அந்த காலம் முதல் இப்போது வரை மனிதருக்கு இன்றியமையாத தேவைகளில் கடவுளும் அடங்குவர். சிலர் அந்த கடவுளின் பெயரை கூறி பல நாசகேடுகளான சம்பவங்கள் செய்து வருகின்றனர். இதன் மூலம் போலி சாமியார்கள் மந்திரவாதிகள் என்று பலரும் சிக்கியுள்ளனர். ஆரம்பத்தில் நகை, பணங்கள் மட்டுமே பறிகொடுத்து வந்த சிலர், தங்களையே இழக்க தொடங்கினர்.
இதுபோன்ற ஆண் சாமியார்கள் பெண்களை தங்கள் காம இச்சைக்கு உள்ளாக்கி வருகின்றனர். இதுபோன்ற பாலியல் சிக்கலில் நித்தியானந்தா, சிவா சங்கர் பாபா என பலரும் உள்ளனர். அதில் ஒருவர் தான் இந்த ஆசாராம் பாபு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் ஆசாராம் பாபு. இவரை அந்த பகுதி மக்கள் சாமியாராக நினைத்து சேவை செய்து வருகின்றனர். இவர் மீது அடிக்கடி நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள், குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. இது தொடர்ந்து அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
அதாவது கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தானில் 16 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்தார். தொடர்ந்து இவர் மீது அடுத்த ஆண்டே (2014) குஜராத் ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சகோதரி சீடர்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மீண்டும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்த சாமியாரின் பிள்ளைகளில் ஒரு மகனும் அடங்குவார். இந்த வழக்கில் சாமியாருக்கு எதிராக அங்கிருந்த சமையல்காரர் ஒருவர் சாட்சியும் கூறினார். அவரும் கொலை செய்யப்பட்டதாக இவர் மீது மேலும் ஒரு புகார் தொடுக்கப்பட்டது. இப்படி தொடர் வழக்கு காரணமாக இவர் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து இவர் மீது தொடர்ப்பட்ட வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், இவருடன் சேர்ந்து 5 பேர் மீது 2013-ல் கொடுக்கப்பட்ட பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டு இவருக்கு 2018-ல் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படாமல், மாறாக நீதிபதிகளே நேரில் சிறைக்கு சென்று இவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக கூறி இவருக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்ற மூன்று பேர் விடுதலையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் தற்போது வரை அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்படி இருக்கையில் தற்போது 2014-ல் கொடுக்கப்பட்ட வழக்குப்படி அந்த பெண்கள் 2001-2006 வரை குஜராத்திலுள்ள ஆசிரமத்தில் தாங்கள் இவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கில் சாமியார் மீது மட்டுமின்றி, ஆசாராம் பாபுவின் மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் சீடர்கள் என கூறிக்கொண்ட 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது புகார் கொடுப்பட்டது.
இந்த நிலையில் 2013-ல் கொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஆசாராம் குற்றவாளி என்று கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆசராமின் மனைவி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இந்த வழக்குக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. எனினும் இந்த தண்டனை போதாது என்றும் கருத்து நிலவி வருகிறது. இப்படி இருக்கையில் யார் இந்த ஆசாராம் என்று இணையத்தில் தேடு பொருளாக உள்ளது.
யார் இந்த ஆசாராம் பாபு ?
இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு (ஏப்ரல் 17, 1941) ஆசாராம் பிறந்தார். அப்போது இவரது பெயர் அசுமல் (இயற்பெயர்). இவருக்கு சுமார் 7 வயது இருக்கும்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதன்பிறகு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்தது. அப்போது இவரது குடும்பம் சிந்து மாகாணத்தில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு குடியேறினர்.
ஆரம்பத்தில் இருந்து ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவரை வறுமை வெட்டியெடுத்தது. இதனால் அவரது தந்தை குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்தார். இருப்பினும் இவர் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு வரை படித்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறொரு பகுதியிலுள்ள ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு இவருக்கு லட்சுமி தேவி என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. தொடர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தை போல் ஆரம்பத்தில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்த இவர், நாளைடைவில் குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்தார். குறிப்பாக அஜ்மீர் தர்காவுக்கு அநேக பக்தர்கள் வருகை தருவதால் அங்கே குதிரை வண்டி ஓட்ட ஆரம்பத்தார்.
இவரது வண்டியில் மட்டும் குஷன் சீட் இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலே இவரது வண்டியை தேடி மக்கள் அனைவரும் வருவர். அதன்பிறகு இவருக்கு தானும் ஒரு சாமியார் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. இதனால் சாமியார் லிலாசா என்பவர் 1964 ல் இவரை தனது சீடராகப் ஏற்று கொண்டார். இதைத்தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள முதேரா நகரில் சபர்மதி ஆற்றங்கரை பகுதியில் தனது முதல் ஆசிரமத்தை கட்டினார்.
அங்கு பக்தர்கள் வரத்தொடங்கிய பிறகு தனது சொற்பொழிவை தொடங்க ஆரம்பித்தார். பிறகு சொற்பொழிவு முடிந்தவுடன் பிரசாதம் என்ற திட்டத்தை கொண்டு வந்த பிறகு இவருக்கு ஏரளமான பக்தர்கள் குவிய தொடங்கினர். இதையடுத்து தனது ஆன்மீக பயணத்தை குஜராத்தின் பிற நகரங்கள் வழியாக படிப்படியாக ஹரியானா, மத்திய பிரதேசம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு சென்றார்.
தற்போது வரை உலக அளவில் 400 ஆசிரமங்கள் இவருக்கு உள்ளது; சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இவர் மீது நில ஆக்கிரமிப்பு, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் பல வித சாமியார்கள் உருவாக்கினாலும், நம் மக்கள் அவர்களை தான் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இதுபோன்று அநேக சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மக்களின் வெகுளி தனத்தை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இதுபோன்ற விசயங்களை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவ சங்கர் பாபா கைதானார். அப்போது பக்தர்கள் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதில் பெண்கள் தான் முக்கால் பங்கு வகித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கைதானபோது, குழந்தை பிறந்து சில நாட்களே ஆன பெண் ஒருவர் தனது கைக்குழந்தையோடு அங்கு வந்து கண்ணீர் விட்டு நின்றார்.
தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே நித்தியானந்தா, சிவ சங்கர் பாபா, அன்னபூரணி போன்ற பல சாமியார்கள் உள்ளனர். அப்படி என்றால் நாடு முழுக்க, உலகம் முழுக்க எத்தனை பேர் இருப்பார்கள் என்றால் கணக்கே போட முடியாது. இதுபோன்ற மக்கள் இருக்கும் வரையில், இதுபோன்ற பாபாகள், பாபுகள் உருவாகத்தான் செய்வார்கள் என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.