முதலீட்டாளர்களை ஈர்க்க சிங்கப்பூரைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வாழும் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில்வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்துப் பேசினார். இந்த கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான திருமதி அகிமி சகுராய் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பேசியதாவது, "ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழமையையும், கீழடியும், பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் - அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் ‘நான் முதல்வன் திட்டம்’ - பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என, குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயலாற்றி வருகிறது. எங்களின் இந்த திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம். நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான நட்பு என்பது பரந்த அடிப்படையில் - செயல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைக்கிறது. வர்த்தக உறவுகளையும் தாண்டிய நட்புறவாக அவை அமைய வேண்டும். ஜப்பான் - இந்திய நட்புறவானது, புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஆன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ‘மீண்டும் ஜப்பான் - துடிப்பான இந்தியா - புதிய பார்வைகள் – புதிய பரிமாற்றங்கள்’ என்று அதற்கு தலைப்பு தரப்பட்டு இரண்டு நாட்டிலும் கலாச்சார விழாக்கள் நடைபெற்றன. இத்தகைய கலாச்சார தொடர்புகள் தொடர வேண்டும்.
ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் திரு.நிக்கிலேஷ் கிரி அவர்களும் சிறப்பாக பணியாற்றி, ஜப்பானில் உள்ள இந்திய சங்கங்களுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997-ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008-ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் என்று அன்போடுக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்! "என்று கூறினார்.