முரசொலி தலையங்கம்

”வக்ஃப் சட்டத்திலும் வன்மம்” : முரசொலி கடும் தாக்கு!

‘மதம்’ என்ற இஞ்சின் ஓடவில்லை என்பது இன்னமும் பா.ஜ.க.வுக்கு புரியவில்லை.

”வக்ஃப் சட்டத்திலும் வன்மம்” : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-08-2024)

வக்ஃப் சட்டத்திலும் வன்மம்

பலிக்கும் வரை பாசிசத்தைப் புகுத்துவது பா.ஜ.க.வின் பாணி. அதில் ஒன்றுதான் வக்ஃப் வாரிய சட்டத்தைத் திருத்த முனைவது ஆகும். பலரும் எதிர்த்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இதனை அனுப்ப ஒப்புக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

வக்ஃப் வாரியச் சட்டம் – -1995 என்ற பெயரை ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் -1995 என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.

வக்ஃப் வாரியம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதன் உண்மையான நோக்கம் என்னவோ அதற்கு விரோதமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வர முனைகிறது பா.ஜ.க. அரசு. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவின்படி வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாற்றப்படுகிறது. வக்ஃப் வாரிய சட்டம் - 1995 இன் படி அமைந்துள்ள அதிகாரம் நீக்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின் 40 ஆவது பிரிவு நீக்கப்படுகிறது. மத்திய வக்ஃப் கவுன்சில் என்பதை உருவாக்குகிறார்கள். அதில் முஸ்லீம்கள் மட்டுமல்ல, முஸ்லீம் அல்லாதவர்களும் இருப்பார்களாம். எதற்கு இந்த வேண்டாத வேலையைச் செய்ய வேண்டும்?

தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும் போது, “இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வக்ஃப் வாரியத்தில் அங்கம் வகிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. அதே போன்று ஒரு இந்துக் கோவிலை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? அல்லது ஒரு சீக்கியம் அல்லது பார்ஸி மத விவகாரங்களில் இப்படி அனுமதிக்க முடியுமா? முடியாது” என்று குறிப்பிட்டார். அதற்கு நேரடியான பதிலை ஒன்றிய சட்ட அமைச்சரால் சொல்ல முடியவில்லை.

வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை எதற்காக ஒரு கவுன்சில் வசம் கொடுக்க வேண்டும்? எது வக்ஃப் சொத்து என்பதை வரையறுக்கவே அந்த வாரியம் இருக்கிறது. அதிகாரப் பறிப்புக்கு பின்னால் இருக்கிற சதி என்ன? காலப் போக்கில் என்ன செய்யும் திட்டம் இருக்கிறது? சொத்து யாருடையது என்பதை முடிவெடுக்கும் அதிகாரம், மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்?

லட்சக்கணக்கான ஏக்கர் நிலமும், லட்சம் கோடி பண மதிப்பும் கொண்டவை இந்தச் சொத்துகள். இதனை மாவட்ட ஆட்சியர்கள் கைக்குள் ஒப்படைக்கத் துடிக்கும் மர்மம் என்ன?

வக்ஃப் வாரிய நிலங்களை கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாம். வக்ஃப் நிலமா இல்லையா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்களாம். சிறுபான்மைச் சமூகத்தினர் அவர்களின் சொத்துகளை நிர்வகிக்க அரசமைப்புச் சட்டம் பிரிவு 30 அதிகாரம் தருகிறது. அதனை மீறுவது அல்லவா இந்தப் பிரிவு? வக்ஃப் சொத்தா இல்லையா என்பதை ஆராய்வதற்குதான் வக்ஃப் வாரியம் இருக்கிறது. அந்த வேலையை மாவட்ட ஆட்சியர்களிடம் தரும் மர்மம் என்ன?

வக்ஃப் வாரியச் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்து பேசினார் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ. அறிமுக நிலையிலேயே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது என்று சொல்லி எதிர்த்தார்கள். “வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையீடு அல்லது குறுக்கீடு செய்யாது” என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சொன்னார். அவர் சொன்ன வார்த்தைக்கு அவருக்கே அர்த்தம் தெரியுமா எனத் தெரியவில்லை.

”வக்ஃப் சட்டத்திலும் வன்மம்” : முரசொலி கடும் தாக்கு!

இந்தச் சட்டமே இசுலாமியர் சொத்து தொடர்பானதை கண்காணிக்கும் வக்ஃப் வாரியம் தொடர்புடையது. அதன் அதிகாரத்தை குறைப்பது என்பது இசுலாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதுதானே? அந்த அமைப்புக்குள் இசுலாமியர் அல்லாதவர்களை நுழைப்பது என்பது அவர்களது மத உரிமையில் குறுக்கிடுவதுதானே?

மதம் சார்ந்த நிலையை ஒரு அரசாங்கம் எதற்காக எடுக்க வேண்டும்? ஒரு மதத்தை ஒடுக்குவதற்காக ஒரு சட்டத்தை எதற்காகக் கொண்டு வர வேண்டும்? ஒரு குறிப்பிட்ட மதத்தின் சுதந்திரத்தில் எதற்காக தலையிட வேண்டும்? இது என்ன வகைப்பட்ட குணம்? “நீதி, சுதந்திரம், அதிகாரப் பகிர்வு ஆகிய தத்துவங்களை மீறும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. முஸ்லீம்களின் எதிரி பா.ஜ.க. என்பதற்கு இந்த மசோதா ஒன்று போதும்” என்று நாடாளுமன்றத்தில் மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைசி சொல்லி இருக்கிறார்.

அரசியல் நோக்கங்களுக்காகத்தான் இது செய்யப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சுட்டிக்காட்டி உள்ளது. அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரப் போகிறது. அதனால் தான் இதனைச் செய்கிறார்கள். பா.ஜ.க. இதுபோல் எத்தனையோ பம்மாத்துகளை கடந்த காலங்களில் காட்டி விட்டது. அது எதுவும் அந்தக் கட்சிக்கு பயனளிக்கவில்லை. இருந்த வாக்கு வங்கியையும் பா.ஜ.க. இழந்ததுதான் மிச்சம். ஆட்சி அமைப்பும் பெரும்பான்மையையும் பெறவில்லை. பல தொகுதிகளில் சதி செய்து தேர்தல் முடிவுகளையும் மாற்றி இருக்கிறார்கள். ‘மதம்’ என்ற இஞ்சின் ஓடவில்லை என்பது இன்னமும் பா.ஜ.க.வுக்கு புரியவில்லை.

இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மத சுதந்திரத்துக்கு எதிரானது. வழிபாட்டு உரிமைக்கு எதிரானது. அனைவர்க்கும் இந்த நாடு சொந்தம் என்ற தத்துவத்துக்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிரானது. எனவே இந்தச் சட்டத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories