டெல்லி முதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மே 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு, ஜூன் 1-ம் தேதி இடைக்கால ஜாமீன் முடிந்து, மீண்டும் திஹார் சிறைக்கு திரும்பினார் கெஜ்ரிவால். இதையடுத்து மீண்டும் ஜாமீன் கேட்டு முறையீடு செய்த அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ மீண்டும் கைது செய்து சிறையில் வைத்தது. இந்த சூழலில் மீண்டும் ஜாமீன் மேல்முறையீடு செய்த கெஜ்ரிவாலின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்ய முடியாது என்று கூறி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றத்தின் கருத்து பின்வருமாறு :
"அனைத்து வழக்குகளிலும் அமலாக்கத்துறை ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும். அனைவருக்கும் ஒரே விதிமுறையை செயல்படுத்த வேண்டும். சீரான செயல்பாட்டு கொண்டிருக்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகள் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்பட முடியாது. ஒருவரை கைது செய்யும்போது ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கொண்டு கைது செய்ய முடியாது. அனைத்து ஆதாரங்களையும் தீவிரமாக ஆராய்ந்த பிறகுதான் கைது செய்ய வேண்டும்.
2023 ஜனவரி மாத கணக்குப்படி அமலாக்கத்துறை 5,906 வழக்குகளில் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆனால், அதில் 531 வழக்குகளில் மட்டுமே சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் மட்டும் 176.
அமலாக்கத்துறை வழக்கு விவரங்களின் தரவுகள் பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. ஒரு நபரை எப்போது கைது செய்ய வேண்டும் என்பதில் அமலாக்கத்துறைக்கு தனித்தனி கொள்கை உள்ளதா? என்பது உள்பட பல கேள்விகள் எழுகிறது. அமலாக்கத்துறை சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ய முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நம்புவதற்கு உரிய காரணங்கள் இருக்க வேண்டும்." என்று கருத்து தெரிவித்தது.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்குவது குறித்து கீழ் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதே போல அமலாக்கத்துறையின் வழக்கின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்ட விதிகளின் கீழ் நடைபெற்றதா?இது கவலை அளிப்பதாக உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
மேலும், அமலாக்கத்துறை சட்டப்பிரிவு-19, 45 ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளதால் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தனர்.