நீதிக் கட்சியை சி.நடேசனார், டி.எம்.நாயர், சர் பிட்டி தியாகராயர் ஆகியோர் நிறுவினர். நீதி கட்சியால் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை, மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
நீதிக் கட்சியைத் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களால் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. திராவிடர் கழகம் மூட நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்டெடுத்தது. தந்தை பெரியார் பகுத்தறிவை மக்களிடத்தில் போதித்து மனிதர்களை சுயமரியாதை மிக்க மனிதர்களாக மாற்றியப் பெருமை தந்தை பெரியாருக்கே உண்டு.
தந்தை பெரியாரின் தளபதியாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், கொட்டும் மழையில் இராயபுரம் ராபின் சன் பூங்கா அருகில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.
அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய உரை இதோ:
"மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம், தாய்மார்கள் தவிக்கின்றனர், மழையில் நின்று கொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான். ஆனாலும் சமாளிக்கிறீர்கள், இது போன்ற நிலையில் தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமானநிலை எற்பட்டது. சரி செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல, அதே கொள்கைப் பாதையில்தான் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீது தான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கொள்கைகளில் கருத்துக்களில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும். ..தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி - திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம். இந்தக் கழகத்தை இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர்- தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை...
இதயப்பூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அவ்வப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பிடத்தை -தலைவர் பதவியை- நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்... திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.
இரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை மலர்ச்சியைத்தான் குறிக்கும். இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. எது மாலையாகப் போவது திராவிடத்திற்குத் தான் என்ற எண்ணம் வேண்டும். மழை பெய்து நின்று கறுத்த வானம் வெளுத்திருப்பதைப் போல, இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்ற புறப்பட்டுவிட்டனர். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி, பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
நான் கேட்கிறேன் தோழர்களே, எது முக்கியம்? நமக்கு இலட்சியம் தேவை என்று முடிவு செய்தோம். பிரச்சினை முடிந்தது, அத்தோடு இதோ நம் கண்முன் வடநாட்டு ஏகாதிபத்தியம் - மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம் - பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைதான் ஒழிய வேண்டும். பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும் வரைஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம் அப்போது பெரியார், "பயல்கள் பரவாயில்லை; உருப்படியான வேலைதான் செய்கிறார்கள்" என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது. முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப்படை அமைய வேண்டும். அதில் பங்கு கொள்ள சமதர்மத் தோழர்களே வாருங்கள் என்று வரவேற்கிறேன். பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்.
பெரியாரே ; நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள், உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம் . துவக்க நாளாகிய இன்றே!"
- பேரறிஞர் அண்ணா - திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழாவில்!
அண்ணா அவர்கள் தி.மு.க. தலைமை அலுவலகமாக இராயபுரத்தில் அறிவகம் கண்டார், அதற்கடுத்து தேனாம்பேட்டையில் அன்பகம் கண்டார், அண்ணாவின் வழித் தோன்றல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோ, பார் போற்றும் வகையில், தி.மு.க. தலைமை அலுவலகமாக இதோ கம்பீரமாக நிற்கும் அண்ணா அறிவாலயம் கண்டார்.
அன்று பேரறிஞர் அண்ணாஅவர்களால் எந்தக் கொள்கை முழக்கத்துடன் தி.மு.க. தொடங்கப்பட்டதோ அதே கொள்கை முழக்கத்துடன் தி.மு.கழகம் இன்றைக்கு பவளவிழா ஆண்டில்அடி எடுத்து வைக்கிறது. தி.மு.கழகத்தின் பிதாமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.கழகத்தைத் தொடங்கியபோது அவர் கொண்ட இலட்சியம், கொண்ட கொள்கைகளை முத்தமிழறிஞர் கலைஞர் நெஞ்சில் தாங்கி 49 ஆண்டுகள் தி.மு.கழகத்தின் தலைவர் பொறுப்பேற்று வழி நடத்தினார். தி.மு.கழகத்தின் முதல் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தார். அவர் பேச்சு, எழுத்து, மனித நேயத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் 6.3.1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசில் முதன் முதலில் தடம் பதித்தது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தால் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கப்பெற்றன. பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு மாநகரம் முதல் குக் கிராமங்கள் வரையில் அரசு பேருந்துகள் இன்றும் பவனி வருகிறது என்றால் முத்தமிழறிஞர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்த போது தான் பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதே காரணமாக அமைந்திருக்கின்றன.
அப்போதைய ஆட்சியாளர்களிடம் சென்னை மாநிலத்திற்கு 'தமிழ்நாடு" என்று பெயர் வைத்திட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கோரிக்கை வைத்து 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தார்.
அந்தக் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் செவி சாய்க்கவில்லை அப்போதைய அரசு, பின்னர் தி.மு.க. கழகம் ஆட்சி என்ற அரியணையில் ஏறியது. அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். - 'மெட்ராஸ் ஸ்டேட்' - சென்னை மாநிலத்திற்கு 'தமிழ் நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள் மட்டுமல்ல இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற 28.11.1967 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார் அண்ணா.
