உணர்வோசை

சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்த சிந்துவெளி நாகரிகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

சிந்துவெளிப்பண்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டை முற்போக்காளர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும் என்பது நம் காலத்தின் கட்டளை.

சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்த சிந்துவெளி நாகரிகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிந்துவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்டதை தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.1924 செப்டம்பர் 20 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அது வழக்கமான தொல்லியல் முடிவுகளை அறிவித்த ஓர் நாளாக இருக்க வில்லை. அதுகாறும் இந்தியப்பண்பாட்டின் தோற்றுவாய் மற்றும் தொடர்ச்சி பற்றி நிலவி வந்த அத்தனை கருத்துகள்,நம்பிக்கைகள்,கற்பிதங்கள் அத்தனையையும் ஒரே நாளில் அந்த அறிவிப்பு தலைகீழாய் மாற்றிப்போட்டது.

பீகாரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைய நகரமான ராஜ்கீரில் கிடைத்த கோட்டைச்சுவரும் செங்கற்களும்தான் இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் முதல் கட்டுமானம் என்கிற கருத்தே இந்திய வரலாற்றை எழுதியவர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் தொடங்கி தெற்கே ராஜஸ்தான்,குஜராத் எனப் பரவி மகாராஷ்ட்டிராவின் தைமாபாத் வரை தோண்டத் தோண்ட சிந்துவெளி நாகரிகத்தின் நகரங்கள் பூமிக்குள்ளிருந்து எழுந்து வந்து கொண்டே இருந்தன. அங்கே கிடைத்த செங்கற்களும் திட்டமிட்ட தெருக்களும் பொதுக்குளியலிடம், தானியக்கிடங்கு, நிர்வாக அலுவலகங்கள், இரு அறைகள் கொண்ட வீடுகள் போன்ற கட்டமைப்புகளும் உலகை வியப்பில் ஆழ்த்தின.

“ஆதி இந்தியர்கள்” என்கிற தன் புகழ்பெற்ற நூலில் இதுபற்றி டோனி ஜோசப் குறிப்பிடுவது: “எல்லாவற்றையும் விட ஹரப்பா நாகரிகத்தின் மிகச்சிறப்பான அம்சம் அதன் பிரம்மாண்டம்தான். அந்த நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது. அது சுமார் பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது.

மெசபடோமிய நாகரிகத்தையும் எகிப்திய நாகரிகத்தையும் ஒன்றாகச் சேர்த்தால்கூட அந்த அளவு வராது. அதோடு அக்காலகட்டத்தில் இருந்த எந்தவொரு நாகரிகத்தையும் விட அது அதிக அளவு மக்கட்தொகையைக் கொண்டிருந்தது.”

இன்றைய இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு சுமார் முப்பது லட்சம் சதுர கிலோமீட்டர்கள். சிந்துவெளி நாகரிகம் அதில் மூன்றில் ஒரு பங்கு இருந்துள்ளது.

சிந்துவெளி நாகரிகத்தின் இன்னொரு மிக முக்கியமான அம்சம் அது வேதகாலத்துக்கு முற்பட்டது என்கிற உண்மையாகும்.கிமு.2600 முதல் கி.மு.1900 வரை நிலைத்திருந்த நாகரிகம் அது.வேத காலம் எனப்படுவது கி.மு.1500 க்கும் கி.மு.500க்கும் இடைப்பட்ட பிற்காலத்தைச் சேர்ந்ததே.

ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையும் வேத காலத்திலிருந்து மட்டுமே துவக்கிப் பேசிக்கொண்டிருந்த கற்பிதமெல்லாம் 1924 செப்டம்பர் 20க்குப் பிறகு மலையேறிவிட்டது. ஜான் மார்ஷல் அறிவித்தபோதே இது வேதகாலத்துக்கு முற்பட்ட நாகரிகம் என்று அறிவித்தார். ஹரப்பா நாகரிகத்தின் எந்த அடையாளமோ அதுபற்றிய பதிவோ மீள் நினைவோ ரிக் வேதத்தில் ஓரிடத்தில்கூட இல்லை.

