கடந்த ஒரு வாரகாலமாக காஷ்மீர் மாநிலம் உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இயற்கைப் பேரிடர்கள், செயற்கை அனர்த்தனங்கள் நிகழும்போது மக்கள் வாழும் ஒரு பகுதி தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும்.
ஆனால் காஷ்மீர் இப்போது துண்டிக்கப்பட்டிருப்பது இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசால். தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற காஷ்மீரை உலகத்திலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் துண்டித்துள்ளது மோடி அரசு.
அதற்கு முன்னதாக காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பின்னணியை தெரிந்து கொள்வது அவசியம். மன்னர் ஹரிசிங்கை பதான் படைகள் சுற்றி வளைத்தபோது அவர் கேட்ட உதவியின் அடிப்படையில் நேரு அனுப்பிய படைகள் அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன.
370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்துடன் அது இந்தியாவுடன் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 35ஏ மேலதிகமாக காஷ்மீர் மக்களின் சுய உரிமைகளை பாதுகாத்தது. இந்த சிறப்பந்துஸ்துடன் காஷ்மீரிகள் தங்களின் நிலப்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாத்து வந்தார்கள். இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று எழுதுவது நம் விருப்பம் அல்ல, அது ஆவணம், சாட்சியம், கடந்த கால வரலாறு.
தங்கள் சிவில் உரிமைகளை யுத்த பதட்டங்களினூடாக அவர்கள் ஓரளவுக்கேனும் பெற்று வந்தார்கள். 70 ஆண்டுலால மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட காஷ்மீரின் நிலை கடந்த 30 ஆண்டுகளாக மோசமடைந்தது. பயங்கரவாதிகள் இராணுவத்தினரை தாக்கினார்கள். இராணுவத்தினர் காஷ்மீர் மக்களைத் தாக்கினார்கள். இதுதான் அங்கு நீடித்து வந்த இயல்பு நிலை.
இந்நிலையில்தான் மோடி இரண்டாவது முறையாக மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்தார். அடிப்படையாக சிறுபான்மை மக்களினங்கள் மீதான வெறுப்பில் கட்டப்பட்ட வலதுசாரி பா.ஜ.க, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம், அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்பதையே வாக்குறுதிகளாகக் கொடுத்தார்கள்.
பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த மோடி அரசு முதல் கூட்டத்தொடரிலேயே சுமார் 20 மசோதாக்களை தாக்கல் செய்தது. அது அத்தனையும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கானது.
கூட்டத்தொடர் முடிவதற்கு முந்தைய நாளில்தான் காஷ்மீர் பற்றி சிறப்பு ஒதுக்கீடு என்ற பெயரில் 370-வது பிரிவையும் 35 ஏ பிரிவையும் ரத்து செய்து விட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தார்கள். அதற்கு சில நாட்கள் முன்பிருந்தே காஷ்மீர் மூடப்பட்டு விட்டது.
என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாத மக்கள் அச்சத்தில் உறைந்தார்கள். ஆளுநர் சத்யபால் மாலிக்கைச் சந்தித்து காஷ்மீர் தலைவர் “370-வது பிரிவை ரத்து செய்யப் போகின்றீர்களா?” என்று நேரடியாகவே கேட்டார். “இல்லை அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை” என்றார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இங்கு இருக்கும் பிரச்னைகளோடு 370-வது பிரிவை போட்டுக் குழப்பிக் கொண்டு தேவையற்ற பீதியை உருவாக்குகிறார்கள்” என்றார்.
அன்றிரவே அனைத்து காஷ்மீர் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்கள். பா.ஜ.கவின் முன்னாள் நண்பரான மெகபூபா முஃப்தி , உமர் அப்துல்லா என முன்னாள் முதல்வர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்கள். அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என 500 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தச் செய்தியை உறுதி செய்யவோ, பொறுப்பேற்றுக் கொள்ளவோ எவரும் இல்லை.
5-ம் தேதி முழுமையாக காஷ்மீர் மூடப்பட்டு விட்டது. நூறு மீட்டருக்கு ஒரு இராணுவப் பரிசோதனை மையமும், இரண்டு அடிக்கு ஒரு ராணுவ வீரருமாக சுமார் ஒரு லட்சம் இராணுவத்தினர் ஒரே இரவில் காஷ்மீரில் குவிக்கப்பட்டார்கள்.
மறுநாள் பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் 370-வது பிரிவை ரத்து செய்வதாக அறிவித்தபோது அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள் உறைந்தனர். இந்து தேசியவாதிகளுக்கும் கூட அது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஒரு பரவச நிலையை அடைவதற்கு முன்னால் காஷ்மீர் அறிவிப்பு தொடர்பாக நம்பமுடியாத இன்ப உணர்ச்சியை அடைந்தனர்.
இப்போது அந்த அறிவிப்பு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. காஷ்மீரில் உள்ள சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், தொலைபேசிகள், இணையத் தொடர்பு என அத்தனையும் அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. ஏ.டி.எம் மிஷின்களில் பணமில்லை, போதுமான உணவுப்பொருளும் இல்லை. காஷ்மீர் வரலாற்றில் புர்ஹான் வானி எழுச்சியின்போது அதிக இராணுவம் குவிக்கப்பட்டது. ஆனால், அதை எல்லாம் விட தற்போது பல மடங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கற்பனை செய்யமுடியாத அளவுக்கு முட்கம்பி வேலிகளுக்குள் அம்மக்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்.
காஷ்மீரில் சுமார் ஆறு லட்சம் காஷ்மீரிகள் அல்லாத அயலக தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம், குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை அவசர அவசரமாக வெளியேறச் சொன்னபோது அவர்களும் அச்சத்தில் ஆழ்ந்தார்கள். காஷ்மீர் இதுவரை மூன்று பிரதான எழுச்சிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இப்போது நடப்பதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கூட காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் துயரம்.
மோடியின் உரை எழுப்பும் கேள்விகள்
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் தொடர்பாக மசோதா எதையும் தாக்கல் செய்யவில்லை. விவாதம் எதுவும் இன்றி 370வது பிரிவயும் 35ஏ வையும் ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு அவையைக் கலைத்துவிட்டார். பின்னர் அதுபற்றி பல்வேறு கட்சியினர் கருத்துக்களை வெளியிட்டார்கள்.
ஒரே நாளில் 70 ஆண்டுகால பிரச்னையை பிரதமர் மோடி தீர்த்துவிட்டார் என்ற பெருமித உணர்வு இந்தி பேசும் மாநிலங்களில் பரப்பப்பட்டது.உண்மையில் ஜனாதிபதியிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்ற ஒரு ரகசிய நடவடிக்கை ஒன்றின் மூலம் ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் அந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்திய மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகள் எதிலும் இந்திய அரசு இத்தனை வேகம் காட்டியதில்லை.
இந்த ரகசிய நடவடிக்கையின் மூலம் காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு இப்போது வரை தெரியாது. பாராளுமன்றத்தில் பேசாத பிரதமர் மோடி நேற்று வானொலி, தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக சிதறடித்து இந்தியாவோடு இணைத்த மோடி, உரையை அந்த இரு பிரதேசங்களையும் தவிர்த்து விட்டுப் பேசினார்.
மோடியின் இந்த உரையை 2009, ஈழப் போரின் முடிவின் பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ராஜபக்சேவின் உரையோடு ஒப்பிடலாம். ஈழத்தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வன்னி பெரு நிலப்பரப்பின் மீதான சிங்களவர்களின் ஆசையை தூண்டினார். முதலீட்டாளர்களை நோக்கி அறைகூவல் விடுத்தார்.
அதே போல காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது இந்தியர்களின் ஆசையைத் தூண்டினார் பிரதமர் மோடி. சினிமா ஷூட்டிங் நடத்தலாம், தனியார் தொழிலதிபர்கள் முதலீடு செய்யலாம். நிலம் வாங்கலாம் என்று பிரதமர் நில வணிகர் போல பேசினார்.
ராஜபக்சே உரையை வடக்குப்பகுதி தமிழர்களைத் தவிர இலங்கையின் பெரும்பான்மை சிங்களர்கள் அந்த உரையைக் கேட்டது போல பிரதமர் மோடியின் உரையை காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத் தவிர்த்த பிற பகுதி மக்கள் கேட்டார்கள். இஸ்ரேலிய பிரதமரின் உரையை காஸா பகுதி மக்கள் கேட்கவேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு நிலப்பகுதிகள்.
ஆனால், காஷ்மீர் சுதந்திரம் பெற்றுவிட்டது என்று சொல்லும் பிரதமர் மோடியின் உரையை காஷ்மீர் மக்களே கேட்பதற்கான வாய்ப்பை அவர் தலைமையிலான அரசே அளிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை.ஒரு தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர், ஒரு மாநிலம் போல இருந்துவந்தது.
காஷ்மீரிகளின் உணர்வு முழுமையான சுதந்திர எண்ணம் கொண்டதாக இருந்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு நிலப்பகுதி புவியியல் ரீதியாக இந்தியாவின் மாநிலம் போன்றே இருந்தது. 370வது சட்டப்பிரிவின் கீழ் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட பொது வாக்கெடுப்பு என்ற சத்தியத்தையே அழித்தொழித்துவிட்டது மோடி அரசு. மாநில அந்தஸ்து பிடுங்கப்பட்டு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளது காஷ்மீர்.
இப்போது நிலைமை பயங்கரமானதாக மாறி வருவதாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, சி.பி.எம் தலைவர் சித்தாராம் யெச்சூரி போன்றோர் காஷ்மீருக்குள் செல்ல எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அவர்கள் ஸ்ரீநகருக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டார்கள்.
துப்பாக்கி முனையில் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு இந்தியா வழங்கிய உயர்ந்தபட்ச ஜனநாயகம் தொடர்பாக சர்வதேச அளவில் நிலவும் மவுனம் அச்சுறுத்தும்படி உள்ளது. சர்வதேச அரசியல் பிரச்னையான காஷ்மீர் தொடர்பான ஒப்பந்தங்கள், ஐ.நா., அறிக்கைகள் யாவும் கேலிக்கூத்தாகி உள்ளன.
இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்துள்ள மூன்று போர்கள் காஷ்மீரை மையமாக வைத்து நடந்தவை. பதட்டம் இருந்தாலும் கூட இந்தியா - பாகிஸ்தான் நாடுகளில் பேரழிவு எதனையும் இந்த யுத்தம் உருவாக்கி விடவில்லை.
ஆனால், நான்காவது ஒரு யுத்தம் காஷ்மீரை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே உருவாகும் என்றால் அது எத்தனை எளிதில் தீர்க்கக்கூடியதாகவோ அல்லது தேர்தலுக்குப் பயன்படும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்காகவோ முடிந்து விடாது. காஷ்மீரில் கைவைத்திருப்பதன் மூலம் மோடி அரசு ஆசியாவில் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. அது அத்தனை எளிதில் முடியும் விஷயம் அல்ல!