விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற என்ன வழி உள்ளதோ அனைத்து சித்து விளையாட்டுகளும் கையாளப்படும்.
நம் வீட்டுக் கதவை தி.மு.க.வினர் தட்டினால் தி.மு.க.வினரின் வீட்டுக் கதவை உடைத்து நொறுக்க வேண்டும். இதுதான் நமது கொள்கை எனவும் எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறையைத் தூண்டும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தில் முதன்மை செயலாளர் சரவணனை சந்தித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வன்முறையை தூண்டும் விதமாக பேசி இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்காது என்று ஒரு அமைச்சரே ஒப்புக்கொள்கிறார், இதற்கு தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
உடனடியாக ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட வேண்டும்; ஒரு அமைச்சரே இவ்வளவு கேவலமாகப் பேசி இருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் என்று கூறினார். மேலும், தி.மு.க-வை பொறுத்தவரை இந்த உள்ளாட்சி தேர்தலை நல்ல முறையில் நடத்தவேண்டும் என்று எண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார்.