பொய்யான தகவலை உண்மை என நம்பி, அதைப் பரப்பிய பத்மபிரியாவுக்கு தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் சீட் கொடுத்த நிலையில், அவர் தற்போது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா குறித்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே போகர் என்பவர் பாடல் எழுதியுள்ளதாக பரவிய தகவலை உண்மை என நம்பி அதுகுறித்து பெருமிதத்துடன் வீடியோ வெளியிட்டு பலத்த கிண்டலுக்கு உள்ளானவர் பத்மபிரியா.
அவரை மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளராக அறிவித்தார் கமல்ஹாசன். இந்நிலையில், செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா, இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், சாதியை ஒழிக்க இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
பத்மபிரியா அளித்துள்ள பேட்டியில், “ஒரு காலத்தில் சில சாதியினருக்கு சமமான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இன்றைக்கு சமூகத்தில் அனைவருமே சமமாக, சமமான கல்வி வாய்ப்புகளோடு, நன்றாக வாழ்கிறார்கள். எனவே, தற்போது இந்த சாதிய அமைப்பு நமக்குத் தேவையில்லை. திறமை இருந்தால் படித்து முன்னேறலாம்.
உயர்சாதி மக்கள் பலர் திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். திறமையே இல்லாத பலர் இட ஒதுக்கீட்டால் மட்டுமே வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எப்போதோ கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை இன்றும் மாற்றாமல் இருப்பது ஏன்?
மக்களிடையே சாதிய பாகுபாட்டை ஒழிக்க, சாதி எனும் பிரிவை நீக்க வேண்டும். அதிக மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு உயர்சாதியினர் என்பதற்காக வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் அது சமத்துவம் இல்லை” எனக் கூறியுள்ளார்.
அவரது கருத்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இட ஒதுக்கீடு பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாதவர் வேட்பாளரா என பலரும் அதிர்ந்துள்ளனர்.