பா.ஜ.க ஆட்சி அமைத்த நாள் முதலே நாட்டு மக்களை மத ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பக்கபலமாகவும், ஊன்றுகோளாகவும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவார அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும் எதிர்க்கட்சிகள் சார்பில் அவ்வப்போது நடைபெற்றே வருகிறது. இது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளின் சிலைகளை சேதப்படுத்துவது, அவர்களின் சிலைக்கு காவி நிறம் பூசுவது என பல்வேறு செயல்களில் இந்துத்வா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூலை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, தமிழக பா.ஜ.கவின் ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவப்படத்தை காவி வண்ணத்தில் மாற்றி பதிவிட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.
மேலும், #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரை காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சைக் கட்ட துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்.
எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்றும், சாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்றும் அறிவுறுத்தி மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.