உணர்வோசை

சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!

கீழடி வரையிலும் தமிழர் வரலாற்றை மேல் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சிந்துவெளி நாகரிகம் மேலெழுந்து வந்த வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

1924ம் ஆண்டின் செப்டம்பர் மாதம். The Illustrated London News பத்திரிகை இந்தியாவை பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

“பல்லாண்டு காலமாக புதையுண்டு கிடக்கும் ஒரு பெரும் நாகரிகத்தை வெளிக்கொணரும் வாய்ப்பு எப்போதாவதுதான் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு கிடைப்பதுண்டு. அப்படியொரு கண்டுபிடிப்பின் தொடக்கத்தை சிந்து சமவெளியில் நாம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது”

உலக வரலாறுகள் திடுமென ஓர் அதிர்வை கண்டன. சுமேரியா, எகிப்து, மெசப்பட்டோமியா என நாகரிகங்களை கணக்கு காட்டிக் கொண்டிருந்த வரலாற்றை இந்தியா தன் பக்கத்துக்கு இழுத்தது. செங்கற்களை கொண்டு செம்மையான திட்டமிடலுடன் கட்டப்பட்டிருந்த நகரங்கள் மேற்குலகுக்கு வியப்பை ஏற்படுத்தின. காட்டுமிராண்டிகளும் கோவணாண்டிகளும் இருந்த பகுதியாக மட்டுமே அறியப்பட்டிருந்த நிலம், ஐரோப்பியர்களின் புதுக்கதையை சொல்லத் தொடங்கியது. உலகமும் தன் அகங்காரத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டு சிந்துவெளி கொடுத்த நகரங்களை வரலாறாக்கத் தொடங்கியது. ஆனால், சிந்து சமவெளிக்கு இப்புறம் இருந்த இந்தியப்பகுதியில், பெரும் கொந்தளிப்புகள் உருவாகத் தொடங்கின.

1924ம் ஆண்டின் செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த Illustrated London News பத்திரிகையில் சிந்துவெளி பற்றிய தகவலையும் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த John Marshall எழுதியிருந்தார். அது வரை இந்திய வரலாற்றின் உள்ளீடாக ஓடிக் கொண்டிருந்த ஆரிய-திராவிட போர், மேலேழுந்து நேரடி அரசியலாக மாறத் தொடங்கும் வாய்ப்பை சிந்து சமவெளி நாகரிகம் அளித்தது.

சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!

இன்னும் நான்கு வருடங்களில் சிந்து சமவெளி அகழாய்வின் நூற்றாண்டு தொடங்கவிருக்கிறது. ஆரிய-திராவிட அரசியல் போர் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இன்றைய கீழடி வரையிலும் தமிழர் வரலாற்றை மேல் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சிந்துவெளி நாகரிகம் மேலெழுந்து வந்த வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

1800-களின் ஆரம்பங்களில் இந்தியாவை ஆண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போருக்கான முனைப்புகள் இருந்தன. ரஷ்ய ராஜ்ஜியம் ஆப்கானிஸ்தானை கடந்து இந்தியாவை பிடித்துவிடுமோ என்கிற பயம் ஆங்கிலேய அரசுக்கு இருந்தது. அதனால், ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படாத ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வேவு பார்ப்பதற்கு பல உளவாளிகளை அந்த காலகட்டத்தில் அனுப்பியது ஆங்கிலேய அரசு. அவர்களில் முதன்மையானவர் Charles Masson என்பவர்.

Charles Masson-ன் இயற்பெயர் ஜேம்ஸ் லூயிஸ். கிழக்கிந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். உளவு வேலைக்காக 1829ம் ஆண்டில் ராணுவத்திலிருந்து தப்பியோடினார். ஆப்கானுக்கு அருகே இருந்த சிந்துவெளிகளில் சுற்றித் திரிந்தார். பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அப்புறத்தில் இருந்த இடங்கள் பற்றிய வேவு அறிக்கை கொடுப்பதே அவருக்கு இடப்பட்டிருந்த வேலை. தன் பெயரை மாற்றிக் கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து பஞ்சாப் மாகாணத்தை சார்லஸ் மேசன் சுற்றினார். அப்பகுதிகளின் வரலாற்று தகவல் பலவற்றை என்னவென தெரியாமலே சேகரித்தார். தன் பயண அனுபவங்களை 'Narrative of Various Journeys in Baluchistan, Afghanistan and the Punjab' என்ற பெயரில் புத்தகமாக பிற்பாடு பதிப்பித்தார். அதிலிருந்துதான் சிந்துவெளி இடிபாடுகளை பற்றி பிரிட்டிஷ் அரசு முதன்முதலாக அறிந்துகொண்டது.

சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!

ஆப்கானிஸ்தானுக்கு தன் வணிகத்தை நீட்டி மெல்ல தன் கட்டுப்பாட்டுக்கு அப்பகுதியை கொண்டு வரும் அடுத்தக் கட்ட திட்டத்தை கிழக்கிந்திய கம்பெனி வகுத்தது. சிந்து, ஆப்கான் பகுதிகளில் வணிகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் சாத்தியங்களை ஆராய Alexander Burnes என்பவரை கிழக்கிந்திய கம்பெனி 1831ம் ஆண்டு நியமித்து அனுப்பியது. சார்லஸ் மேசனுக்கு பிறகு, பர்ன்ஸ் கண்களுக்கும் ஹரப்பா பட்டது. சுட்ட செங்கற்களைக் கொண்டிருந்த இடிபாடுகள் அவரை ஆச்சரியப்படுத்தியது. அந்த இடிபாடுகளின் அருமை தெரியாமல் உள்ளூர் மக்களால் செங்கற்கள் உடைக்கப்பட்டிருந்தன.

1849ம் ஆண்டில் பஞ்சாப் மாகாணம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வருகையில் ரயில் போக்குவரத்துக்காக தண்டவாளங்கள் போடப்பட்டன. தண்டவாளத்தை தாங்குவதற்கான கற்களாக ஹரப்பாவின் செங்கற்களே உருவப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

சிறிய அலட்சியமும் கூட சிந்து சமவெளி நாகரிகத்தை ஒரேயடியாக மண்ணுக்குள்ளேயே கிடத்தியிருக்கும் வாய்ப்புகள் நிறைந்த காலகட்டம் அது.

கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு இங்கிலாந்து ராணியின் அதிகாரத்துக்கு இந்தியா கை மாறியபோது, இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக அலெக்ஸாண்டர் கன்னிங்காம் நியமிக்கப்பட்டார். 1853ம் ஆண்டில் கன்னிங்ஹாம் ஹரப்பாவை ஆராய்ந்தார். சிந்துசமவெளியின் முதல் முத்திரை தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

1872ம் ஆண்டில் சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் முத்திரை, காளை முத்திரை!
சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!

“ஹரப்பாவில் ஒரு முக்கியமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு முத்திரை... மென்மையான கருங்கல்லில் எந்தவித பூச்சும் இல்லாமல் முத்திரை பதிய வைக்கப்பட்டிருக்கிறது. திமிலில்லாத ஒரு காளை, வலது பக்கம் பார்த்தபடி நிற்க, கழுத்துக்கடியில் இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன. காளைக்கு மேல் ஆறு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. என்ன மொழி என எனக்கு தெரியவில்லை. இந்திய எழுத்துகள் இல்லை. காளையும் திமிலில்லாமல் இருப்பதால், அந்த முத்திரை இந்தியாவுக்கு அந்நியமானது என கருதுகிறேன்”

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமின் அவதானிப்பு இப்படியாகத்தான் இருந்தது.

நிதி வழங்கப்படாததால் இந்திய தொல்லியல் துறை சில காலம் கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் 1904ம் ஆண்டில்தான் தொல்துறை உயிர் கண்டது. தலைவராக ஜான் மார்ஷல் பொறுப்பேற்றார். ஹரப்பா பகுதியை ஆராய்வதற்கென பிரத்யேகமாக ஹிரானந்த் சாஸ்திரி என்பவர் நியமிக்கப்பட்டார். பவுத்த காலத்துக்கும் முந்தைய காலத்தையது ஹரப்பா என்றார் ஹிரானந்த்.

