முரசொலி தலையங்கம்

“அரியானாவிலும் அரைகுறை வெற்றியே... இதுதான் பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றியா?” - முரசொலி தாக்கு !

அரியானாவில் சுமார் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சினை இருந்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். இந்த 14 தொகுதிகள்தான் பா.ஜ.க.வுக்கு உதவியாக இருந்துள்ளன.

“அரியானாவிலும் அரைகுறை வெற்றியே... இதுதான் பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றியா?” - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அரியானாவில் அரைகுறை வெற்றியே!

அரியானாவில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதை வைத்து ‘ஹாட்ரிக்’ வெற்றி என்று அவர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அதில் எந்த வெற்றியும் கிட்டி விடவில்லை. அரைகுறை வெற்றியைத்தான் பா.ஜ.க. பெற்றுள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் காங்கிரசை விட, ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க. 11 இடங்களை மட்டுமே கூடுதலாகக் கைப்பற்றி உள்ளது. இதனை மகத்தான வெற்றியாகவோ, மாபெரும் வெற்றியாகவோ சொல்ல முடியாது.

கூடுதல் வாக்குகளையாவது பா.ஜ.க. பெற்றுள்ளதா என்று பார்த்தால் அதுவும் மிகமிக சொற்பமான வேறுபாடு தான். இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.வும் காங்கிரஸ் கட்சியும் சம அளவு வாக்குகளைப் பெற்றுள்ளன என்றே சொல்லலாம். பா.ஜ.க. 39.94 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 39.09 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.85 விழுக்காடு தான். ஒரு விழுக்காடுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் இழந்துள்ளது. எனவே இதனையும் மகத்தானது என்று சொல்ல முடியாது.

வெற்றி பெற்ற பா.ஜ.க. உறுப்பினர்களாவது பல்லாயிரம், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை.

« உச்சகாலன் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 32 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« தாத்ரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 1957 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« மகேந்திரகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 2648 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« ஹோடல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 2595 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« புந்திரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 2197 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« அசாந்த் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 2306 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

« அடேலி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 3085 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார்.

இதுதான் பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றியா?

“அரியானாவிலும் அரைகுறை வெற்றியே... இதுதான் பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றியா?” - முரசொலி தாக்கு !

இவையும் ஒழுங்காக எண்ணப்பட்ட கணக்கா என்றால், அதுவும் சந்தேகத்துக்குரியதே. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காலை 10 மணி வரை காங்கிரஸ் கட்சி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜ.க. 10-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், காலை 10 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நிலவரம் திடீரென தலைகீழாக மாறியது. அதன்பிறகு வெற்றி நிலவரங்களை அறிவிப்பதில் மிகப்பெரிய மந்த நிலைமையை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. இதனை காங்கிரஸ் கட்சி பிரச்சினை ஆக்கியது.

திடீரென்று காங்கிரஸும், பா.ஜ.க.வும் சம அளவிலான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எத்தனை தொகுதி என்று சொல்லாமலேயே சம அளவில் என்றார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடவில்லை. இதற்குள் மதியம் ஆகிவிட்டது. மதிய நிலவரப்படி பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை என்று அறிவிக்கப்பட்டது. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம் ஆகும். மக்களுக்கு மர்மமான நிலவரங்கள்தான்.

உச்சகாலன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியேந்திர சிங் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த நிலையில், கடைசி நேரத்தில், பா.ஜ.க. வேட்பாளர் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. முன்னிலை என்று வந்தாலே, அத்தோடு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி விட்டு, வெற்றி பெற்றதாக முடித்து விடுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளது.

அரியானாவில் சுமார் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சினை இருந்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். இந்த 14 தொகுதிகள்தான் பா.ஜ.க.வுக்கு உதவியாக இருந்துள்ளன.

“அரியானாவில் பெற்ற வெற்றி என்பது சிறந்த நிர்வாகத்துக்கும், வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாகும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொண்டுள்ளார். இது உண்மையாக இருந்தால் 50 விழுக்காடு வாக்குகளை பா.ஜ.க. பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் 5 விழுக்காட்டுக்கு மேல் வித்தியாசம் இருக்க வேண்டும். பா.ஜ.க. வேட்பாளர்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது எதுவுமில்லை. எனவே, இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கும் கிடைத்த வெற்றியல்ல.

இதுவரை முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டரை தூக்கி விட்டு புதிய முதலமைச்சரைப் போட்டது பா.ஜ.க. அந்தக் கட்சி மீதான அனைத்து வெறுப்புகளும் கட்டாருடன் சேர்ந்து போய்விட்டது. அதனால்தான் இந்தளவுக்கு வாக்குகளை பா.ஜ.க.வால் வாங்க முடிந்தது. ஒருவரைப் பலியிட்டு மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது பா.ஜ.க. என்று சொல்லலாமே தவிர, மோடி சொல்வதை பா.ஜ.க. நம்பினால் ஏமாந்து போவார்கள்.

- முரசொலி தலையங்கம்

11.10.2024

banner

Related Stories

Related Stories