சீரணி அரங்கம் நிரம்பி வழிகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அது. கூட்டத்தை நடத்துவது அனைத்துக் கல்லூரி மாணவர்கள். கூட்டத்திற்கு தலைமை தாங்கியது நாவலர் நெடுஞ்செழியன்.
மாணவக் கூட்டத்தினரை நோக்கி... படி.. படி... படி என்று மூன்று முறை முழங்கினார் நாவலர். அவருக்குப் பின்னால் பேச வந்த முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் ஏன் மூன்று முறை படி.. படி.. படி என்று சொன்னார் என்றால் முதலில் பாடத்தை படி, பின்னர் பெற்றோருக்கு படிந்து நட, இதனை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் ஏறலாம் பல படி விளக்கம் கொடுத்தார்.
இந்த வார்த்தைகளை யார் எப்படி புரிந்து கொண்டார்களோ இல்லையோ... எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப்போகும் தகுதி வாய்ந்த அந்த இளைஞர் சரியாகவே புரிந்துகொண்டார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விடிவெள்ளியாக முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரது மகனுக்கு அரசியல் ஈர்ப்பு என்பது இயற்கையானதே. அந்தவகையில் பள்ளியில் படிக்கும்போதே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க என்ற பெயரில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்தான் அந்த இளைஞர்.
கல்லூரி மாணவர் கருத்தரங்கக்கூட்டம் ஒன்றில் முத்தமிழறிஞர் கலைஞர் உரையாற்றுகிறார்.
தண்ணீரைவிட்டு எடுத்தவுடன் எரிகின்ற பாஸ்பரஸ் போலவோ, காயவைத்த பின்னரே எரிகின்ற நனைந்த விறகைப் போலவோ இல்லாமல் எரித்தவுடன் எரிந்து உதவும் கற்பூரத்தைப் போல இந்த நாட்டு இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றார் கலைஞர்.
ஆம். கற்பூரமாக இருக்க வேண்டும். எதற்காக? தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் உதவுவதற்காக. புதிய தமிழ்நாட்டை உருவாக்க. தமிழர்களின் நலன்காக்க.
அன்று இளைஞராக அரசியலுக்குள் நுழைந்தவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழர்களின் இதயங்களில் நுழைந்திருக்கிறார்.
உங்களில் ஒருவன். தன் வரலாற்றுடன் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும், தமிழர்களின் போராட்ட வாழ்வையும், பல படி கற்களை தமிழ்சமுதாயம் கடந்து வந்த பாதையையும் தனது தன்வரலாற்று நூலில் விவரித்துள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உங்களில் ஒருவன் எனும் தன் வரலாற்றுநூல் பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது. முதல் விடை, மு.க.ஸ்டாலின் அரசியலில் திணிக்கப்பட்ட தலைவர் அல்ல. இரண்டாவது விடை, அவர் ஒரு பிறவித்தலைவர் என்பதை இந்நூலை படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள். விளங்கிக் கொள்வார்கள். இந்நூலில் முக்கியமான பக்கம் 164. அந்தப் பக்கத்தில்தான் தன்னுடைய அரசியல் நுழைவு குறித்து விவரித்துள்ளார் அவர்.
கற்பூரமாக எறிந்து அடுத்தவருக்கு ஒளி கொடுக்கவே தன்னுடைய அரசியல் நுழைவு அமைந்ததற்கான காரணத்தையும், அதற்காக தான் தேர்ந்தெடுத்த வழியையும் சொல்கிறார் அவர்.
தன் வரலாறுகளில் வழக்கமாக தொடர்ச்சியான நிகழ்வுகள், சொற்களஞ்சிய மேற்கோள்கள் அல்லது தன் வரலாறு எழுதுபவரின் நினைவுக் குறிப்புகள், அத்துடன் பயண அனுபவங்கள் மற்றும் சின்னச் சின்ன தருணங்கள் ஆகியவை அடங்கும். தன்வரலாற்றாளரின் வாழ்க்கையை உருவாக்கிய வரலாற்று சூழலின் கட்டமைப்பிற்குள் அனைத்தும் வரும்.
ஆனால், உங்களில் ஒருவன் தன் வரலாற்று நூலில் தன்னை உருவாக்கிய அரசியல் சூழல்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அப்போதைய அரசியல் சூழல்களையும் படம்பிடித்துக் காட்டி பண்பட்ட எழுத்தாளராக, அறத்தின்பால் நின்று எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உங்களில் ஒருவனில் ஒரு இயக்கம் தமிழ்நாட்டுக்கு பட்ட பாடுகளையும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த உழைப்பையும் மட்டுமே சொல்லிச் செல்கிறார் எழுத்தாளராக உருவெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் தொண்டனாக, நாடக நடிகராக, முரசொலி ஊழியராக, திரைப்பட நடிகராக, இளைஞர் அணிச் செராக, கழகத்தின் பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக, தமிழ்நாட்டு சட்டசபையின் உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, உள்ளாட்சி அமைச்சராக, துணை முதலமைச்சராக, இன்றையதினம் முதலமைச்சராக பல்வேறு பரிமாணங்களில் படிப்படியாக உயர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படிப்படியாக தன் வாழ்க்கையை படித்து எழுதி, உங்களில் ஒருவன் நூலில் எழுத்தாளராக உயர்ந்திருக்கிறார்.
