பா.ஜ.க அரசு சிறுபான்மையினர் மீதும், தலித் மக்கள் மீதும் கும்பல் படுகொலையை நிகழ்த்துகிறது. மேலும், குறிப்பிட்ட மதத்தின் பெயரைப் பயன்படுத்தி அதிக அளவில் வன்முறையை நடத்தி வருகிறது என ஜனநாயக அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கும்பல் படுகொலை, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்பச் சொல்லி தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்து ராஜஸ்தான் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு பதிலளித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “பசுவின் பெயராலும், ஜெய் ஸ்ரீ ராம் என கூறச்சொல்லியும் அப்பாவி மக்கள் மீது கும்பல் தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினரும் உச்சநீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்தும் தடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, இந்து மதத்தின் கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தி அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
பா.ஜ.க-வினர் ஸ்ரீராம ஜெயத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இந்துக் கடவுள்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-விற்கு சொந்தம் கிடையாது. மேலும் மக்கள் மத்தியில் அமைதியின்மையையும், வெறுப்பையும் உருவாக்கும் வகையில் பா.ஜ.க-வினர் கோஷத்தை எழுப்பி வருகின்றனர். அது நல்லதல்ல” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.