ஆர்வம் மேலிட, ஜான் மார்ஷல் ஆய்வை விரிவாக்கினார். ஹரப்பாவில் இருந்த இரண்டு மேடுகளையும் அகழ்வாராயவென தயாராம் சாஹ்னியை நியமித்தார் ஜான் மார்ஷல்.

ஹரப்பாவில் ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், தெற்கே சிந்து நதிக்கரையில் மொஹஞ்சதாரோ என்ற பகுதி கவனம் பெற்றது. அங்கிருந்த பவுத்த விஹார்களை ஆராயச் சென்றிருந்தார் ஆர்.டி.பேனர்ஜி என்பவர், வரலாற்றுக்கு முந்தைய காலத்து மிச்சங்களை கண்டுபிடித்தார்.

1923ம் ஆண்டு மார்ஷலுக்கு பேனர்ஜி எழுதிய கடிதத்தில், மொஹஞ்சதாரோவின் காலம் மிகவும் பழமையானதாக இருப்பதாகவும் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் பலவும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டவை போலிருப்பதாகவும் கூறியிருந்தார். இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளில் இருந்த எழுத்துகளின் ஒற்றுமையும் மார்ஷலுக்கு தெரிந்தது. ஒரு மிகப்பெரும் கண்டுபிடிப்பின் விளிம்பில் இருப்பதை மார்ஷல் உணர்ந்தார்.

இரண்டு தளங்களில் இருந்து சாஹ்னியையும் பேனர்ஜியையும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களோடு ஓரிடத்துக்கு வரச் சொன்னார் ஜான் மார்ஷல். பெரும் உரையாடலும் விவாதமும் நிகழ்ந்தது. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ கண்டுபிடிப்புகள், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக இருக்குமென்ற தெளிவு பிறந்தது. Illustrated London News பத்திரிகையை தொடர்பு கொண்டு சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியை பற்றிய முதல் அறிவிப்பை உலகுக்கு வெளியிட்டார் ஜான் மார்ஷல்.

“இந்திய தொல்பொருட்களின் காலத்தை வைத்து பார்த்தால், கிமு 3ம் நூற்றாண்டுக்கும் முந்தையதாக இப்பகுதிகள் இருக்கலாம். இந்த இரண்டு இடங்களிலும் உள்ள கட்டுமானங்கள் பல நூறு வருடங்களுக்கு முந்தைய நகரங்களை குறிப்பிடும்வகையில் இருக்கின்றன. பல விஷயங்களை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அநேகமாக இவை ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரங்களாக இருக்கலாம்”
AH Sayce
AH Sayce

ஜான் மார்ஷலின் கட்டுரை வெளியான ஒரு வாரத்தில் பத்திரிகைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் A.H.Sayce என்னும் பேராசிரியர். மார்ஷல் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் இருக்கும் முத்திரைகள், சாய்ஸ் கண்டுபிடித்த 2300 வருடங்களுக்கு முந்தைய சுமேரிய முத்திரைகளை போலிருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1924ம் ஆண்டின் செப்டம்பர் 27ம் தேதி சாய்ஸ் Illustrated London News பத்திரிகைக்கு எழுதிய அக்கடிதம் சிந்து சமவெளி நாகரிகத்தை 2000 வருடங்களுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு சென்று போட்டது.

இந்தியாவின் அரசியல் முளைவிடத் தொடங்கியது. சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆரிய நாகரிகம் என்பதற்கான புனைவுகள் வெளிவரத் தொடங்கின. சிந்து சமவெளி பகுதியில் முறையான அகழ்வாராய்ச்சி 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவில் இருக்கும் ஆரிய அரசியல் நிலைகொள்ளாமல் தவிக்கத் தொடங்கியது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களின் வேத நாகரிகமே என சொல்லி பார்த்தது. பலனில்லை. ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் என்ற பேச்சையும் வளர்த்தெடுக்க முயன்றனர். சமஸ்கிருதமே இந்தியர் மொழி என்றும் சொல்லி பார்த்தனர். எல்லாவற்றையும் தாண்டி சிந்து சமவெளி ஆழம் கண்டுகொண்டிருந்தது.