உங்களில் ஒருவன் முதல்பாகம் தான் இந்நூல். தன்னுடைய 23 வயதுவரை கடந்து வந்த பாதையை எழுதியுள்ளார் முதலமைச்சர். இல்லை.. இல்லை. உழுதுள்ளார். ஆம். ஆழமாகவும், அகலமாகவும் உழுதுள்ள பண்பட்ட நிலம் உங்களில் ஒருவன் எனும் இந்நூல். இந்நூலைப் படிக்கும் இளைஞர்கள், இந்த நிலத்தின் வாயிலாக நல்ல பயிர்களை அறுவடை செய்து கொள்ளலாம்.
வாழ்வின் சோதனை அவருக்கு எப்போது தொடங்குகிறது தெரியுமா? 5 வயதில். ஸ்டாலின் என்ற பெயர் ஏற்படுத்திய சோதனை முதல் சோதனை. ஸ்டாலின் என்ற பெயர் வைத்த காரணத்தினால் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.
தலைவர் மகன் என்ற காரணத்தினால் மிசா சிறையில் கொடூர தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.
ஆனால், எத்தனை தடைகளை எப்படியெல்லாம் வென்றார்?
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால்.. உழைப்பு. உழைப்பு.. உழைப்பு. இதுதான் பிறவித்தலைவர் மு.க.ஸ்டாலின்.
27 அத்தியாயங்கள் கொண்ட 334 பக்கங்கள் கொண்ட உங்களின் ஒருவன் முதல் பாகத்தில் சில பக்கங்கள் நம் இதயத்தை வருடுகின்றன. சில பக்கங்கள் இதயத்தைப் பதம் பார்க்கின்றன. இப்படித்தான் தயாளுத்தாய் என்ற ஒரு அதிகாரம். ஒரு தாய்க்கும், பிள்ளைக்கும் உள்ள உறவை எடுத்தியம்பி நெகிழ வைக்கிறது.
ஒரு தலைவன் உருவாகுவதற்கு புறச்சூழல்களும், அகமனமும் காரணமாக இருந்தாலும் குடும்பச் சூழல்கள் அவசியமாகின்றன. குறிப்பாக ஒரு குடும்பத்தில் பெண் என்பவரின் பாத்திரத்தைப் பொறுத்தே அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், இன்று தன் பிள்ளையை வளர்த்து சமூகத்திற்கு ஒப்படைத்த தயாளுத்தாய் நாட்டின் வளர்ச்சிக்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
தன் அன்னை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதோ இப்படித்தான் குறிப்பிடுகிறார்.
''எனது எல்லா முயற்சிகளுக்கும் முதல் தூண்டுதல் அம்மாவாகத்தான் இருக்கும். நான் செய்த செயலுக்கு முதல் பாராட்டும் அம்மா கொடுத்ததாகத்தான் இருக்கும்.
அப்பாவுக்கு தகவல் சொல்லும் பாதையாக அம்மாவைப் பயன்படுத்திக் கொண்டேன். அப்பாவும், எங்களிடம் எதையும் சொல்வதற்கு அம்மாவைப் பயன்படுத்திக் கொண்டார். தலைவரின் படிப்படியான உயர்வை, படிப்படியாகப் பார்த்தவர் அம்மா தான்...''
''எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள், எத்தனை மேடு பள்ளங்கள், எத்தனை புயல்கள், சூறாவளிகள், எத்தனை உயர்வு தாழ்வுகள், எத்தனை பழிகள், பழிவாங்குதல்கள் அத்தனையையும் தலைவருக்கு இணையாகத் தாங்கிக் கொண்டவர் அம்மா''.
...இப்படியாக தன்னுடைய தாயாருக்காக ஒரு அத்தியாயத்தை எழுதி அதை படிப்பவர் நெஞ்சில் பாச தீபத்தை ஏற்றியிருக்கிறார் நூலாசிரியர். மேலும், இந்த அத்தியாயத்திற்கு கடைசி பத்தியில் மகுடம் சூட்டியிட்டியிருக்கிறார். இதோ அந்தக் கடைசி பத்தி...
''சிறுவயதில் எனக்கு ஒரு நடைவண்டி வாங்கித் தந்தார் அம்மா. வீட்டுக்குள் அதில்தான் வலம் வருவேன். எப்போதும் அதை எடுத்துக்கொண்டே சுற்றிச் சுழல்வேன். அந்தப் பயிற்சிதான் இப்போதும் என்னை அதிகமாக நடக்கக் தூண்டுகிறதோ..''
