“கொரோனாவில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திடும் விவகாரத்திலும் தொடராமல், தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும்” என வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கும் அவதிக்கும் ஆளாக்கிவரும் நிலையில்; தமிழகத்தின் கிருஷ்ணகிரி- நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள், அங்குள்ள மக்களைப் பதற்றத்திற்கு ஆட்படுத்தி இருக்கின்றன.
பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள்; அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
தமிழக அரசு, கொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல்; வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும் வந்து தம் தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.