கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் நாயக். இவர் ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 7ம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், கடந்த 8ம் தேதி அரிசிகெரே பகுதியில் ஹேமந்த் தத்தா என்பவருக்கு ஐ போன் ஒன்றை டெலிவரி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
ஹேமந்த் தத்தா ஆன்லைனின் ஐ போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த போனை ஹேமந்த் நாயக் அவரிடம் டெலிவரி செய்துள்ளார். அப்போது ஐ போனுக்கான ரூ.46 ஆயிரம் பணம் அவரிடம் இல்லை. இதனால் ஐ போனை டெலிவரி செய்ய வந்த ஹேமந்த் நாயக்கைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பிறகு அவரது உடலை நான்கு நாட்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். பின்னர் 11ம் தேதி இரவு உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே இருந்த ரயில் தண்டவாளத்திற்கு எடுத்துச் சென்று எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த ஐ போனுக்காக டெலிபரி பாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.