முந்தைய பகுதியை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
“உலகமே கொரோனாவுக்கு எதிராக இயங்கியபோது என்ன செய்தார் மோடி?” - மன்னிக்க முடியுமா? பகுதி : 1
மார்ச் 8ம் தேதி இந்தியா முழுவதும் மொத்தம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. அன்றைய தினம் தான் பிரதமர் தலைமையில் முதன்முதலாக கொரோனா சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.
சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருந்தார். ஆனால் உள்துறை அமைச்சர் இல்லை. வெளிநாட்டு கொரோனாவைப் பற்றித்தான் பேசினார்களா? இந்தியாவுக்குள் வந்துவிட்ட கொரோனாவைப் பற்றி பேசவில்லையா?
சீனாவில் உருவாகி 94 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்குப் பரவி, 3,070 பேர் இறந்து போன பிறகு பிரதமர் சொல்கிறார்: ''கொரோனா வைரஸ் சூழலை எதிர்கொள்ள அமைச்சகம், துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாதுகாப்புக்குரியவை".
அன்றைய தினம் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துவிட்டார். கேரளாவில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் 27 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். கூடுதலாக 2 பேருக்கு தொற்று உறுதியானது.
இத்தாலியில் அன்று மட்டும் 133 பேர் பலியானார்கள். ஈரானில் அன்று மட்டும் 49 பேர் பலியானார்கள்.
இவ்வளவுக்கு மத்தியிலும் மார்ச் 17ம் தேதி வங்க தேசத்துக்கு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடு குறித்து இந்திய அரசு அறிக்கை கொடுத்தது நண்பர்களே!
இவ்வளவுக்கு மத்தியிலும் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வர கொல்லைப்புற வாசலில் இருந்து ரகசியமாக எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு இருந்தார்கள் நண்பர்களே!
இவ்வளவுக்கு மத்தியிலும், அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மலரட்டும் என்று ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் நண்பர்களே!
இவ்வளவுக்கு மத்தியிலும் டெல்லி வன்முறைக்கு ஹவாலா பணம் தான் காரணம் என்று நெற்றி வேர்வை குர்தாக்களில் விழ கர்ஜித்துக்கொண்டு இருந்தார் அமைச்சர் அமிஷ்தா!
இவர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல இந்தியாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை நண்பர்களே!
மார்ச் 12 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 64 ஆகிவிட்டது.
இதன் பிறகுதான் அனைத்து சுற்றுலா விசாக்களையும் ரத்து செய்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இந்த நடவடிக்கையை பிப்ரவரி 3ம் தேதியே செய்துவிட்டது ரஷ்யா. இந்தியா 40 நாட்கள் கழித்துச் செய்தது.
மார்ச் 13 கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்றால் பலியானார் என்பது அச்சமடைய வைத்தது மக்களை.
இந்தியாவில் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 73 ஆகிவிட்டது. உலகம் முழுக்க 4722 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள். சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார் பிரதமர். கொரோனாவை எதிர்த்து போராட அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தார்.
மார்ச் 15ம் தேதி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 84 ஆகி, இரண்டு பேர் பலியானார்கள் என்பதற்குப் பிறகு தேசியப் பேரிடர் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது.
இரண்டே இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டதும் கேரள மாநிலப் பேரிடர் என்று அறிவித்தவர் பினராயி விஜயன். பிப்ரவரி 4ம் தேதியே அறிவித்துவிட்டார் பினராயி. 40 நாள் கழித்து அறிவிக்கிறார் பிரதமர்.
இந்தியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரை என்று அறிவிக்கப்பட்ட அன்று, காஷ்மீரைச் சேர்ந்தவர்களோடு தீவிர ஆலோசனையில் இருந்தார் பிரதமர். மெகபூபா கட்சியில் இருந்து விலகி வந்தவர்களாம் அவர்கள். அவர்களிடம், ''ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து நான் பாடுபடுவேன்" என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
மாநில அந்தஸ்தை பறித்தது யார்? சீனாவா? யாரை எதிர்த்து இவர் போராடப் போகிறார்?
மாநில அந்தஸ்தை அவரே பறிப்பாராம்? இவரே கொடுப்பாராம். இப்படி ஒரு காஷ்மீர் படம் ஓடிக் கொண்டு இருந்தது டெல்லியில். இதைச் சொல்வதற்குக் காரணம், கொரோனா அச்சம் இந்த அரசாங்கத்துக்கு அதுவரை வரவில்லை என்பதற்காகத்தான்.
