கடந்த 2020-ம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு விஷயம்தான் கொரோனா. சீனாவில் தொடங்கிய இந்த நோய்த் தொற்றானது, உலகம் முழுக்க பரவியது. ஒவ்வொரு நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க லாக் டவுன், pandemic என பலவகையான விஷயங்கள் கண்டது.
இந்த கொரோனா தொற்று காரணமாக நாளொன்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் இந்த தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்பட்டது.
சில நாட்களுக்குப் பின்னர் இதனைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஒவ்வொரு டோஸாக செலுத்திக்கொண்டனர். உலகளவில் இது நடைபெற்றது.
இதையடுத்து கொரோனா அடுத்தடுத்த அலைகள் வரத்தொடங்கியது. இதன் உருமாற்றம் சில நேரங்களில் வீரியமாகவும் காணப்பட்டது. இதனால் ஓமைக்ரான் போன்ற தொற்றுகள் வரத்தொடங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக மக்கள் நிம்மதியாக மூச்சுகூட விடமுடியாத அளவிற்கு கொரோனா பாடாய்ப் படுத்தியது. மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உலக மக்கள் அனைவரும் தள்ளப்பட்டோம்.
பிறகு படிப்படியாக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததாகப் பெருமூச்சு விட்டு வருகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத இன்னொரு நோய்த்தொற்று பரவிக்கொண்டு கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்று தற்போது முற்றிலும் முடியவில்லை என்றாலும், ஆங்காங்கே இந்த தொற்றால் சில பாதிப்புகள் இறப்புகள் நிகழ்ந்துதான் வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் H3N2 என்ற புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக H3N2 என்ற இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்குத் தொடர்ச்சியாக இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும். இந்த வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் அதிக அளவு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்து வருகின்றனர்.
மேலும் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த வைரஸ் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் ஆன்டிபையாட்டிக் மருந்துகளை சாப்பிடக்கூடாது. மருத்துவர்களின் பரிந்துரைக்கும் மருந்துகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.