முரசொலி தலையங்கம் (02-04-2024)
தமிழை ஏமாற்றாதீர்!
தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார்! ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்?
2008ஆம் ஆண்டு நடந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய கலைஞர் அவர்கள் மகத்தான அறிவிப்பு ஒன்றைச் செய்தார்கள். “150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு, அந்த கனவு நினைவாக வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் காலூன்றுகின்ற இந்த இனிய நாளில் எனக்கென்று உள்ள சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை நிறுவனத்தின் பொறுப்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்றினை நிறுவிட வழங்குகிறேன்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.
முதல் விருது 2010, சூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா’ அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2011 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கப்படவே இல்லை. பத்து ஆண்டுகள் அந்த விருதை யாருக்கும் வழங்கவே இல்லை. கழக அரசு பொறுப்பேற்றவுடன் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுகள் அளிக்கப்பட்டன. அப்போதெல்லாம் மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளையே இவர்கள் அளித்திருக்கிறார்கள்.
* கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும்.
* கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும்.
* போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும்.
* இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.
* ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும்.இப்படி இந்திய மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. அப்போது மோடியின் தமிழ்ப் பாசம் எங்கே போனது?
தமிழ் -ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டதாக தமிழ்நாடு இருக்கிறது. இதில் இந்தியைப் புகுத்தி மும்மொழிக் கொள்கை மாநிலமாக ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் முடிந்த இடத்தில் எல்லாம் சமஸ்கிருத மொழியைத் திணிக்கிறார்கள்.
* சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.
* மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலம் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்கிருத மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.
* மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருத மொழி ஒருபாடமாக்கப்பட்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கிய திறன் வளர்ப்பு விருப்பப் பாடமாக அளிக்கப்படும்.
* சமஸ்கிருத பாடப்புத்தகங்கள் அதிகமாக உருவாக்கப்படும்.
* சமஸ்கிருத துறைகள் மூலமாக சமஸ்கிருதம் பற்றியும் சமஸ்கிருத அறிவு முறைகள் (Sanskrit Knowledge System) பற்றியும் மிகச் சிறந்த இடைநிலை (Inter Disciplinary) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
* உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multidisciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்.
- இப்படி இந்து - சமஸ்கிருத திணிப்பாக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை ஆகும். மோடியின் தமிழ்ப்பாசம் எங்கே போனது?
ஆங்கிலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களது நோக்கம்.
இவ்வளவு தமிழ்ப் பாசம் இருக்கும் பிரதமர் மோடி, தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்பாரா? மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்குவாரா? தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய முன் வருவாரா? சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க முயற்சிப்பாரா? இதையெல்லாம் செய்து விட்டு தமிழைப் பற்றி பேசவும். தமிழை ஏமாற்ற வேண்டாம்.