மு.க.ஸ்டாலின்

”தி.மு.க பெயரை கேட்டாலே அலறி அஞ்சி நடுங்கும் பா.ஜ.க ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டாலே பா.ஜ.க நடுங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”தி.மு.க பெயரை கேட்டாலே அலறி அஞ்சி நடுங்கும் பா.ஜ.க ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர் என தி.மு.க தொண்டர்களுக்கு கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

அதற்குள்ளாகவா ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கின்ற அளவிற்கு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவேந்தலை ஆகஸ்ட் 7-ஆம் நாள் அமைதிப் பேரணியுடன் கடைப்பிடித்தோம். ‘மறந்தால்தானே நினைப்பதற்கு’ என்பதுபோல நம் இதயத்துடிப்பாக இருந்து, இயக்கம் காக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவர் தன் அண்ணனுக்கு அருகில் ஓய்வு கொள்ளும் கடற்கரை நோக்கி உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

வங்கக் கடலை நோக்கி மனிதக் கடல் செல்வது போல, அலை அலையாய்த் திரண்டு வந்த உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நம் தலைவர் கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உங்களில் ஒருவனான என் நெஞ்சிலும் அவரே இருக்கிறார். அவரே நம்மை எந்நாளும் இயக்குகிறார்.

இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள்.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.

அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் மதிப்பிற்குரிய ஸ்மிருதி இரானி அவர்கள், தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். நமது கழகத்தின் மக்களவை உறுப்பினர் - துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.இராசா அவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்ததை உடன்பிறப்புகளான உங்களில் பலர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

”தி.மு.க பெயரை கேட்டாலே அலறி அஞ்சி நடுங்கும் பா.ஜ.க ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

“நான் கைது செய்யப்படப் போவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.

தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா அவர்களும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். கழகத் துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி அவர்கள் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் அவர்கள் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி. அதனால்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணி போல, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், ஒன்றியங்கள் – நகரங்கள் – பேரூராட்சிகள் - சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் அமைதி ஊர்வலங்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அவருடைய படத்திற்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளன. உடன்பிறப்புகளும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தலைவரின் படத்தை வைத்து மாலையிட்டு, பூத்தூவி மரியாதை செலுத்தி, நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியாம் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

என்றென்றும் மனதில் குடியிருக்கும் தலைவருக்கு எங்கெங்கும் மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வுகளையும், கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற மாரத்தான் போட்டிகள் பற்றிய செய்திகளையும் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியில் உடன்பிறப்புகளான நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த முரசொலியின் இணையதளம் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், புதிய செயலியும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இனிக் கழகச் செய்திகளை உங்கள் கைகளில் உள்ள அலைபேசியிலேயே உடனுக்குடன் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அவரது நினைவு போற்றும் ஆகஸ்ட் 7-ஆம் நாளை உணர்ச்சிமிகு நாளாக உடன்பிறப்புகள் கடைப்பிடித்து, கண்ணியம் காத்து, கடமையாற்றியிருப்பது கண்டு நெகிழ்கிறேன். நம் கடமை ஒருநாளுடன் முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளும் கலைஞரின் புகழ் ஒலிக்க வேண்டும். அவரது இலட்சியங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். சமூகநீதி - சுயமரியாதை ஆகிய கொள்கைகளால் சமத்துவ சமுதாயம் மலர்ந்திட சலிப்பின்றி பாடுபட வேண்டும். அதில் கழகத்தவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் படைத்துள்ள மக்கள் நலனுக்கான சாதனைகளையும், அவரது பன்முகத் திறன் கொண்ட படைப்பாளுமையையும் அவரது நூற்றாண்டான இந்த (2023-2024) ஆண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடைந்திடாது. இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய அவருடைய சாதனைகளை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை பல்வேறு கோணங்களில், அனைத்து இடங்களிலும், எல்லாத் திசைகளிலும் கொண்டாடுவதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா எம்.பி, கனிமொழி எம்.பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., ஆகியோர் இடம்பெற்றுள்ள அந்தக் குழு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி, ஓராண்டுக்கான நூற்றாண்டு விழா செயல்திட்டங்களை வழங்கியுள்ளது.

”தி.மு.க பெயரை கேட்டாலே அலறி அஞ்சி நடுங்கும் பா.ஜ.க ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

இதுகுறித்து, ஆகஸ்ட் 5-ஆம் நாள் காணொலி வாயிலாக நடைபெற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் தலைமைக் கழகமும், மாவட்டக் கழக அமைப்புகளும், கழகத்தின் பல்வேறு அணிகளும் பொறுப்பேற்று ஓராண்டு முழுவதும் நடத்தக்கூடிய நிகழ்வுகள் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தலைமைக் கழகத்திடம் கலைஞர் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியிடும் பெரும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் கழக அமைப்புகள் அவரவர் மாவட்டங்களில் கலைஞரால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், அவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பயன்மிகு கட்டடங்கள் ஆகியவை குறித்து வாரத்திற்கு இரண்டு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்கிற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களைக் கொண்ட கருத்தரங்கங்கள், ஊர்கள்தோறும் தி.மு.க. என்ற அடிப்படையில் ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் 100 புதிய கொடிக்கம்பங்கள் நிறுவி நம் குருதியோட்டமாகத் திகழும் இருவண்ணக் கொடியேற்றுதல், 234 தொகுதிகளிலும் நவம்பர் மாதத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவினை எங்கெங்கும் கலைஞர் என்ற பெயரில் நடத்துதல், கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி - அண்மையில் மறைந்த கழக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - கல்வி உதவி வழங்குதல் ஆகியவையும் மாவட்டக் கழகத்தின் பொறுப்பில் அளிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளாகும். இவற்றை மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட வேண்டும்.