தமிழ்நாடு அரசின் சின்னத்தில் தேவநாகரி எழுத்தில் - 'சத்தியமே ஜெயதே' - என்ற வாசகத்தை 'வாய்மையே வெல்லும்' என்று தமிழ் மாற்றம் செய்து ஆணையிட்டார் பேரறிஞர் அண்ணா. 14.4.1968 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் "தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என்று பெயர்ப் பலகை திறந்துவைத்தார். அந்தப் பெயர் பலகைதான் இன்றும் கோட்டைக் கொத்தள கட்டிடத்தின் முகப்பில் கம்பீரமாக அழகு தமிழில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. (அதே கோட்டை கொத்தளத்தின் முகப்பில் இருக்கும் - தமிழ்நாடு அரசு தலைமை அலுவலகத்தின் கம்பீரத் தோற்றத்திற்கு மேலும் கம்பீரத்தை ஊட்டும் வகையில் "தமிழ் வாழ்க” என்ற வாசகம் அமைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டு தி.மு.கழகத்தை பேரறிஞர் அண்ணா ஆரம்பித்து 1967 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் தி.மு.கழகத்தை அமரவைத்தார். அப்போது அவரது உடல் நலம் குன்றிய போது திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வருகை தந்து நலம் விசாரித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்தாலும் நம் உள்ளத்திலும், நம் நினைவிலும் என்றென்றும் வீற்றிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் தி.மு.கழகத்தின் கொள்கை, மக்கள் நலத் திட்டப் பணிகள் செய்யும் பயணத்தை கலைஞர் அவர்கள் முன்னெடுத்து தொடர்ந்தார். கலைஞர் ஆட்சியில் எத்தனை திட்டங்கள், தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளி வழங்கும் திட்டம், இரவலர் மறு வாழ்வுத் திட்டம், குடிசை மாற்று வாரியம் மூலம் குடிசையில்லா தமிழ்நாட்டினை உருவாக்குதல், நில உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல், விவசாயி களுக்கு கூட்டுறவுக் கடன் 7000 கோடி ரூபாய் ரத்து, மகளிர்க்கு சொத்தில் சமஉரிமை, உள்ளாட்சியில், அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, மகப்பேறு நிதி உதவித் திட்டம், திருமண நிதி உதவித் திட்டம், மகளிர் சொந்தக் காலில் நின்றிட மகளிர் சுய உதவிக் குழுக்கள், தந்தை பெரியார் சமத்துவ புரங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம், அய்யன் வள்ளுவருக்கு வானுயர 133 அடியில் அமையப் பெற்ற திருவள்ளுவர் சிலை - சுனாமி பேரலையிலும் கம்பீரமாக நின்று இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு, குமரி முனைக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் வானுயர அய்யன் வள்ளுவர் சிலை!
மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முறை ரத்து, பெண்கள் கல்லூரி வரைச் சென்று படிக்க இலவசக் கல்வி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளுக்கு இலவச பம்பு செட் மோட்டார் வழங்குதல், தமிழ் மொழிக்கு- செம்மொழி அங்கீகாரம், தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமியற்றி நிலைநாட்டினார் கலைஞர். பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியை தமிழ்நாட்டில் 5 முறை அமைத்தார் கலைஞர்! இந்த ஐந்து முறை ஆட்சியிலும் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றனர். பட்டியலின மக்கள் மேன்மை கண்டனர். உயர் பதவிகளில் பட்டியலின
மக்கள் அமர்ந்து; தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதோ தி.மு.கழகத்தின் மூன்றாம் தலை முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 28.8.2018 அன்று தி.மு.கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். தலைவராகப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தி.மு.கழகத்தை 6வது முறை ஆட்சி கட்டிலில் அமர வைத்தப் பெருமை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையே சாரும். ஆட்சி பொறுப்பேற்றதும் பேரறிஞர் அண்ணா வழியில், கலைஞர் வழியில் திட்டங்களைத் தீட்டினார்.
எவரும் எதிர்ப்பார்க்காத திட்டங்கள் அவை. எவரும் செயல்படுத்த முடியாத திட்டங்கள் அவை, அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டம். பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், சிறார்களுக்கு காலை உணவுத் திட்டம், பத்திரிகையாளர் நல வாரியம், வருமுன் காப்போம், மக்களைத்தேடி மருத்துவம், கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் நான்காயிரம் நிதி உதவி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இம் முதலீடுகளை கொண்டு வர துபாய், ஸ்பெயின், அமெரிக்கா, ஜப்பான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தார்.
அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்ததன் மூலம் பெருவாரியான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.கழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் தொடருகின்றன.
தி.மு.கழகம் பொன்விழா, மணி விழா கடந்து இன்று பவள விழாவில் அடியெடுத்து வைக்கிறது! அண்ணா கண்ட தி.மு.க. நாளை முத்து விழா, நூற்றாண்டு விழா என்று தி.மு.கழகம் தொடர்ந்து கொண்டே இருக்க, இருக்க... தமிழ்நாட்டின் வளர்ச்சியும், அசுர வளர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும்.! பேரறிஞர் அண்ணா கண்ட கழகம் வாழ்க...வெல்க! அண்ணா புகழ் ஓங்குக!