முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கோவையில், இங்கு குழுமியிருக்கக்கூடிய மாணவ சமூதாயத்தைச் சந்திக்கின்றபோது, எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, எனர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பாக, கோவையில் தான் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்று, நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நான் நடத்தியிருக்கிறேன். இந்த கோவை மாவட்டத்திற்கு, மூன்று முறை நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளில் மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தும் இருக்கிறேன்.
2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில், அந்தத் திட்டங்கள் நிலை குறித்து, மண்டலங்கள் வாரியாக அதாவது நான்கு, ஐந்து மாவட்டங்கள் உட்படுத்தி, ஆய்வுக் கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவைக் கூட்டத்தைக் நடத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் அறிவித்த அறிவிப்புகள் நிலை குறித்து, அமைச்சர்களை அவர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொல்லி, அறிவுறுத்திவிட்டு, நம்முடைய தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்க்காக நான் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டேன். அமெரிக்கப் பயணம் முடித்துவிட்டு வந்தவுடனே, அமைச்சர்களை சந்தித்து துறைரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்திக்கொண்டு இருக்கிறேன். இதற்கிடையில், மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி, நான் தொடங்கிய பயணத்தின் முதல் மாவட்டமாக, நான் தேர்ந்தெடுத்தது இந்த கோயம்புத்தூர் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நேற்று காலையில் இங்கு வந்ததிலிருந்து, நடந்துக்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்திருக்கிறேன். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளை கேட்டிருக்கிறேன். இன்றைக்கு, அதில் ஒரு கட்டமாக, இந்த மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்த அடிக்கல் நாட்டு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அன்பு சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், துறை அமைச்சரான எ.வ.வேலு அவர்களுக்கும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களுக்கும், மாநகராட்சியின் ஆணையர் சிவகுரு உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘Comeback’ கொடுத்திருக்கிறார் நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள்! அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப் பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அதற்குள் விரிவாக நான் போக விரும்பவில்லை! ஏனென்றால், இது அரசு நிகழ்ச்சி. ஆனால், அந்த தடைகளையெல்லாம் உடைத்து, மீண்டும் வந்திருக்கிறார்! தொடர்ந்து கோவைக்காக, சிறப்பாக செயல்படுவார், செந்தில் பாலாஜி, அது உறுதி, உறுதி!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாகதான், மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தேன். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் அதைப் பயன்படுத்தி பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்! அதேபோல் கோவையிலும் ஒரு நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்தேன். அடுத்து வந்த ஆலோசனையில் நூலகத்துடன் சேர்த்து, அறிவியல் மையமும் அமைக்கலாம் என்று கருத்துகள் வந்தவுடன், எனக்கு நினைவில் வந்தவர் தந்தை பெரியார் அவர்கள். சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் இருக்கிறது! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கிறது! அதனால் கோவையில், அவர்கள் இரண்டு பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மையமும் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.
தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியார் அவர்கள்! 80 ஆண்டுகளுக்கு முன்பே, இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்று கனவு கண்ட, பகுத்தறிவு ஆசான் அவர்கள்! அறிவும், ஆற்றலும், பகுத்தறிவும் பகுத்துண்டு பல்லுயிர் காக்கும், சமூகத்து மக்களாக இன்றைய இளைய சமுதாயம் வளர-வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக ஏன் மிகச் சிறப்பாக எழ இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
அதுமட்டுமல்ல, இந்த அடிக்கல் நாட்டு விழாவில், திறப்பு விழா தேதியையும் நான் அறிவிக்கிறேன்; துணிச்சலோடு அறிவிக்கிறேன்; தெம்போடு அறிவிக்கிறேன்; உறுதியோடு அறிவிக்கிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்த நூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, சொன்னால், சொன்னதை செய்யும்!
நேற்றுகூட, கோவையில் எல்காட் நிறுவனத்தின் சார்பில், 114 கோடியே 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, இன்று இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, கோவையின் அடையாளமாக மாற இருக்கும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். 133 கோடி மதிப்பீட்டில் காந்திபுரத்தில் நம்முடைய அரசு உருவாக்கி வருகின்ற அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஜுன் அது திறக்கப்பட இருக்கிறது. நம்முடைய ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தோம் என்றால், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்து வைப்போம். அதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன்.
உயர்தர சிகிச்சை வழங்கும் சென்னை “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை”!
உலகத்தரத்திலான மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, மாபெரும் அரங்கம்!
உலகத்திற்கு நம்முடைய வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம்!
