முரசொலி தலையங்கம் (22-09-2022)
புதிய புதிய பொய்கள்!
‘‘தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் புறக்கணிப்பு இல்லை” என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி இருக்கிறார். பழைய பொய்கள் அனைத்தும் கரைந்து போய்விட்டதால் புதிய புதிய பொய்களைத் தேடி அலைகிறார்கள். புதிய கல்விக் கொள்கையானது - கல்வியை மேம்படுத்துவதற்காக என்று இதுவரை சொல்லி வந்தார்கள். தமிழ்நாட்டில் கல்வியானது மேம்பட்டுத்தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட ஒட்டுமொத்தமாக இந்திய விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் கல்வியானது மேம்பட்டுத்தான் இருக்கிறது என்பதை புள்ளிவிபரங்களுடன் நிரூபித்ததும் அந்தப் பொய்யைச் சொல்வது இல்லை.
இப்போது புதிதாக ‘தாய்மொழி’க் காரணம் காட்டுகிறார்கள். தாய்மொழிக் கல்வி என்பது இல்லையா? புதிய கல்விக் கொள்கை வந்துதான் தாய்மொழியைக் கற்பிக்கப் போகிறதா? தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் தாய்மொழியில் படிக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில் படிக்கலாம். ஆராய்ச்சியை தாய்மொழியில் நடத்தலாம். அரசின் சார்பிலான அனைத்து போட்டித் தேர்வுகளும் தாய்மொழியில் எழுதலாம். அனைத்து தகுதித் தேர்வும் தாய்மொழியில் எழுதலாம். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ் தகுதித் தாள் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். எனவே, இங்கே அனைத்தும் தாய்மொழியில்தான் இருக்கிறது. எனவே, தர்மேந்திரப் பிரதான் புதுக்கரடி விட வேண்டியது இல்லை.
தமிழ், - ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டதாக தமிழ்நாடு இருக்கிறது. இதில் இந்தியைப் புகுத்தி மும்மொழிக் கொள்கை மாநிலமாக ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் முடிந்த இடத்தில் எல்லாம் சமஸ்கிருத மொழியைத் திணிக்கிறார்கள். அதுதான் அச்சம் தருவதாக இருக்கிறது.
சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.
மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலம் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய, தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரித மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் மும்மொழிக்கொள்கையில் சமஸ்கிருத மொழி ஒரு பாடமாக்கப்பட்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கியத் திறன் வளர்ப்பு விருப்பப் பாடமாக அளிக்கப்படும்.
சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் அதிகமாக உருவாக்கப்படும்.
சமஸ்கிருதத் துறைகள் மூலமாக சமஸ்கிருதம் பற்றியும் சமஸ்கிருத அறிவு முறைகள் (Sanskrit Knowledge System) பற்றியும் மிகச் சிறந்த இடைநிலை (Inter Disciplinary) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
உயர்கல்வித் துறையில் முழுமையான பல்துறை (Holistic Multi disciplinary) பயிற்று மொழியாக சமஸ்கிருதம் விளங்கும். நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ள சமஸ்கிருத ஆசிரியர்கள் பாடப் புலமை பெற்றவர்களாக (Professionalized) ஆக்கப்படுவார்கள்.
இதுதான் அச்சம் தருவது ஆகும். ஆங்கிலத்துக்கு எதிராக தமிழ்நாட்டு ஆளுநர் முதல் உள்துறை அமைச்சர் வரை பேசுவதன் உள்பொருள் என்பது, புதிய கல்விக் கொள்கை மூலமாக வெளிப்படுகிறது.
தாய்மொழி, - இந்திய இணைப்பு மொழியாக இந்தி, - இந்திய பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதம் ஆகிய மூன்றையும் அனைத்துப் பிள்ளைகளையும் படிக்க வைக்கவே, புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. மும்மொழிக் கொள்கை என்ற சொல், ஏழு இடங்களில் ஒன்றிய அரசின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களது நோக்கம். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு ஒரு தந்திரம் தேவை. அதற்குத்தான் தாய்மொழி பம்மாத்து.
‘‘புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு தமிழ்நாடு முறையான காரணத்தைச் சொல்லவில்லை. நியாயமான எதிர்ப்பை நான் பார்க்கவில்லை” என்றும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி இருக்கிறார். அவருக்குப் பழைய செய்திகளை நினைவூட்டவேண்டியது நமது கடமையாகும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க 14.7.2019 அன்று வல்லுநர் குழு அமைத்தார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் அறிக்கை ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் 28.7.2019 அன்று தரப்பட்டது.“அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான, “2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கை”யை ஏற்றுக் கொள்ள முடியாது. அதைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. அந்த அறிக்கையை எடுத்துப் பார்க்க வேண்டும் ஒன்றிய அமைச்சர்.
‘‘சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது” என்று தி.மு.க. தீர்மானம் போட்டுக் கண்டித்துள்ளது.
‘‘மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘பிளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச்
சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்காகும்” என்றும் தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு மருத்துவக் கல்வியில் பெரும்பான்மை மக்களின் கனவு சிதைக்கப்பட்டது. இதேபோல் அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வரப்போகிறார்கள். இனி பள்ளிக் கல்வியுடன் ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒடுக்கப்பட்டு விடும். அவர்களை உயர்கல்வி நிலையங்களுக்குள் நுழைய விடமாட்டார்கள். இதனால்தான் எதிர்க்கிறோம்.