ஆரிய நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களான குதிரையும் ஆரக்கால் பொருத்திய சக்கரங்களும் சிந்துவெளி நாகரிக நிலப்பரப்பில் எங்கும் கிடைக்கவில்லை. ஆரியர் வருகைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகம் அழிந்துவிட்டிருந்தது. அதன் மிச்சசொச்சம் எதுவும் ஆரியர் மொழியில் இருக்கவில்லை. அது வேறு ஓர் உலகமாக இருந்தது.

1924 காலகட்டத்திலேயே வங்காளத்தைச் சேர்ந்த அகழாய்வு அறிஞர் சுனிதிகுமார் சட்டர்ஜி சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திராவிட மக்களின் நாகரிகமாகத்தான் இருக்க முடியும் என்று எழுதினார். ஆனாலும் சிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்களை இதுவரை யாராலும் வாசிக்க முடியாததால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்த சிந்துவெளி நாகரிகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

ஆனாலும் சிந்து வெளி எழுத்துக்களை வாசிக்கும் ஆய்வில் தன் வாழ்நாளின் 40 ஆண்டுகளைச் செலவிட்ட ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன், மொழியியலறிஞர் அஸ்கா பர்போலா உள்ளிட்ட பல அறிஞர்களும் சிந்துவெளி எழுத்துக்கள் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு தொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க முடியும் என்று நிறுவியுள்ளார்கள். சிந்துவெளி எழுத்துக்களுக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும், கீழடியில் மண்பாண்டங்களி லும் மயிலாடுதுறை அருகில் செம்பியன் கண்டியூரில் கிடைத்த கற்கோடரியிலும் இருக்கும் எழுத்துக்கள் அச்சு அசலாக சிந்துவெளி எழுத்துக்களோடு பொருந்திப் போவதை ஒரு பாமரரும்கூட அடையாளம் காண்பார்.

சிந்துவெளி நாகரிகம்,வேதகாலத்துக்கு முற்பட்டது,ஆரியருக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்கிற கண்டுபிடிப்புகள் சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்துள்ளன. எப்படி இந்த உண்மைகளை அழிப்பது அல்லது மறைப்பது அல்லது திரிப்பது என்று சங்கிகள் வெறிகொண்டு அலைகிறார்கள். வேதகாலமும் ஹரப்பா நாகரிக காலமும் ஒன்று என்று ஓங்கி அடித்து விடு கிறார்கள். அதற்காக நிலத்தில் இல்லாமல் வேதத்தில் ஓடுவதாகச் சொல்லப்பட்ட ‘சரஸ்வதி” என்கிற ஒரு நதியை துருப்புச்சீட்டாக இறக்கியுள்ளார்கள். சரஸ்வதி நதிக்கரையில்தான் ஹரப்பா நாகரிகம் தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கித் தருபவருக்கு ஆயிரம் பொன் பரிசு என்று அறிவிப்பது போல ‘இல்லாத சரஸ்வதி நதி’யைக்கண்டுபிடித்து கூகுள் மேப்பில் இணைக்கப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்துள்ளார்கள்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருந்ததாக அவர்கள் சொல்லும் ‘ராமர் பாலத்தை’ நாசா விண்வெளி ஆய்வுப்புகைப்படமாக வெளியிட்டார்களே அதே பிராடு டெக்னிக்கைத்தான் சரஸ்வதி நதி என்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ராஜேஷ் கொச்சார் என்கிற ஆய்வாளர் எழுதியுள்ள The Vedhic People என்கிற நூலில் இந்தச் சரஸ்வதி நதி-சரஸ்வதி நாகரிகம் பற்றிய சங்கிகளின் வரலாற்றுத்திரிபுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அடித்து நொறுக்குகிறார். ஆப்கானிஸ்தானில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஹரக்ஸ்வதி என்கிற நதியைத் தாண்டித்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அந்த நதியின் மீள்நினைவுகளையே வேதத்தில் பதிவு செய்தனர். அந்தக் கக்கர் ஹக்ரா என்கிற ஹரக்ஸ்வதியைத் தான் சரஸ்வதி என்று இன்றைய சங்கிகள் திரித்துக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ராஜேஷ் கொச்சார் விளக்குகிறார்.

எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும், பாஜக ஆட்சியாளர்கள் சிந்து வெளி நாகரிகத்தை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று பேசி வருவதுடன் ஒன்றிய அரசின் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் அப்படியே எழுதி வைத்திருக்கிறது. இதன் மூலம் இன்னொரு புதிய ஆபத்தைக் கல்விப்புலத்தில் சங்கிகள் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். பிஞ்சு மனங்களில் பொய் வரலாற்றைப் பதிக்கிறார்கள்.

ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் 30 ஆண்டுகால ஆய்வின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள “ஒரு பண்பாட்டின் பயணம்-சிந்து முதல் வைகை வரை” என்கிற பெருநூல் சங்கிகளின் கற்பிதங்கள் மீதான இன்னொரு வலுவான தாக்குதலாகும்.அவர் தமிழர் தொன்மையின் மீது படிந்துள்ள புதிரையும் சிந்துவெளிப்புதிரையும் விடுவிக்க வேறொரு புதிய கோணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.சிந்துவெளியின் மொழி என்ன மொழி என்கிற ஆராய்ச்சிக்குள் போகாமல்,சிந்துவெளி நாகரிகத்தின் உடல்மொழியின் இணைகள் அல்லது தொடர்ச்சி இந்திய நிலப்பரப்பில் எங்கெல்லாம் கிடைக்கிறது என்கிற கேள்வியுடன் களம் இறங்கினார். அதாவது சிந்து வெளிப்பண்பாட்டின் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் எங்கெல்லாம் தொடர்கின்றன; அந்நாகரிகத்தின் மீள்நினைவுகள் இந்தியப்பரப்பெங்கும் புழக்கத்தில் உள்ள இலக்கியங்களில் எதிலெல்லாம் பதிவாகியிருக்கின்றன என்று ஆராய்ந்தார்.

இரண்டு முக்கியமான வழிகளை அவர் கண்டார். ஒன்று ஊர்ப்பெயர் ஆய்வு.சிந்துவெளி நிலப்பரப்பு முழுவதும் இன்றும் வழங்கும் ஊர்ப்பெயர்கள் சிலிர்பூட்டும் விதத்தில் தமிழ்ப்பெயர்களாக இருக்கின்றன என்கிற உண்மையைக் கண்டு பிடித்தார்.கொற்கை- வஞ்சி- தொண்டி வளாகம் என்று அதற்குப்பெயரிட்டார். ஆம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடமேற்கு இந்தியா உள்ளிட்ட ஹரப்பா நாகரிகத்தின் நிலப்பரப்பு களில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுர, கல்லூர், கண்ணகி என ஊர்ப்பெயர்கள் இன்றும் உள்ளன. பாகிஸ்தானில் கண்யகி, கோவலன், வஞ்சி என்றும்; ஆப்கானிஸ்தானில் புகார், பும்புகார் என்றும் ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன. அங்கிருந்து சிந்துவெளி நாகரிகம் சிதைந்த பிறகு புலம் பெயர்ந்து தெற்கே நகர்ந்த மக்கள் தங்கள் பழைய ஊர்ப்பெயர்களை - பிடிமண் எடுத்துச் செல்வது போல, எடுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் முதல் முன்வைப்பு.

சங் பரிவாரங்களின் வரலாற்றுப்புளுகுகளை ஆட்டம் காணச் செய்த சிந்துவெளி நாகரிகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

“காடுகளையும் மலைகளையும் ஊரையும் வீடுகளையும் பொருட்களையும்கூட எடுத்துச் செல்ல முடியாது. மலையின் பெயரையும் ஊரின் பெயரையும் சுமந்து செல்ல முடியும். இது தம் தொன்மையை,மரபை,வரலாற்றை எடுத்துச் செல்லும் “உரிமை கோரல்”ஆகும் என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன். அவர் தமது நூலில், 1.செங்கல்தடம் 2.பானைத்தடம், 3.காற்றுத்தடம், 4.சிலம்புத்தடம், 5.விளையாட்டுத்தடம், 6.நகரத்தடம், 7.மீள் நினைவுத்தடம், 8.வன்னிமரத்தடம், 9.வந்த வழித்தடம்-திராவிட குஜராத்,திராவிட மகாராஷ்ட்டிரா ,10.பெயர்ப்பாலம், 11.திராவிடச் சிவப்புத்தடம் போன்ற பல பொருள்சார் பண்பாட்டுத் தடங்கள் வழியாக சிந்துவெளிப் பண்பாடு என்கிற ஒரு ஒட்டுமொத்தப் பண்பாடே பயணம் செய்து தெற்கே வந்து நிலைபெற்றிருக்கிறது என்று விவரிக்கிறார்.

ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் இன்னொரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு இந்தியாவில் சங்க இலக்கியத்தைத் தவிர வேறு எந்த இந்திய மொழி இலக்கியத்திலும் சிந்துவெளி நாகரிகத்தின் மீள் நினைவுகள் பற்றிய பதிவுகளைக் காண முடியவில்லை என்பதாகும். சங்க இலக்கியத்தில் பேசப்படுபவை எல்லாம் அதை எழுதிய மக்கள் தாம் வாழ்ந்த தம் சமகால வாழ்வைப் பற்றி மட்டும் –வடவேங்கடம் தென்குமரிக்கிடைப்பட்ட நிலப்பரப்பை மட்டும் - எழுதியவை அல்ல.வாய்மொழியாகக் காலம் காலமாகக் கடத்தி வந்த மீள் நினைவுகளை சங்க இலக்கியத்தில் பதிவு செய்துள்ளதாக அகச்சான்று களையும் இந்திய நிலப்பரப்பெங்கும் விரவிக் கிடக்கும் புறச்சான்றுகளையும் அறிவியல்பூர்வ மாக-இயங்கியல்பூர்வமாக-இணைத்து நிறுவுகிறார். ‘ஹரப்பா நாகரிகம் விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று’ என்பது அவரது புகழ்பெற்ற வாசகமும் கண்டுபிடிப்புமாக அமைகிறது.

12000 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுத பாஜக அரசு ஆய்வுக்குழுவை அறிவித்தபோது அக்குழுவுக்கான கடமையாக “ஆரிய – திராவிட முரண்பாடு” என்கிற வரலாற்றுப் புனைவை இல்லாமல் செய்வது என்று குறித்தார்கள். ‘திராவிட’ என்பது ஒரு இனத்தின் பெயரல்ல.1856 இல் பிஷப் கால்டுவெல் மற்றும் எல்லீஸ் துரை போன்ற மொழியியலாளர்கள் முன் வைத்த திராவிட மொழிக்குடும்பம் பற்றியது அது. தமிழ் ஆகிய நம் மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மட்டுமே திராவிட மொழிகள் அல்ல. 25க்கும் மேற்பட்ட திராவிட மொழிகளை கால்டுவெல் பட்டிய லிட்டுள்ளார். சிந்துவெளிப்பகுதியில் இன்றும் பிராகுயி என்கிற திராவிட மொழி புழக்கத்தில் இருக்கிறது. தமிழர்கள் ஒரு திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து குடியேறியவர்கள். ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள். இந்த உண்மையைத் தான் சங்கிகள் அழிக்க நினைக்கிறார்கள், திரிக்க நினைக்கிறார்கள். கடந்த கால வரலாற்றை இழந்தவர்கள் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் இழப்பார்கள் என்பது காலத்தின் தீர்ப்பு. பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்றை எப்படி நாம் இழக்க முடியாதோ அதைப்போலவே மொழிவழி தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்மொழி பேசும்தேசிய இனமக்கள் கடந்த கால வரலாற்றை இழக்க முடியாது. முற்போக்காளர்கள் இதைக் கையில் எடுத்துச் சரியான திசையில் கொண்டு செல்லாவிட்டால் மதவாதிகளும் மொழிவெறி இனவாதிகளும் தங்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். ஆகவே சிந்துவெளிப்பண்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டை முற்போக்காளர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும் என்பது நம் காலத்தின் கட்டளை.

- நன்றி தீக்கதிர்.

Related Stories

Related Stories