அந்த வரிசையில்தான், இந்த பெரியார் நூலகமும் இடம்பெற போகிறது. என்னுடைய இந்தப் பயணத்தில் நேற்று, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், நில எடுப்பு நடவடிக்கைகளில், விலக்கு அளிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன். இது ஏறத்தாழ 35 ஆண்டுகால பிரச்சினை. நான் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது பல பேர் மனுவைக் கொடுத்தார்கள்; கோரிக்கை வைத்தார்கள். நான் அதை மாண்புமிகு அமைச்சர் திரு. முத்துசாமியிடம் கொடுத்து, அதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று சொல்லி, நேற்று மட்டும் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் பயனடையும் அந்த ஆணைகளை நான் வழங்கியிருக்கிறேன்.
அடுத்ததாக, தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்தார்கள். நேற்று மாலை, அவர்களின் குறைகளை எல்லாம் நானே அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்றேன். அவர்களிடத்தில் என்ன என்று கேட்டேன். அவர்கள் என்னிடம் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அது தொடர்பாக, நேற்று இரவே அதிகாரிகளிடம் நான் இதுபற்றி கலந்து பேசி, இப்போது, அவர்கள் கோரிக்கைக்கான அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு, குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாய் செலவில், தொழில் வளாகம் கட்டப்படும்!
NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்ட இந்த வளாகத்தில் இரண்டாயிரம் பேருக்கு நேரடியாகவும், 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்! இப்படி பார்த்து பார்த்து நாங்கள் திட்டங்களை செய்துத் தருகிறோம்.
இப்போது மட்டுமல்ல, கோவைக்காக தலைவர் கலைஞர் காலத்தில் செய்த திட்டங்கள் நிறைய இருக்கிறது. அதில் சில திட்டங்களை மட்டும் highlight செய்கிறேன். அதை நினைவுபடுத்துகிறேன்.
இந்தியாவில் முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தான் அமைத்தோம்!
கோவை – அவிநாசி சாலையில் பாலம்!
சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம்!
பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் பாலம்!
கோவை மாநகருக்கான கூட்டுக்குடிநீர் திட்டம்!
சிறுவாணி ஆற்றுப்பாலம்!
நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம்!
கோவை புறவழிச்சாலை!
நான் தொடங்கி வைத்த பில்லூர் அணை இரண்டாம் கட்டக் குடிநீர் திட்டம்!
வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம்!
குறிச்சி குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம்!
கோவை டைடல் பார்க் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் சிலவற்றையும் சொல்ல விரும்புகிறேன்.
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை, விமான நிலைய விரிவாக்கம்! இதற்காக, 1,848 கோடியே 65 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு, 95 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு, நிலம், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்குத் தேவையான “பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்கா” சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், “விமானத்துறை தொழில் பூங்கா” சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் சூலூர் அருகில் தொடங்கி இருக்கிறது.
கோவையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 475 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உக்கடம் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள், 250 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, 40 விழுக்காடு பணிகள் முடிவடைந்திருக்கிறது.
780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, மொத்தம் 178 MLD குடிநீர், நாளொன்றுக்கு கூடுதலாக வழங்க வழிவகை செய்திருக்கிறோம்.
கோவை மாநகருடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளிலும், பாதாளச் சாக்கடை வசதி இல்லாத பகுதிகளிலும், 1,832 கோடி ரூபாய் செலவில் 1,197 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது, ’கோவை ரைசிங்’ என்று கோவைக்கான வாக்குறுதிகளை சொன்னோம்! அதில் பல்வேறு வாக்குறுதிகளின் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது, கிரிக்கெட் ஸ்டேடியம்! தேர்தல் முடிவுகள் வந்த பத்து நாட்களுக்குள் அதற்கான நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. விரைந்து அந்தப் பணிகளும் தொடங்கயிருக்கிறது.
நேற்று முதல் நான் மட்டுமல்ல – அமைச்சர்கள் கே.என்.நேரு – எ.வ.வேலு – முத்துசாமி – செந்தில் பாலாஜி- அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - டி.ஆர்.பி.ராஜா என்று இவர்கள் எல்லோரையும், அவரவர்களின் துறை சார்பாக கோவையில் ஆய்வு செய்ய நான் உத்தரவிட்டேன். அவர்கள் அதை நிறைவேற்றியதுடன், நேற்று மாலையில் அமைச்சர்கள் – தலைமைச் செயலாளர் – மாவட்ட ஆட்சியர் – மாநகராட்சி ஆணையர் என்று எல்லோருடனும் சேர்ந்து ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். நடைபெற்று வரும் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். அப்போது அவர்கள், மக்களின் கோரிக்கைகளை எடுத்து வைத்து, புது திட்டங்கள் கேட்டார்கள்.
கோவையின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? அதனால், முக்கியமான சில அறிவிப்புகளை நான் இங்கே வெளியிட விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் உருவெடுத்திருக்கிறது. இதனால் பல நிறுவனங்களுக்கு அலுவலகங்களுக்கான இடத்தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே, எல்கோசிஸ் பகுதியில் உள்ள 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.
