நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறை மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது பா.ஜ.க. தேர்தலில் விடுபட்ட மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக மோடியும் அமித்ஷாவும் பல்வேறு சதுரங்க ஆட்டங்களை ஆடி வருகின்றனர். இதனால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ஆபரேஷன் கமலா மூலம் சமயம் பார்த்து, தூண்டி போட்டு தலைகளைத் தூக்கும் அரசியலை தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. எடியூரப்பாவின் குதிரை பேரத்தாலும், அமித்ஷா மோடியின் மாஸ்டர் பிளானாலும் கர்நாடக அரசியல் களம் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது.
கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக, மம்தாவின் கோட்டையான மேற்கு வங்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக திரிணாமுல், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 107 எம்.எல்.ஏக்களை கள்ளத்தனமாக தன் பக்கம் இழுக்க, மறைமுக வேலைகளை செய்து வருகிறது பா.ஜ.க. அப்படி நடந்தால் கர்நாடகாவில் நடந்தது போல மேற்கு வங்கத்திலும் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்.
அதேபோல கோவா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்து வந்தாலும் சட்டப் பேரவையில் தனது பலத்தை மேலும் கூட்டுவதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை இழுக்கும் வேலைகளிலும் இறங்கியுள்ளது.
நாடு முழுவதும் போட்டியிட்ட பா.ஜ.க.,வால் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் டெபாசிட்டை கூட பெறமுடியவில்லை. இதில் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எப்படியாவது பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றியே தீரும் என அக்கட்சித் தலைவர்கள் பகல் கனவு கண்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை இறக்கியுள்ளது பா.ஜ.க அதனடிப்படையில், அ.தி.மு.க.,வின் சீனியர் தலைவர்களிடம் அவ்வப்போது பேரங்களை பேசி வருவதாக தகவல்கள் கசிகின்றன.
இதற்காகவே அ.தி.மு.க - பா.ஜ.க முக்கியஸ்தர்கள் சந்திப்பு அடிக்கடி திரைமறைவாகவும், நேரடியாகவும் நடந்து வருகிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் சில சீனியர் தலைகளும் பா.ஜ.க பக்கம் உருளப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே, ஆட்சி முடியும் சமயத்தில் அ.தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்கள் பலர் பா.ஜ.க.,வுக்கு தாவ தயாராக இருப்பதாகவும், பா.ஜ.க.,வின் மேலிட சிக்னலுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களில் பெருந்தலைகள் பா.ஜ.க கூடாரத்துக்கு மாற முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இது எடப்பாடி - ஓ.பி.எஸ் என இருவரையுமே கலக்கமடையச் செய்திருக்கிறதாம். ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் பிளவையே எப்படி சரி செய்வது என்று தெரியாமல் யோசிக்க நேரம் இல்லாத நிலையில், பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கை இருவரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. ஆனால், எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன ஆகும் என்று நன்கு தெரிந்து இருப்பதால் இருவரும் அமைதி காப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.