பா.ஜ.க ஆட்சியில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது தான் அதிக அளவில் தாக்குதல் அரங்கேறுகிறது. இதை தடுக்கவேண்டிய மத்திய பா.ஜ.க அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18ம் தேதியன்று தப்ரிஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். அதனையடுத்து பீகாரில் ஜூலை 2ம் தேதி திருட வந்ததாக கூறி இளைஞர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி அடித்துக் கொன்றனர். மேலும் அதே பீகாரில் ஜூலை 19ம் தேதி கன்றுகுட்டிகளை திருடவந்ததாக கூறி 3 பேரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.
இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்களால் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் பெரும் அச்ச நிலையை அடைந்துள்ளனர். இதனைக் கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு கால்பே ஜாவத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “தலித்துகள், பழங்குடிகள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் சட்டத்துக்கு உட்பட்டு துப்பாக்கி உரிமங்களை எப்படி பெறுவது என்பதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மேலும், தாங்கள் ஆயுதப் பயிற்சி வழங்கப் போவதாக சிலர் தவறான செய்திகளைத் திரித்து எங்கள் மீது பலி சுமத்துகின்றனர். அது தவறு. எங்களை தற்காத்துக் கொள்ளவே இந்த கோரிக்கை வைத்துள்ளோம். மதத்தின் பேரிலான வன்முறைகளை தடுக்க அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுத்தால் அதுவே எங்களுக்குப் போதும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் இந்த அறிவிப்பு, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், இன்றைக்கு தலித்துகள், பழங்குடிகள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும், அச்சம் நிறைந்த மனநிலையுடன் வாழ்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.