உணர்வோசை

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நிஜ ஹீரோ அஜித்தா? பாண்டேவா? : ஆணாதிக்க சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி !

படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வசனம் பல நூற்றாண்டுகளாய் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வரும் ஆணாதிக்கத்தை தோலுரித்துக் காட்டும் வாய்ப்பை வழங்குகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நிஜ ஹீரோ அஜித்தா? பாண்டேவா? : ஆணாதிக்க சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் “I can either be truthful or liberal” என ஒரு ஆண் வசனம் பேசுகிறார்.

‘நேர் கொண்ட பார்வை’ பேசும் பிரச்சினைகளை சமூகதளங்கள் பலவாறாக விவாதித்துக் கொண்டிருக்கையில், குறிப்பிட்ட இந்த வசனம் ஒரு முக்கியமான திசையை அவற்றுக்கு வழங்குகிறது.

‘நான் லிபரலாகவோ அல்லது உண்மையாகவோதான் இருக்க முடியும்!’ இந்த வசனம் சொல்லும் சேதி என்ன?

லிபரலாக இருப்பதற்கும் உண்மையாக இருப்பதற்கும் இடையே உள்ள தூரம் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான தூரம்! நிலப்பிரபுத்துவத்துக்கும் முதலாளித்துவத்துக்குமான தூரம்! தமிழர்களுக்கும் முற்போக்குக்கும் உள்ள தூரம்!

உண்மையாக இருப்பதற்கும் பரந்த மனம் கொண்டவராக இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? பரந்த மனமாக இருப்பது என்பது உண்மைக்குப் புறம்பாக இருப்பதா?

படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வசனம் பல நூற்றாண்டுகளாய் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வரும் ஆணாதிக்கத்தை தோலுரித்துக் காட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இதுபோன்ற பல வசனங்கள் படத்தில் இருந்தாலும் இந்த வசனத்தில்தான் மொத்த படத்தின் கருவும் அடங்கியிருக்கிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நிஜ ஹீரோ அஜித்தா? பாண்டேவா? : ஆணாதிக்க சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி !

இந்தியச் சமூகத்தில் பெண் மீதான ஒடுக்குமுறை ஒரு பண்பாட்டுக் கூறாகவே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகவே ஓர் இந்திய ஆண் உண்மையாக இருத்தல் என்பது அவனுக்கு ஊட்டப்பட்டிருக்கும் ஆணாதிக்கத்துக்கு விசுவாசமாக இருத்தலே.

பெண்ணுரிமை பேசும் ஆண், அவனுடைய ஆண் தன்மையில் இருந்து விலகிப் பார்க்கும் மனப்பான்மையை, தியானத்தை, நேர்மையை பெற்றால் மட்டுமே பெண்ணுக்கான உண்மையைப் பார்க்க முடியும். மாறாக வெறும் ஆணாக இருந்து அவன் பேசும் எதுவும் பெண்ணை மீண்டும் ஒரு வலைக்குள் வீழ்த்தும் சதி மட்டுமே!

கற்பு, கடவுள், மானம், குடும்பம் என பல வடிவங்களில் நிலவுடைமை சமூகம் பெண்ணை சிறைக்குள் வைத்திருந்தது. பல சமயங்களில் பெண்களே அந்தச் சிறைக்குப் பூட்டுப் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆணாதிக்க மனம் அத்தனை சமயோசிதம் நிரம்பியது. நிலப்பிரபுத்துவ கட்டமைப்பில் கீறல்கள் ஏற்படுத்தும் வகையில், 1990களில் தாராளமயக் கொள்கை இந்தியாவில் அறிமுகமானது.

உலகமயமாக்கல் மற்றும் முதலாளித்துவத்தில், ‘பெண்கள் மீதான ஒடுக்குமுறை’ வேறு விதமாக இருந்தது. பெண்ணை பண்டமாக மாற்றி, அதை அவளே முன்னின்று வணிகமாக்கும் சூட்சுமத்தை பெண் விடுதலை என தாராளமயம் அவளுக்கு சொல்லி தந்தது.

தாராளமய காலத்துக்குப் பிந்தைய இந்திய ஆண் மிகப்பெரும் சமூகச்சிக்கலுக்கு உள்ளாகிறான். அவனுக்கு பணமும் தேவை. ஆனால் பெண்ணின் அடக்கமும் தேவை. கட்டுப்பெட்டியாக அவள் வீட்டில் உட்கார்ந்து ஆண்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் சமூக அமைப்பு, அவளுக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டிவிடும். ஒன்றை இழந்தால் மட்டுமே ஒன்றை அடைய முடியும் என்கிற நிலை!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நிஜ ஹீரோ அஜித்தா? பாண்டேவா? : ஆணாதிக்க சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி !

மார்க்ஸ் சொன்ன ‘முதலாளித்துவத்தின் புரட்சிகர பாத்திரம்’, குறைந்தபட்சம் பெண் விடுதலையிலேனும் இப்படியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.

