கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு மே 13ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக தேர்தலில் 7 நாட்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களில் பெங்களூரில் 36 கி.மீ ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியைப் பொதுமக்கள் பலரும் மலர் தூவி வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக பா.ஜ.கவிரே கிலோ கணக்கில் மலர்களை வாங்கி மக்களுக்கு வழங்கிய வீடியோ ஒன்றைப் பத்திரிகையாளர் முகமது ஜூபைர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் பா.ஜ.கவினரை விமர்சித்து வருகிறனர். நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பா.ஜ.கவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "வெட்கம்.. எப்போதும் பொய்களுக்கான மேடை அமைக்கப்படுகிறது" என விமர்சித்துள்ளார். ஏற்கனவே பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி முள் வேலிக்கு பின்னால் குழந்தைகளை நிற்கவைத்துப் பேசியதற்கு ஹிட்லருடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.