அன்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாடு, இந்தியப் பிரதமரிடம் பேசினார். இஸ்ரேலுக்கு முகக் கவசங்கள், மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக இஸ்ரேலைச் சேர்ந்த சேனல் 13 செய்திகள் வாசித்தது. இதுதொடர்பாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் இடாமர் குரோட்டோவின் பேட்டியை அந்த சேனல் ஒளிபரப்பியது. மருந்துகளுக்கான மூலப் பொருளை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய மோடி அனுமதி அளித்துவிட்டார். மருந்துகளை இஸ்ரேலுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து கொள்ள சிறப்பு அனுமதியை இந்திய அரசு அளித்துவிட்டது என்றார் அவர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 107 பேருக்கு ஏற்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். இந்தியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா பற்றிய கவலை இல்லை. காஷ்மீரைப் பற்றித்தான் கவலை. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சில கட்சியினரைக் கூட்டி உட்கார வைத்துக் கொண்டு ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தந்துவிடுவோம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார் உள்துறை அமைச்சர்.
உலகம் முழுக்க 6685 பேர் பலியானார்கள். 143 நாடுகளுக்கு பரவிவிட்டது கொரோனா. 1,74,077 பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். இத்தாலியில் ஒரேநாளில் 368 பேர் இறந்து போனார்கள். வாடிகன் வெறிச்சோடியது. பக்கிம்ஹாம் அரண்மனையில் இருந்து 93 வயதான ராணி எலிசபெத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள்.
இந்தியாவில் 114 பேரைத் தொற்றிவிட்டது. தமிழகத்தில் 22 பேருக்கு அறிகுறி என்றார்கள். இவ்வளவு ஏன், நம்மூர் எடப்பாடியே தமிழ்நாட்டு பள்ளி,கல்லூரிகளை மூடிவிட்டார்.
ஆனால் மார்ச் 17ம் தேதி மத்திய அரசின் கவலை எல்லாம் மத்தியப்பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
ஆனால் மத்திய அரசின் கவலை எல்லாம் ரஞ்சன் கோகோயை எம்.பி.யாக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதுதான்.
நாடும் நாட்டு மக்களும் கொரோனா பீதியில் உறைந்து கிடக்க, மத்திய அரசு எதைப்பற்றி கவலைப்பட்டது தெரியுமா?
சமஸ்கிருத பல்கலைக் கழகங்களை தரம் உயர்த்துவதற்கான மசோதாவைக் கொண்டு வந்து அதை நிறைவேற்ற துள்ளத்துடிக்க பேசிக்கொண்டு இருந்தது. உயிர்வாழ்பவர் குறித்த கவலையே இல்லை!
ராஷ்ட் ரீய சமஸ்கிருத சனிஸ்தான், ஶ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட் ரிய சமஸ்கிருத வித்யா பீடம், திருப்பதி ராஷ்ட் ரிய சமஸ்கிருத வித்யா பீடம் ஆகிய மூன்று நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தினார்கள்.
முதலில் சமஸ்கிருதம் காப்பாற்றப்படட்டும் என்று நினைத்திருக்கலாம். அதுதான் முக்கியம் என்று நினைத்திருக்கலாம்.
மார்ச் 18 கொரோனா பாதிப்பு இந்தியாவில் 138 ஆகிவிட்டது. மூன்று பேர் இறந்து போனார்கள்.
'கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியா' என ஹேஷ்டாக் போட்டுக்கொண்டு இருந்தார் பிரதமர்.
'கொரோனாவை தடுக்கும் இதர சூழ்நிலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் புதிய உத்வேகம் கிடைக்கும்' என்று எதையோ சொல்லிக் கொண்டு இருந்தார்.
இதையெல்லாம் விட புத்திசாலித்தனமான நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்தது.
ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகளை 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆக்கிவிட்டார்கள். இது கொரோனா தடுப்பு நடவடிக்கையாம். மக்கள் அங்கு அதிகமாக கூடுகிறார்களாம். 50 ரூபாய் ஆக்கிவிட்டால் கூட மாட்டார்களாம். என்ன புத்திசாலித்தனம்?
தொடர்ந்து ஒரே தெருவில் திருடு போய்க்கொண்டே இருந்தது. திருடனை போலீஸால் பிடிக்கவே முடியவில்லை. சுடுகாட்டு வாசலில் போய் உட்கார்ந்து கொண்டாராம் போலீஸ்காரர். ''அவன் இப்ப எங்க வேணும்னாலும் ஓடி ஒளியட்டும், செத்தா இங்க தான வரணும்'' என்றாராம் அந்த மகா புத்திசாலி. அத்தகைய புத்திசாலித்தனமான நடவடிக்கைதான் இதுவும்.
உலகமே இருள ஆரம்பித்துவிட்டது மார்ச் 18ல்!
இங்கே எடப்பாடி சட்டசபை நடத்தினார். அங்கே மோடி, நாடாளுமன்றம் நடத்தினார்.
இங்கே தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொன்னார், சபையை ஒத்தி வையுங்கள் என்று.கேட்கவில்லை எடப்பாடி! அங்கே பா.ஜ.க எம்.பி.க்களே எம்.பி-க்கள் கூட்டத்தில் மோடியிடம் சொன்னார்கள்.
