உணர்வோசை

“பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!

மகாகவி பாரதி குறித்து, “மாபெரும் தமிழ்க் கனவு” நூலில் பேரறிஞர் அண்ணா எழுதிய உரையின் தொகுப்பு.

“பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் குறிப்பில் இருந்து ஒரு தொகுப்பு. இது மாபெரும் தமிழ்க் கனவு நூலில் இடம் பெற்றிருக்கிறது.

மக்களின் கவி என்னும் பதமே கவர்ச்சியானது; முக்கியத்துவம் கொண்டது. எனினும், இது அந்தக் கவிஞருக்கு மட்டுமே புகழ் சேர்க்கும் பட்டம் அல்ல. ஏனெனில், மக்கள் எல்லோரும் மன்னாதி மன்னர்களையும் மந்திரிமார்களையும் தானைத் தளபதிகளையும் ஆபத்பாந்தவன்களையும் முக்காலமும் உணர்ந்த முனிவர்களையும் புனிதர்களையும் மாயமந்திர வித்தைக்காரர்களையும் புரோகிதர்களையும் கண்டிருக்கிறார்கள்.

ஆனால், தங்களுக்கான கவிஞர்களை அவர்கள் கண்டதே இல்லை. காலம்காலமாக மாபெரும் கவிஞர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களெல்லாம் வேதங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் வளம் சேர்த்தவர்கள், அரண்மனைகளைத் தங்கள் கவித் திறமையால் அலங்கரித்தவர்கள். மக்களுக்காக மக்களின் மொழியில் கவி பாடியவர்கள் மிக மிக அரிது.

“பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!

கோயில் மணி செய்யும் வேலையையோ அரசவை முரசு செய்யும் வேலையையோதான் கவிஞர்களின் குரல் செய்துவந்திருக்கிறது. வெகு அரிதாகத்தான் மக்களின் மனதில் கிடப்பவற்றைக் கவிஞர்களின் குரல் பேசியிருக்கிறது. அப்போதும்கூட, மக்களெல்லாம் எவ்வளவு பேராசைக்காரர்களாகவும் சிற்றின்ப நாட்டம் உடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள் என்றும் வெள்ளி என்பது எவ்வளவு பாவப்பொருள்; தங்கம் என்பது கடவுளுக்கு எதிரான பொருள் என்பதுபோலெல்லாம் மக்களை இடித்துரைப்பதாகத்தான் இருக்கும்.

இந்தப் பிரசங்கங்களுக்கு அரச செங்கோலின் ஆசிர்வாதம் தாராளமாகக் கிடைத்தது. விளைவாக, தாங்கள் எங்கிருந்து கிளம்பிவந்தார்களோ அந்த மக்கள் கூட்டத்தையே அவர்கள் வெறுப்பவர்களானார்கள்; அறம், தர்மம் போன்றவற்றின் விற்பனையாளர்களானார்கள் அல்லது இன்ப உணர்ச்சியின் வியாபாரிகளானார்கள். மக்களின் கவிஞர்களாக இருப்பதென்பது அவ்வளவாக லாபகரமானது அல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நாம் சங்க காலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பிரமாதமான மக்கள் கவிஞர் எவரையும் காணவில்லை என்பதற்கு அதுதான் காரணம்.

இரண்டு யுகங்களுக்கு நடுஎல்லையில் பாரதி பிறக்கிறார். அவரது சொந்தப் பிராந்தியத்தில் நிலவுடைமை முழு வீச்சில் இருக்கிறது. குடிசைகள் சூழப்பட்டதாக இருக்கிறது எட்டயபுர சமஸ்தானத்தின் அரண்மனை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் சாதியச் சமூகமும் முழு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பக்கம் நிலவுடைமை அந்தப் பக்கம் சனாதனம் என்ற சூழலில் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறக்கிறார் பாரதி. இத்துடன், நவீனத்துவமும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளை, தொழில்புரட்சியின் அதிகாலைப் பொழுதும்கூட.