மாலையில் கோவை பயணம். நள்ளிரவு சென்னையில் மழை பாதிப்புகளை பார்வையிடல், மறுநாள் காலை சட்டமன்ற பணிகள், பிற்பகலில் மக்கள் நலத்திட்டப்பணிகள் எனும் சக்கரத்தை கட்டிக் கொண்டு, சுழலும் சூறாவளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாகியிருப்பதற்கு தொடக்கம் யாரென்று தெரிகிறதா? அவர்தான் தயாளுத்தாய்.
தன்னை உருவாக்கிய தந்தை - முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி பெருந்தகையீர் க.அன்பழகன், முரசொலி மாறன், முரசொலி செல்வம், இயக்குநர் அமிர்தம், அன்பு நண்பர் அன்பில் பொய்யாமொழி, தலைவரின் வலக்கரம் சண்முகநாதன், தன் அன்பு மனைவி துர்காவதி என அத்தனை பேரையும் அடிக்கோட்டிட்டு காட்டும் முதலமைச்சர் மு.கஸ்டாலின், ஒட்டுமொத்தமாக தி.மு.க கழகத்தை உள்ளடக்கிய வரலாற்றையே தனது உங்களில் ஒருவனில் தீட்டியுள்ளார்.
சாமானியர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி அடித்தட்டு மக்களை அதன்பால் அண்டவிடாமல் ஒதுக்கிய காலம் என்று ஒன்று இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் அரசியல்பாதையில் சாமானியர்களை அழைத்து வந்தது. இடுப்பில் கட்டிய துண்டினை தோளில் போடவைத்து சம உரிமை பேச வைத்தது. ஆண்டான் அடிமை, மேலோர் கீழோர் என்பதை அடித்து நொறுக்கி சகலருக்குமான சமூகநீதியை பேச வைத்தது.
அந்த இயக்கத்தின் வார்ப்பாக உருவான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலை படிப்பவர்கள் எழுச்சி பெறுவார்கள்- திடம் பெறுவார்கள்- ஊருக்கு உழைக்க உத்வேகம் கொள்வார்கள்.
தலைவருக்கு மகனாக வேண்டுமானால் பிறக்கலாம். தலைமை தாங்க உழைப்பு முக்கியம். ஊருக்கு உழைக்க வந்துவிட்டால் மான அவமானம் பார்க்கக்கூடாது என்ற தந்தை பெரியாரின் கூற்று பல்வேறு தருணங்களில் நிதர்சனமாக வெளிப்பட்டிருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்வில்.
ஊர் ஊராகச் சென்று பகுத்தறிவு நாடகங்கள் போட்டு, ஆதிக்கவாதிகளின் ஏச்சுக்களை தாங்கியவர். அதிகாரத்தில் இருந்தவர்களின் கொடூரப் பார்வையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர். தலைவரின் மகன் என்பதற்காக மாத்திரமல்ல... இனி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பாசிசவாதிகள் மிசா கொடுஞ்சிறையில் அடைத்தபோது சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்தவர் அவர்.
உங்களில் ஒருவன் நூலில் அவரது வாழ்வியல் அனுபவங்கள். இன்றைய இளைஞர்களுக்கு ஆகச்சிறந்த வழிகாட்டியாக அமையும். 80களின் தொடக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுயசரிதை படிக்கத் தொடங்கியவர்கள் இன்றையதினம் தமிழ்நாட்டில் பல்துறை வித்தகர்களாக இருக்கிறார்கள். ஊடகவியலாளர்களாக, நீதியரசர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக, மாவட்ட ஆட்சியர்களாக உருமாறியிருக்கிறார்கள்.
இன்று... உங்களின் ஒருவன் வாசிக்கும் இளைஞர்கள் நாளை இந்த நாட்டினை வழிநடத்திச் செல்லும் வல்லமையை பெறுவார்கள். ஆம். முதலமைச்சரின் வாழ்வியல் அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும்.
உங்களின் ஒருவன் முதல் பாகமான இந்நூலின் கடைசி பக்கத்தில் கடைசியாக சில வார்த்தைகள் இருக்கின்றன. மிசா சிறைவாசத்திற்கு செல்லும் முன்பாக சொல்லப்படும் வார்த்தைகள் அவை.
சிறைக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். இதோ சிறை வாசலில் நான் காத்திருக்கிறேன். நீங்கள் காத்திருங்கள்.
இதுதான் அந்த வார்த்தை. இந்நூலைப் படிக்கும்போது முதலமைச்சர் நம் மனச்சிறைக்குள் வந்தமர்கிறார். எத்தனை சோதனைகளை கடந்து அவர் வந்த பாதைகளை நமக்கு காட்டியிருக்கிறார்..!.
உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம் முதலமைச்சர் அவர்களே.