முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், இந்திய உச்சநீதிமன்றத்தின் அழியாப் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி அவர்கள் தனது 95ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்ட அறிவுக் கூர்மையும், கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் போற்றுவதிலும், அவற்றை நிலைநாட்டிக் காப்பதிலும், தனித்துவம் மிக்க ஆர்வமும் வேகமும் கொண்ட ராம் ஜெத்மலானி அவர்கள், தனது 17 வயதில் சட்டப்படிப்பை முடித்து, 18 வயதில் வழக்கறிஞர் ஆனவர். விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முன் வைத்து, வழக்கறிஞர் தொழிலில் பவளவிழா கண்டவர். நீதிமன்றங்களில் கோடை இடியாக முழங்கியவர்.
உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி, தலைவர் கலைஞர் அவர்களிடம் நெருக்கமான நட்பும், ஆழ்ந்த நேசமும் கொண்டிருந்தவர். எப்போது சென்னை வந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரிக்காமல் அவர் டெல்லி திரும்பியதில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவராக, இந்திய பார்கவுன்சில் தலைவராகப் பணியாற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட புதுமையான, பொருள் பொதிந்த, நுணுக்கமான, சட்ட வாதங்களை எடுத்து வைத்து, நீதி பரிபாலனத்தின் நம்பிக்கை மிக்க தூதுவராகத் திகழ்ந்தவர்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றிய அவர், மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து, சுயமரியாதையுடன் சுதந்திரமாகப் பணியாற்றியவர். செப்டம்பர் மாதத்தில் பிறந்து, கடந்த 2017 அதே செப்டம்பர் மாதத்தில் தனது வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராம்ஜெத்மலானி, இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நம்மிடமிருந்து நிரந்தரமாக விடை பெற்று விட்டார் என்பது சட்ட அறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டோர்க்கும் பேரிழப்பாகும்.
எவ்வளவு பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், யார் மூலம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தாலும், அவற்றை முதலில் எதிர்த்து நிற்கும் மனவலிமையும் அரிய ஆற்றலும் பெற்ற ராம் ஜெத்மலானியை இழந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.