை எதிர்த்திடும் கேரள அரசின் நிலைப்பாட்டைப் படிக்கும் போது, இந்த விவகாரத்தில் தனக்கு உடன்பாடு இல்லாவிடிலும், முதலமைச்சர் பினராயி விஜயனின் விருப்பத்தினை மதித்திடும் வகையில், அந்தப் பகுதியை படிப்பதாகக் குறிப்பிட்டதே பெரும் சர்ச்சைக்குள்ளானதை அவர் அறிவார் என்று எண்ணுகிறோம்.
"அரசின் நோக்கத்துக்கு எதிராக ஒரு புதிய கருத்தை தனது மனநிலைக்கு ஏற்ப மாற்றிட முடியாது. மாநிலத்தின் ஆட்சித் தலைவர் என்ற முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எழுதித் தந்துள்ள அதன் எதிர்கால நோக்கத்தின் ஆவணத்தைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும்” என உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஞானந்த் சிங் தெரிவித்த கருத்தையும் அன்றைய பிரபல ஆங்கில ஏடு 'இந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற விஷயங்களில், அதாவது ஆளுநருக்காக தயாரித்து தரப்பட்ட ஒரு உரையில் ஆளுநர் தனது பாரபட்ச கருத்துக்களை திணிக்க முடியாது. ஆளுநரின் அதிகாரம் அரசியலமைப்பில் தெளிவாக உள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல் நாளில் பேசும்போது, ஒரு குறிப்பிட்டப் பிரச்சினையில் ஆளுநர் தனது சொந்த கருத்தை வாசிப்பது விதிகளுக்கு உட்பட்டதல்ல (அரசியலமைப்பில்). அதற்கான விதிகள் தெளிவாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, முன்னாள் மக்களவை செகரட்டரி ஜெனரல் ஆச்சாரி இதுகுறித்து கருத்தறிவிக்கையில் மரபு படியும், அரசியல் சட்டத்தின்படியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் படிக்க வேண்டும். அந்தப் பேச்சில் அவர் இடைச்செருகல் செய்தாலும், அது பதிவில் ஏறாது என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டம் ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் தந்திருப்பது போல பேட்டியளிக்கும் திருமதி தமிழிசை இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கவர்னர் பெயரால் உள்ள உரையிலேயே தன் கருத்தைத் திணிக்க இயலாது எனும்போது, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசுவதும், மைக்கும், கேமராவும் கிடைத்து விட்டது என்பதால் இரும்புக்கரம்', 'துரும்புக்கரம்' என வீராவேசம் பேசுவதையும் நிறுத்தி விட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசோடு ஒத்துழைத்து, மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல் நடத்தாமல் - ஆக்கப்பூர்வ அரசியலை நடத்திட ஆளுநர்கள் முனைப்பு காட்டிட வேண்டும்!
தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சினையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக் கூடாது! உங்களது எல்லை தெலுங்கானா! அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால், தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள்! பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள்; எரிமலைகள் பொறுமையாகத்தான் இருக்கும்; வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!