இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் இந்திய நாட்டைச் சூழ்ந்துவரும் முக்கிய பிரச்னைகளில் முதலாவதான பிரச்னை வேலையின்மை. அதனால் மக்களிடத்தில் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிப்பதும், ஆதரிப்பதும் மேலும் வேலையின்மையை அதிகரிக்கச் செய்யும்.
குறிப்பாக இன்று ஆன்லைன் வர்த்தகம் சிறு, குறு வர்த்தகத்தை வளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வர்த்தகத்தினால் 40% அளவிற்கு வணிகம் குறைந்துள்ளது. மேலும் இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 37 லட்சம் வணிகர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் ஒரு கணிசமான பொருளாதாரத்தை சிதைக்கிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் வைக்கும் கோரிக்கையை அலட்சியம் செய்துவிடக்கூடாது.
மத்திய – மாநில அரசு ஆன்லைன் வர்த்தகத்திற்கான சில பொருள்களை இதுக்கீடு செய்து கட்டுப்பாடு விதிக்கவேண்டும், மற்றவற்றை சிறு – குறு சில்லறை வணிகத்திற்கு விட்டுவிட வேண்டும் என முரசொலி நாளிதழ் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.