தேர்தல் ஆணையம் சிதைப்பு !
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை புறக்கணித்திருப்பதன் மூலமாக தேர்தல் ஆணையத்தை சிதைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அமைச்சரை நியமிப்பதன் மூலமாக தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக ஆக்க முயற்சித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் ஆணையத்தின் ரிமோர்ட் பிரதமர் கைக்கு போய்விட்டது. தனித்துச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தை அரசியல் அமைப்பாக, அதுவும் ஆளும் கட்சியின் அரசியல் அமைப்பாக மாற்றும் தந்திரத்தை பட்டவர்த்தனமாகச் செய்துவிட்டார் பிரதமர் மோடி. இது தேர்தல் ஆணையத்தைச் சிதைப்பது மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தையும் அவமானப்படுத்துவது ஆகும்.
உச்சநீதிமன்றத்தை உதாசீனப்படுத்த வேண்டும், அப்படி உதாசீனப்படுத்துவதை அந்த உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவது மாதிரி செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டுள்ளது ஒன்றிய அரசு.
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் முடிவை பா.ஜ.க. அரசு எடுத்துள்ளது. இனிமேல், பிரதமர் தலைமையிலான குழுவுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட முன் வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்கள்.இதற்கு முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த இடத்தை, ஒன்றிய அமைச்சரை வைத்து நிரப்பி இருக்கிறார்கள்.
அமைச்சரவை செயலர் மற்றும் அரசுச் செயலர் பதவிக்குக் குறையாத இரண்டு அதிகாரிகள் கொண்ட தேடல் குழுவானது 5 பேரை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த ஐந்து பேரில் உள்ளவர்களையோ அல்லது அவர்களைத் தாண்டிய வேறு யாரையுமோ பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவானது தேர்வு செய்யலாம். பரிந்துரைக்கு வெளியில் இருந்தும் ஆட்களை எடுக்கலாம் என்றால், எதற்காக அந்த பரிந்துரைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.
மிக சந்தேகத்துக்கு உரிய வகையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் என்பவரது நியமனம் நடந்தது. இவர் பஞ்சாப் மாநில அதிகாரி ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திடீரென அவராக பதவி விலகினார். மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதாவது தேர்தல் ஆணையராக இவரை நியமிப்பதற்காகவே பதவி விலக வைத்துள்ளார்கள் என்பது வெளிப்படையான செய்தி ஆகும். அருண் கோயல் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். இது போன்ற முக்கியமான பணியிட்டத்துக்கான தேர்வை கொலிஜியம் போன்ற அமைப்புதான் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான வழக்கு கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் வந்தது. நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதனை விசாரித்தது. அருண் கோயலின் நியமனத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் சொன்னார்கள். தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களின் நியமனமானது சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் கோரிக்கை ஆகும். கடந்த மார்ச் மாதம், அரசியல் சாசன அமர்வு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
''பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்த குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.
ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட முடியாது.
நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்றால், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் சட்ட விதிகளின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் சிதைந்து போகும். அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனத்துக்கு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை" என்று அரசியல் சாசன அமர்வு கூறியது.
உடனே ஒரு சட்டத்தை கொண்டு வந்துவிட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக பிரதமர் விரும்பும் அமைச்சரை நியமித்துவிட்டார்கள். அதாவது உச்சநீதிமன்றத்தோடு நேருக்கு நேராக மோதுகிறது பா.ஜ.க. அரசு. 'அமலாக்கத்துறையை கவனிக்க சஞ்சய் குமார் மிஸ்ராவைத் தவிர வேறு யாரும் இல்லையா?' என்று கேட்டதல்லவா உச்சநீதிமன்றம். அதற்கு பழிவாங்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
''பிரதமர் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் தற்போதைய அமைப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை" என்று 2012 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியவர் அப்போதைய பா.ஜ.க. தலைவர் அத்வானி. அத்தகைய நம்பிக்கைத் தகர்ப்பைத்தான் இன்றைய பிரதமர் செய்துள்ளார். கூடுதலாக சிதைக்கவும் செய்துவருகிறார்.