தாராளமயம் என்கிற லிபரல் தன்மை, தொண்ணூறுகளுக்குப் பின்னான இந்தியாவில் ஆணுக்கு அவசியமாக இருக்கிறது. இல்லையெனில் அவன் ஒரு காட்டுமிராண்டி என முத்திரை குத்தப்படுவான். ஆகவே வேறு வழியே இன்றித் தன்னை லிபரலாக காண்பித்துக்கொள்ள அவன் முற்படுகிறான். பெண்கள் வேலைக்குப் போவதையும், தன்னிச்சையாக இயங்குவதையும் தன் இயல்பை மீறி ஏற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான். ஆனால் அவனுடைய உண்மையான ரூபம் என்னவென கேட்டால், அவனுடைய இயல்பே அவனுடைய உண்மையாக ரூபம். அதாவது பெண்ணை வெவ்வேறு வகைகளில் ஒடுக்கி, அவளது உழைப்பைச் சுரண்டும் இயல்பு.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் சோகம் என்னவென்றால் ‘பெண் விடுதலை’ அதிகம் பேசிய தமிழ் மண்ணிலிருந்து வந்த ரசிகர்கள் படத்தில் பேசப்பட்ட வசனங்கள் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் ‘என்னடா வசனமே புரியல’ என அமர்ந்திருந்ததுதான். அவர்களால் வெகு இயல்பாக தொடர்புகொள்ள முடிந்த வசனங்களை எல்லாம் ரங்கராஜ் பாண்டே பேசிக் கொண்டிருந்தார். அஜித் பேசும் வசனங்களோடு அவர்களால் ஒன்ற முடியாத சோகத்தை எல்லாத் திரையரங்குகளும் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. ‘நேர்கொண்ட பார்வை’ நல்ல படம் என்றாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் திணறும் காட்சிகள் படத்தைக் காட்டிலும் உங்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கவல்லது.

அஜித்தை பின்தொடர்ந்து காதலிக்கிற ஒரு பெண், ‘பொண்ணு பொண்ணா இருக்கணும்’ என்பது போன்ற ஒரு வசனம், திமிர் பிடித்த பெண்ணை இறுதியில் வெற்றி கொள்கிற நாயக கதாபாத்திரம் என எதுவும் இல்லாமல் எந்தக் காட்சிக்கு கை தட்டுவது என புரியாமல் தமிழன் எல்லா திரையரங்குகளிலும் உட்கார்ந்திருக்கிறான்.

முதல் வரியில் இருக்கும் வசனத்தை கூட மூலப்படத்தில் இருப்பதாகச் சொல்லி அதற்கான பாராட்டை இந்தி பட இயக்குநருக்கு கொடுத்து விடலாம். ஆனால் தமிழுக்கே உரிய பிரத்யேகமான சில வசனங்களை சேர்த்து அவற்றை கிழித்து தொங்கவிட்ட வகையில் இயக்குநர் வினோத் சிறப்பான பாராட்டுக்கு உரித்தானவர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நிஜ ஹீரோ அஜித்தா? பாண்டேவா? : ஆணாதிக்க சமூகத்தின் முன் நிற்கும் கேள்வி !

‘முள்ளு சேலைல பட்டாலும் சேலை முள்ளுல பட்டாலும் சேலைக்குதான் சேதம்’, ‘ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா’ என்கிற சொலவடைகளை எல்லாம் சொல்லி அதற்கான நெற்றியடியாக பதில்களையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பதில்களை படத்துக்கு சென்று பாருங்கள்.

ஆனால் ஒரு மொழியில் இவ்வகை சொலவடைகள் உலா வருகிறதெனில் அந்த மொழியிலேயே பெண்ணுக்கான இருப்பு இல்லாமல் இருப்பதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மொழியே, அந்த மொழி பேசும் இனத்தின் பெண்ணுக்கு அந்நியமாக இருப்பதை விடக் கொடுமை ஏதேனும் இருந்திட முடியுமா?

படத்திலேயே பெண்ணை கொச்சையாக குறிப்படும் பல வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. அந்த வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் என்ற அந்தஸ்தை பெற்ற வார்த்தைகள் கூட அல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளே அவை. ‘நல்ல குடும்பத்து பெண்’, ‘ஒரு அப்பனுக்கு பொறந்தவ’, ‘திரியுறா’ என பல வார்த்தைகளைக் குறிப்பிட முடியும். ஒரு மொழியின் வார்த்தைகள் கூட ஆணுக்கானதாக இருப்பது இப்படித்தான்.

இயல்பான வார்த்தைகளே கூட பெண்ணுக்கு எதிரான வார்த்தைகளாக தொனிக்கப்படுகிறதெனில், அந்த வார்த்தைகளின் மேல் ஏற்றப்படுவது ஆணாதிக்கம் விரும்புகிற பொருள் என்பதே உண்மையாக இருக்க முடியும். வெறும் சைகைகளே கூட பெண்ணுக்கு எதிராக இருக்கக்கூடிய சமூகத்தை, மொழியை, சிந்தையைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

ஒரே ஆறுதல் என்னவெனில், இதே சமூகத்துக்குள்ளிருந்துதான் பெரியாரும் கிளைத்து வந்தார். பெண் சார்ந்த சிந்தனைகளுக்கான வெளியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வெளிக்குள் இருந்து மட்டுமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த பிரச்சினைகளை முதன்முதலாக அப்பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமான பிற்போக்கு ஆண்களிடம் பேச தொடங்கியதே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றி.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் ஒரு நடிகர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. அதை உடைத்து எறிந்திருக்கிறார் அஜித். ஆனால், பல இடங்களில் அவர் பேசுவதை விடவும் பாண்டேவின் வசனங்களுக்கு பெரும் கைதட்டல் எழுகிறது. அதுவே, ஆணாதிக்கத்தின் உணர்வோடு வளர்ந்து இருக்கும் இன்றைய ஆண்களை தோலுரித்துக்காட்டுகிறது.

Related Stories

Related Stories