உணர்வோசை

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

இன்று நீலகிரியில் நிகழ்ந்துகொண்டிருப்பது ‘இயற்கைப் பேரிடர்’ அல்ல. எல்லோரும் வெள்ளம் வெள்ளம் என்றிருக்க, என் காதுகளுக்கு மட்டும் வினை வினை என்று விழுகிறது.

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எங்களை இப்படியே விட்டுவிடுங்கள். உதவி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் நாங்கள். நான் நீலகிரிக்காகத்தான் பேசுகிறேன். நீலகிரியில் இருந்துதான் பேசுகிறேன்.

எல்லோரும் வெள்ளம் வெள்ளம் என்றிருக்க, என் காதுகளுக்கு மட்டும் வினை வினை என்று விழுகிறது.

நீலகிரியின் பூர்வ குடிகளில் ஒன்றான படுகர் இனத்தைச் சேர்ந்தவன் நான். நீலகிரியின் வளமையையும் பல்லுயிர்s சூழலையும் பழங்குடிப் பாடல்கள் வழி கேட்டு வளர்ந்தவன். அந்தவகையில், இன்று நீலகிரிக்கு நடந்துகொண்டிருப்பது ‘இயற்கைப் பேரிடர்’ அல்ல என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்.

காடு புகுந்து திருடிய மனிதர்களின் வீடு புகுந்து திருடுகிறது மழை. இதுவரையில் வீடு புகுந்து 2,400 பேரை வலிந்து வெளியில் விரட்டியிருக்கிறது. 50 கிராமங்களைச் சுற்றிவளைத்து சர்வாதிகாரம் செய்கிறது.

கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியிருப்பதால் தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டியாக விளங்கும் நீலகிரிக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

வீடிழந்தவர்களும்,வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களும் அரசுப் பள்ளிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனடியாக மாற்று செய்யாத நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது.

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

துரோகத்துக்குக் கிடைத்த வட்டி

நீலகிரி மண்ணுக்கு மக்கள் செய்த சூழல் துரோகத்தை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் காலம் இது. காட்டுக்குள் காட்டேஜ்கள், நகரத்தில் அடுக்குமாடிகள், விலங்குகளின் வலசை மாற்றம், வனக்கொள்ளை, சதுப்புநிலக் கொலை, புல்வெளி நாசம், போர்வெல் துளை, பொக்லைன் பிளப்பு, ரியல் எஸ்டேட் நில பேரம், பணப்பயிர் விவசாயம், வன வாழ்வியல் அழிவு என்று இன்னும் நிறைய நிறைய நிறைய துரோகங்களைச் சொல்லலாம். நாங்கள் எங்கள் மண்ணுக்குச் செய்த துரோகத்தின் பட்டியல் நீள்கிறது. இயற்கை நன்றாகவே பாடம் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறது.

கொல்லப்பட்ட புலிகளின் ஆவிகளும், சிறுத்தைகளின் ஆவிகளும், யானைகளின் ஆவிகளும், மான்களின் ஆவிகளும், மரங்களின் ஆவிகளும், அருவிகளின் ஆவிகளும் இனி எம்மை விடுவதாய் இல்லை.

இந்த மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், மரங்களுக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொண்ட மழை, டன் கணக்கில் கொட்டி மண்ணுக்குள் சேமித்து வைத்த பூச்சிக்கொல்லி ஆலகாலத்தை ஆறாவது நாளாகக் கழுவிக்கொண்டிருக்கிறது.

பள்ளத்தாக்குகளும் சரிவுகளும் பெரும் மலைச்சிகரங்களும் மிகுந்திருக்கும் இந்த நீலகிரியில் பெய்த மழை வடியாமல் இருப்பதுதான் புவியியல் ஆச்சரியம். நதி வழித்தடங்கள் முற்றிலும் கான்கிரீட் காடுகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் வாரியம் இனியும் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நீலகிரி கடுமையான நிலச்சரிவையும் மண் வெடிப்பையும் சந்திக்கும். ஒரு குளிர்ப்பிரதேசத்தை வெப்ப மண்டலமாக மாற்றியதால்தான் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இயல்பான வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது.

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

பழங்குடியினரிடமிருந்து பறித்த வந்தேறிகள்

புல்வெளிகளால், சதுப்புகளால், பெருவனங்களால் ஆன இந்தப் பிரதேசம் பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவரையில் சொர்க்கமாகத்தான் இருந்தது. வந்தேறிகள் இதை வணிக நிலப்பரப்பாக மாற்றிய பிறகுதான் இந்த அழகிய தேசம் கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகி வருகிறது. நரகத்தின் அத்தனை ரணங்களையும் தினக்கூலிகள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமே அனுபவிப்பதுதான் ஆகப்பெரிய சோகம். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் திரும்பிவரும்வரை ஒரு நாளின் பகல் முழுவதையும் தேயிலைத் தோட்டத்தில் செலவிட்டு ரூ.200, ரூ.400 என்னும் சொற்பக் கூலியை மட்டுமே கொண்டு வந்து பசியாறும் சாமானியர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது இந்தக் கோரமழை!

நம் தேசம் நம் சேதம் நம் மக்கள் #nilgiriflood2019 என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்தவர்கள் உதவிக்கரம் தீட்டினார்கள். குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 368 குடும்பங்கள் வீடுகளை இழந்து பிக்கட்டி அரசுப் பள்ளி நிவாரண முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மனிதர்களால் செய்யமுடிந்த ஆகச்சிறந்த உதவிகள்,
ஒரு மெழுகுவர்த்தி
ஒரு தீப்பெட்டி
ஒரு குளிராடை
ஒரு போர்வை
ஒரு மாத்திரை
ஒரு மழையாடை
ஒரு பன்
ஒரு தேனீர்
ஒரு பால் பாக்கெட்
ஒரு நாப்கின்
ஒரு டார்ச் - இவைதாம்.