புதிய யுகத்தைப் பழைய யுகம் துயர் நிரம்பிய கண்களுடன் எதிர்கொள்கிறது. புது யுகத்தின் தோற்றமே பழைய யுகத்துக்குச் சவால் விடுக்கிறது. அப்படிப்பட்ட யுகத்தில் பிறந்த பாரதி, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போர்க்களத்தின் மாபெரும் போராளியாக உருவெடுத்தார். இப்படிப்பட்ட ஒரு நாட்டில், வரலாறு மிக மெதுவாக நகரும் ஒரு நாட்டில், அதற்கு விசையுடனான ஒரு உந்தித்தள்ளல் கிடைத்தால் வேகமாக நகரும் என்ற நிலை கொண்ட ஒரு நாட்டில் பாரதி பிறந்தேவிட்டார். ஒரு மக்கள் கவிஞராக எப்படிப்பட்ட வேகமான உந்தித்தள்ளலை அவர் இந்நாட்டின் வரலாற்றுக்குக் கொடுத்தார் என்பதில்தான் பாரதியின் மகத்துவம் பெரும்பாலும் அடங்குகிறது.

“பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!

பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட. அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு பாரதி கொதித்துப்போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண் முன்னால் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்ததும்தான்.

மக்களெல்லாம் அச்சத்தில் உறைந்திருக்கக் கண்டார். துப்பாக்கி வைத்திருக்கும் அந்நியர்களைப் பார்த்து மட்டுமே அவர்கள் அஞ்சவில்லை. சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் சகோதரர்களைக் கண்டும் அஞ்சினார்கள். பேய்களையும் ஆவிகளையும் கண்டு அஞ்சினார்கள். இப்படிப்பட்ட மக்களால் தங்கள் நாட்டுக்கான விடுதலைப் போராட்ட வீரர்களாக ஆக முடியாது. ஆகவேதான், தன் நாட்டு மக்களை அச்சத்திலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுவிக்க முனைந்தார் பாரதி.

உள்நோக்கம் கொண்ட சிலர் பாரதியின் சித்திரத்தை விரிவானதாக - தேசியக் கவியாக - விரிக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தச் சித்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அல்ல, ‘மக்கள் கவி’ என்ற பாரதியின் இன்னொரு சித்திரத்தை ‘தேசிய கவி’ என்ற பிரம்மாண்டமான சித்திரம் மறைக்க உதவும் என்பதற்காகவும்தான் இம்முயற்சி.

ஆனால், இந்த மக்கள் கவியானவர் தனது நாட்டின் பழமைவாத மரபுகள், சிந்தனைகள் போன்றவற்றைத் தோலுரித்துக்காட்டத் தயங்கியதே இல்லை. பழமையில் ஊறியவர்களை ‘அறிவீலிகாள்’ என்று கடுமையான சொற்களைக் கொண்டே வசைபாடுகிறார். மாயாவாதத்தையும் கடுமையாக எதிர்த்து மரபுவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார்.

மாயாவாதம் நம்மைச் செயலற்றுப்போகச் செய்துவிடும் என்கிறார். பசி, வறுமை, அறியாமை இவை மூன்றையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். பணம் படைத்தோரின் கொடுமைகளுக்கு எதிராகத் தனது ஆற்றல்மிகுந்த குரலை எழுப்புகிறார், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார்.

“பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!

தனது நாட்டு மக்கள் நிறைவாழ்வு வாழ்ந்து, தங்கள் அறிவுப் புலன்களை மேம்படுத்திக்கொண்டு, வணிகத்தில் சிறந்து விளங்கி, தங்கள் மண்ணைத் தொழில்மயமாக்கி, புதுயுகத்தின் எல்லா பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மதம் என்பது அர்ச்சகர்கள், சுலோகங்கள் பாடுதல் போன்றவற்றைச் சார்ந்ததன்று, மானுடத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் சேவை செய்வதே அதன் விரிவான பொருளில் அவருக்கு மதமாகப் பொருள்படும்.

மக்கள் கவிஞனுக்கு முன்னுள்ள பணி மிகவும் பெரியது. புது உண்மையை மக்கள் உணரும்படி செய்வது, புதுப் பாதையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது, எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்குப் புது வழிமுறையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது ஆகியவைதான் ஒட்டுமொத்தமாக அவனது பணிகள்.

புரட்சியாளரைவிட கடினமான பணி அது. மக்களின் கவிஞனுக்கு ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த புகழாஞ்சலி எதுவாக இருக்கும் என்றால், அது இந்தப் போரைத் தொடர்வதுதான், மக்கள் விடுதலைக்காகப் போரிடுவதுதான், அதன் மேன்மையான, முழுமையான அர்த்தத்தில். இதைச் செய்துமுடிக்கும் திறன் படைத்தோர் நம்மிடையே இருக்கிறார்கள்; போர் முடிக்கப்படும் உறுதியாக!

நன்றி - இந்து தமிழ் திசை

Related Stories

Related Stories