ஜான் மார்ஷல் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து அவற்றின் விளக்கங்களை Mohenjo Daro and the Indus Civilization என்ற புத்தகமாக 1931ம் ஆண்டில் வெளியிட்டார். இன்று கீழடிக்கு இருக்கிற அதே பிரச்சினைகள் அன்றும் இருந்தது. மொழி குறித்தான பிரச்சினைகள்! அப்புத்தகத்தில் சிந்துவெளி எழுத்தின் மொழியை குறிப்பிடுகையில் இப்படி கூறுகிறார்

“சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களின் வருகைக்கும் முந்தையது. ஆதலால் அங்கு இருக்கும் மொழிகள் நிச்சயமாக சமஸ்கிருதமாக இருக்காது. சிந்துவெளி மொழிகளில் சிலவை திராவிட மொழிகளாக இருக்கலாமென நம்புகிறேன். ஆரியர்களுக்கு முன் வட இந்தியாவில் இருந்தவர்கள் அனைவரும் திராவிட மொழிகள் பேசியவர்கள். சிந்துவெளியில் காணப்படும் அளவுக்கான முதிர்ந்த நாகரிகம் அவர்களுடையதாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். மேலும் சிந்து சமவெளிக்கு சற்று தூரத்தில் இருக்கும் பலுச்சிஸ்தானின் பகுதி ஒன்றில் திராவிட மொழி காணப்படுகிறது. அப்பகுதிகளில் இதனால் திராவிட மொழிகளின் பயன்பாடு அதிகம் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். ”
சங்பரிவாரை ஏன் சிந்து சமவெளி நாகரிகம் அச்சுறுத்துகிறது? - கீழடி வரை தொடரும் வரலாற்று அரசியல்!

ஆரியம் இந்தியாவுக்கு அயலானது என்பதை ஜான் மார்ஷல் மட்டுமல்லாமல் அவருக்கு பின் வந்த பல தொல்லியல் அறிஞர்கள் நிரூபித்தனர். சமஸ்கிருதமும் இந்தியர்களின் மொழி இல்லை என்பதை பலவிதங்களில் மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திவிட்டனர். ஆனாலும் ஆரியர்களுக்கு அதிகாரத்தை கைகளில் பிடித்திருக்க வழி இருக்க வேண்டும். ஏதோவொரு வகையில் இந்த நிலப்பரப்புக்கானவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1939ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கர், “இந்து நாகரிகத்தை பற்றி இதுவரை இந்தியா மீது படையெடுத்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்துக்களான நாம் கடந்த 8000 முதல் 10000 ஆண்டுகள் வரை இந்த நிலத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உரிமை கொண்டாடி வந்திருக்கிறோம். அந்நிய நாட்டினரால் படையெடுக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் உருவாகத் தொடங்கியது” என லாவகத்துடன் ஆரிய அரசியலை நுழைத்து புது வரலாறை எழுத தொடங்குகிறார்.

இந்துகளை சொல்லி தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஆரிய அரசியல் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட காலம், 1925ம் ஆண்டு! அதாவது ஜான் மார்ஷல் திராவிட மொழியினத்தின் நாகரிகத்தை உலகுக்கு அறிவித்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு.

அப்படியென்ன அரசியல் 1925ம் ஆண்டு தொடங்கப்பட்டது?

ஆர்எஸ்எஸ்!

எந்த திராவிட மொழியினத்தின் நாகரிகத்துக்கும் வரலாற்றுக்கும் பயந்து ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதோ அதே திராவிட மொழியினத்தின் தமிழ் தற்போது கீழடியில் கிளைத்து எழுந்து கொண்டிருக்கிறது.

1924 திராவிட மொழியினத்தின் வருடம். 1925 அதன் எதிரி ஆரியத்தின் வருடம். இன்னும் நான்கு வருடங்களில் வரும் நூற்றாண்டுக்குள் நம் வரலாற்றை உரக்க சொல்லி எதிரியை வீழ்த்தும் அரசியல் படைப்போம்.

- ராஜசங்கீதன்

Related Stories

Related Stories