ஆனால், இவையும் ஒரு குப்பைக்கூளமாக இதே மலையில் மலை போல் குவிந்து, வெள்ளம் ஏற்பட்ட காரணிக்கு வலு சேர்க்கவிருக்கிறது. இந்த முரணை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

சுற்றுலா மண்டலம் அல்ல; சூழல் மண்டலம்

பாதிக்கப்பட்ட பிறகு மனிதர்களுக்குக் கருணைகாட்டுவதைவிட எப்போதும் இயற்கையிடம் அன்பு காட்டுவதுதான் இதுபோன்ற பேரிடர்களால் நாம் கற்கும் பாடமாக இருக்கிறது.

சுற்றுலாவாசிகள் இந்த மண்ணை உல்லாச சொர்க்கபுரியாக மட்டுமே பார்க்கும் அழகியல் பார்வை ஆபத்தானது. ஆசியாவின் சூழல் மண்டலமாகப் பார்க்கும் அறிவுப்பார்வை அவர்களுக்கு அவசியம் தேவையாக இருக்கிறது. இப்போது இருக்கும் சூழலை ஆராய்ந்து தொலைநோக்கோடு பார்க்கும்போது நீலகிரியின் சுற்றுலா ஸ்தல தகுதியை அரசு நீக்கினால் மட்டுமே இந்த இயற்கையின் தாய்மடி உயிர்பிழைக்கும்.

வெளியூர் விவசாயிகள் தங்களின் சுயநல பணத்தாசைக்காக நீலகிரியின் நிலங்களை லீஸுக்கு வாங்கி நீர்வழித்தடங்களை மாற்றியமைப்பதும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொள்வதும், தங்கும் விடுதி நடத்தும் பெருமுதலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் பொது குடிநீர் மூலங்களை தன்னகப்படுத்திக்கொள்வதும், புல்வெளிகளாக இருந்த மேய்ச்சல் நிலங்கள் புதிய வேகன் நிலங்களாக மாற்றியமைக்கப்பட்டதாலும் நீலகிரி ஈரப்பதத்தைக் கணிசமாகவே இழந்துள்ளது.

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

நீர்வஞ்சி மரங்கள் எங்கே?

இந்த மண்ணில் இயற்கையாகவே இருக்கும் நீர்வஞ்சி மரங்கள்தாம் பூமிக்கடியில் வடியும் தண்ணீரை உறிஞ்சித் தருகிறது. இந்த இயற்கை முறையை முற்றிலுமாக வனவேட்டைக்குப் பலி கொடுத்துவிட்டு போர்வெல் போட்டு மலைச்சிகரங்களைத் துளைத்து இந்த மலை மண்ணை ஊனப்படுத்தியதால்தான் இத்தனை காயங்கள்.

இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி கொல்லைகளில் உறங்கிக்கொண்டிருந்த விதைகளையும் செடிகளையும் இரவோடு இரவாக பேய் மழை திருடிச் சென்றிருக்கிறது.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி இப்போது ஞானத்தைத் தந்திருக்கிறது. ஆம்... புல்லையும் பூண்டையும் களைகளாக நினைத்து அழித்தொழிக்கப் போடப்பட்ட களைக்கொல்லிகள்தாம் ரவுண்டப் செய்து தோட்டாக்களால் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் போல மழைத் தோட்டாக்களால் தொடர் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இயற்கை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்வதே இல்லை. நாம் கொடுத்ததைத்தான் இப்போது நமக்குத் திருப்பித் தந்திருக்கிறது.

“நாம் கொடுத்ததைத்தான் நமக்குத் திருப்பித் தருகிறது இயற்கை..” : நீலகிரியிலிருந்து ஒரு கண்ணீர்க் குரல்!

வெள்ளத்தால் வீழ்வதே மேல்

பவானி பிறக்கும் இந்த ஊரில் மினரல் தண்ணீர் விற்பனை வணிகப்பொருளாக மாறியதற்காக ஆதங்கப்படுவதா? பவானியே தன் பிள்ளைகளுக்கு எமனாக மாறியதற்காக அழுவதா? சாலைகளுக்காகச் செலவு செய்யும் கோடிகளில் சில லட்சங்களை சோலைகளுக்காகச் செலவு செய்யாததற்காக வேதனைப்படுவதா? இப்படி பல கேள்விகள் எங்கள் கண்ணீரோடு கலந்திருக்கின்றன.

நகரங்களை உருவாக்கும் திட்டங்கள் நேரடியாகக் கிராமங்களையும் மறைமுகமாக இயற்கையையும் பதம் பார்க்கின்றன. உதகை பழங்குடிகளின் தாய்நிலம். இது பறவைகள், விலங்குகள், அருவிகள், நதிகள், மரங்கள், மலர்கள்... இவற்றால் ஆன ஓர் அழகிய பிரதேசம். இதை நூறு நூறு ஆண்டுகளாகப் பழங்குடிகளே இயற்கையோடு கைகோத்து ஆண்டுவருகிறார்கள். இந்த பழங்குடிகளைப் புலம்பெயரவைத்து புதுக்குடிகளைக் குடியேற அனுமதிப்பது இயற்கையை உயிரோடு புதைப்பதற்கு சமமானது.

அப்படி அழிந்துபோவதற்கு, இந்த வெள்ளத்தால் வீழ்வதே மேல்..!

- பேராசிரியர் பொ.மணிவண்ணன்

Related Stories

Related Stories