''விடுமுறை விடவேண்டும் என்று மருத்துவப் பணியாளரோ, ரயில்வே பணியாளரோ கேட்கவில்லை. எம்பிகள் எதற்காக கேட்கிறீர்கள்" என்று கோபப்பட்டார். பா.ஜ.க எம்பி விஜய் கோயல் கடிதமே கொடுத்தார். ஏப்ரல் 3 வரைக்கும் சபை நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.
விபரீதம் வீட்டுக்குள் வந்துவிட்டதை மார்ச் 19 தான் பிரதமர் உணர்ந்தார். மார்ச் 22ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு என்று அறிவித்தார்.
இந்த ஒரு நாள் ஊரடங்குக்குள் இந்தியாவில் 151 பேருக்கு பரவிவிட்டது. அவர்கள் எத்தனை பேருக்கு பரப்பினார்களோ என்று தெரியாத நிலையில் அப்போதும் விடவில்லை மார்ச் 20ம் தேதி குஜராத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனத்துக்கு தேசியத் தகுதி வழங்கும் மசோதாவை நிறைவேற்றி முடித்துவிட்டார்கள். அப்போது குஜராத் மருத்துவமனையில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மார்ச் 22 ஊரடங்கு அன்று இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 360 ஆகிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 7 ஆகிவிட்டது.
எதற்காக மணி அடிக்கச் சொன்னார் என்றே தெரியாமல் மணியடித்தார்கள்.
இரவு ஒன்பது மணி வரை ஊடரங்கு என்று சொல்லிவிட்டு அதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன்னதாக வாசலுக்கு வந்து மணியடி, கைதட்டு என்றார் பிரதமர். அஞ்சுமணியோடு கொரோனா ஒழிந்துவிட்டதாக கைதட்டியது தான் உலகத்தின் தனித்தீவாக இந்தியா இருக்கிறது என்பதைக் காட்டியது.
சீனாவில் 3245 பேர் பலியாகிவிட்டார்கள்.
இத்தாலியில் 3405 பேர் பலியாகிவிட்டார்கள்.
ஈரானில் 1284 பேர் பலியாகிவிட்டார்கள்.
ஸ்பெயினில் 803 பேர் பலியாகிவிட்டார்கள்.
பிரான்சில் 264 பேர் பலியாகிவிட்டார்கள்.
அமெரிக்காவில் 171 பேர் பலியாகிவிட்டார்கள்.
பிரிட்டனில் 103 பேர் பலியாகிவிட்டார்கள்.
தென்கொரியாவில் 91 பேர் பலியாகிவிட்டார்கள்.
நெதர்லாந்தில் 77 பேர் பலியாகிவிட்டார்கள்.
ஜெர்மனியில் 44 பேர் பலியாகிவிட்டார்கள்.
ஸ்விட்சர்லாந்தில் 33 பேர் பலியாகிவிட்டார்கள்.
இந்தியாவில் 7 பேர் பலியாகிவிட்டார்கள்.
இவை அனைத்தும் மார்ச் 22 நிலவரம். ஆனால் மோடி பந்த் சக்ஸஸ் என்று கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.
இந்த மரணப்பட்டியல் தான் மோடியை மனமாற்றம் செய்ய வைத்திருக்கும்.
மறுநாள் சொன்னார், 'மக்கள் யாரும் கொரோனாவை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை' என்று. அவரே மார்ச் 22 தான் சீரியஸாக எடுத்துக் கொண்டார்.
மார்ச் 24 அன்று மீண்டும் மக்கள் முன் தோன்றி மறுநாள் முதல் 21 நாள் ஊரடங்கு என்று சொன்னார்.
நாடாளுமன்றத்தை ஏப்ரல் 3 வரைக்கும் நடத்துவேன் என்றவர்கள் மார்ச் 24 அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் அளவுக்கு நிலைமை மோசம் ஆனது.
இந்திய எல்லையை நேபாளம் மூடக்கூடிய அளவுக்கு இந்திய நிலைமை மோசமானது.
இந்தியாவுக்கு உதவ சீனா தயார் என்று சீன அரசாங்கம் சொல்லும் அளவுக்கு அவர்கள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, இந்தியாவுக்கு உதவத் தயார் என்றார்கள்.
இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாத நிலையிலேயே கூட ஜனவரி மாதம் 23ம் தேதி சீனாவில் சில மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டது.
ஆனால் பல்லாயிரம் பேர் இறந்த பிறகும் அதை உணராமல் இருந்தது யார் தவறு?
நம் எல்லோரையும் விட அதிகநாடுகளைப் பார்த்தவர், அதிகநாடுகளுக்குச் சென்று வந்தவர், செல்லப் போகிறவர் மோடி அவர்களே!
இந்தியாவை விட உலகின் மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது முதலில் அவருக்குத் தான் தெரிந்திருக்க முடியும். தெரியாமல் போனது யார் தவறு?
மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார் பிரதமர். மன்னிக்க முடியுமா பிரதமரை?