தலைவர் கலைஞரின் போராட்ட வாழ்க்கை வரலாறு, கழக ஆட்சியின் சாதனைகள், திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சியை மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் பொறுப்பினை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரிடம் தலைமைக் கழகம் வழங்கியுள்ளது.

கழக இளைஞரணியிடம் மாவட்டவாரியாக பேச்சுப் போட்டிகளை நடத்தி மாநில அளவில் 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள் தோறும் கணினி வசதியுடனான கலைஞர் படிப்பங்கள் அமைத்தல், மாரத்தான் ஓட்டப் போட்டிகளை மாவட்டங்கள்தோறும் நடத்துதல் ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மாணவரணியினர் அனைத்துப் பள்ளி - கல்லூரி அளவில் கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்துதல், கலைஞர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றத்தை கல்லூரிகளில் உருவாக்குதல் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டிட வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின்படி, கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளை சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களாகப் பதிவேற்ற வேண்டும். அதுபோல கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளைக் கலைஞர் 100 என்ற தலைப்பிலான காணொளிகளாகச் சமூக வலைத்தளங்கள், யூடியூப் உள்ளிட்டவற்றில் பதிவேற்றிட வேண்டும். கழக மகளிர் அணியினர் அகில இந்திய அளவிலான பெண் தலைவர்களின் கருத்தரங்கம், கலைஞரும் மகளிர் மேம்பாடும் என்ற பெயரிலான பயிலரங்குகள், திராவிட இயக்க வரலாறு - தமிழ்நாட்டு வரலாறு - இந்திய அரசியலமைப்பு ஆகியவை தொடர்பான வினாடி -வினா போட்டிகள் நடத்துதல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவார்கள். மகளிர் தொண்டரணியினருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின்படி திருநங்கைகள் - மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கழக அரசின் இரண்டாண்டு சாதனைகள் மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளை வலையொலி (Podcast) வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டிட வேண்டும்.

கழகத்தின் இலக்கிய அணி சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் படைத்துள்ள இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கங்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கம் ஆகியவற்றை நடத்துவதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற கழக எழுத்தாளர் இமையம் அவர்கள் பொறுப்பில் எழுத்தாளர் அரங்கம் நடைபெறும். கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையினர் மாவட்டந்தோறும் கலைஞரின் திரைக்கதை - வசனத்தில் உருவான திரைப்படங்களைக் காட்சிப்படுத்துதல், கலைஞரின் திரைவசனங்கள் மற்றும் கவிதை ஒப்பித்தல் நிகழ்வுகளை நடத்தும் பொறுப்பினை ஏற்பார்கள். கழக மருத்துவரணி சார்பில் ஆங்கிலக் கருத்தரங்கங்கள், மருத்துவ முகாம்கள், இரத்ததான நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக 100 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடத்துதல், மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கழக சட்டத்துறையினர் சட்டக்கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தும் பொறுப்பினை ஏற்றுள்ளனர். பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரிகளில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் அணியினருக்கு தமிழ்நாட்டின் 5 இடங்களில் கலை இரவு நிகழ்வுகளை நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொண்டர் அணி சார்பில் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் நடத்த வேண்டிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. அயலக அணியினருக்கு தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அணி சார்பில் ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு கழக அமைப்பு மூலம் குறைந்தபட்சம் 100 மரக்கன்றுகள் நடுவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

”தி.மு.க பெயரை கேட்டாலே அலறி அஞ்சி நடுங்கும் பா.ஜ.க ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

நெசவாளர் அணி சார்பில் மண்டலவாரியாக நெசவாளர் விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்திடும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. மீனவர் நலனில் கழகம் என்ற தலைப்பில் மீனவர் அணி சார்பில் மீனவ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான நிகழ்வுகளை நடத்தும் பொறுப்பு கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றம் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகியவற்றிடம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் அனைத்துக் கழக ஒன்றியங்களிலும் விவசாயக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். அமைப்பு சாரா ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் அணி சார்பில் அனைத்து நகரம், பேரூர், ஒன்றியம், மாநகரங்களில் பெயர்ப் பலகைகள் திறக்கப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகள் நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரம் ஆகஸ்ட் 9 முரசொலி நாளிதழில் முழுமையாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் என்னென்ன பொறுப்பு, அந்தப் பொறுப்பினை எந்த முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை உணர்ந்து, மாவட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட – ஒன்றிய – நகர - பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் – மொழி - நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி ‘உரி’க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்!

Related Stories

Related Stories