கலைஞர் அவர்களால் சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப் போன்றே, கோவையில், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில், மூன்று மில்லியன் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம், கோயம்புத்தூர் மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.
அடுத்து, அவிநாசி சாலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு தொய்வாக நடைபெற்ற உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரையிலான உயர்மட்ட மேம்பாலச் சாலை பணிகள் முடுக்கி விடப்படுவதுடன், உங்கள் கோரிக்கையை ஏற்று, சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இந்த உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிக்கப்படும்!
மூன்றாவது அறிவிப்பு - தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், பயிர்சேதங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு - கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு - பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
நிறைவாக, நேற்று என்னுடைய ஆய்வுப் பணிகளின் போது, என்னைச் சந்தித்த பல்வேறு தரப்புப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோயம்புத்தூர் மாநகராட்சியில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மண்சாலைகள், இவற்றையெல்லாம் தரமான தார்சாலைகளாக மேம்படுத்திட, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் – ஒவ்வொரு ஊருக்கும் – மக்களுக்கும் தேவையான திட்டங்கள் என்ன? அந்த வட்டாரத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று அறிந்து, அந்தத் திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
என்னைப் பொறுத்தவரை, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் – ஒவ்வொரு நாளையும் மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு தனிமனிதரின் கவலையையும் போக்கும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், இப்படி ஏராளமான திட்டங்களால் ஒவ்வொருவருக்கும் நன்மை செய்கிறோம்!
மக்களின் வாழ்க்கையுடன், நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இரண்டற கலந்திருக்கிறது! வாக்களித்தவர்கள் - வாக்களிக்க மறந்தவர்கள் – வாக்களிக்க மனமில்லாதவர்கள் என்கின்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாங்கள் நாம் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம். அதனால்தான், மக்கள் தொடர்ந்து நம்மை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரிப்பதுடன், எங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறார்கள்!
கடந்த சட்டமன்றத் தேர்தலை விட நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதுதான், பலரும் நம்மை விமர்சிக்கக் காரணம்! எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் – அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களுக்கான எங்களின் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்போம்! இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி! எங்களுக்கு ஒரு விஷன் இருக்கிறது! அதை செயல்படுத்துவதற்கான மிஷன் தான் ஆட்சியதிகாரம்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள்! இன்றைக்கு, அதே வடமாநிலத்துடன் தமிழ்நாட்டை மறுபடியும் ஒப்பீடு செய்து பாருங்கள்! உங்களுக்கே அது புரியும். தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்! இந்தியாவிலே அதிக நகரமயமான மாநிலம்! ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலம்! இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தொழிற்சாலைகளில் மொத்த பதிவு விகிதம் என்று சொல்வார்கள். அந்த குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டிருக்கும் மாநிலம், தமிழ்நாடுதான். தெற்கு ஆசியாவிலேயே சுற்றுலா மேற்கொள்வதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!
வறுமையின்மை – பட்டினி ஒழிப்பு – தரமான கல்வி – பாலின சமத்துவம் – தூய்மையான குடிநீர் – குறைந்த விலைவாசி – வேலைவாய்ப்பு – பொருளாதார குறியீடு – தொழில் – உள்கட்டமைப்பு – சம வாய்ப்புகள் – அமைதி – மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு – நுகர்வு – உற்பத்தி என்று எந்த புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கும்! இதெல்லாம் சாதாரணமாக நடந்துவிடவில்லை. கொள்கையும் – இலட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்குப் பார்வையும் செயல்திட்டமும் கொண்ட மக்களுக்கான அரசை நடத்திய காரணத்தால்தான் இது சாத்தியம் ஆனது!
இதை இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால், இந்த இயக்கத்தை தொடங்கும்போது, பேரறிஞர் அண்ணா சொன்னார்… “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!” ஆனால், இன்றைக்கு, தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம்! இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டும் என்று சொன்னால், தெற்கு தான் வடக்கிற்கும் இன்றைக்கு வாரி வழங்குகிறது! அதுதான் உண்மை நிலை! இதை யாரும் மறுக்க முடியாது! என்னைப் பொறுத்தவரையில், கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வரலாற்றில் நிலைத்திருக்கும் திட்டங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில், ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தி பெயர் பெற்றவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக்கூடிய இந்த ஸ்டாலின் என்பதையும் நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்! உங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளும் – கடமையும் ஏராளம் இருக்கிறது! அதற்கு எப்போதும் உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும்! நீங்கள் வழங்குகின்ற உற்சாகமும் – ஆதரவும்தான் எங்களை இன்னும் வேகமாக வேலை செய்ய தூண்டும்! உங்களுக்காக, உங்களில் ஒருவனாக என்றும் நான் இருப்பேன்! என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த இனிய வாய்ப்பைப் பெற்றமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி, விடைபெறுகிறேன்" என்று கூறியுள்ளார்.