மத்திய வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த நிலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து இது வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த புயலுக்கு ரீமால் என பெயரிடப்பட்டது.
ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்க கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது.
வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கெபுபாராவுக்கும் இடையே மோங்லாவில் இந்த புயல் கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 முதல் 120 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை படிப்படியாக வழுவிழந்து காலை 5.30 மணிக்குள் புயலாக மாறியது. எனினும் இந்த புயல் விரைவில் தனது வலுவை இழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் தொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்ததால், போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரையோர பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.