கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் தோட்டத்தில் கொய்யாப்பழம் தொங்குவதை கண்டுள்ளார். நீண்ட நாள் அதை பறிக்க எண்ணிய இவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் யாரும் இல்லை என்று நினைத்த அவர், கொய்யாப்பழத்தை பறித்துள்ளார்.
இதனை கண்ட மாற்று சமுதாயத்தை சேர்ந்த அந்த தோட்டத்தின் உரிமையாளரான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவரும் ஓம் பிரகாஷை வசைபாடியுள்ளனர். மேலும் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு அவரது சமுதாயத்தை குறிப்பிட்டு அநாகரீகமாகவும் திட்டியுள்ளனர்.
தொடர்ந்து அந்த இளைஞரை தாக்கியதில் படுகாயமடைந்த ஓம் பிரகாஷ், மயமாகியுள்ளார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஓம்பிரகாஷின் சகோதரர் சத்யபிரகாஷ் காவல்துறையில் புகார் அளித்தார். அவரளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
முன்னதாக இதே போன்று 9 வயது பட்டியலின சிறுவன் ஒருவன் குடிநீர் பானையை தொட்டதால் ஆத்திரப்பட்ட ஆசிரியர் அவரை அடித்தே கொன்றுள்ள சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியது.
அதேபோல் கர்நாடகாவில் காதணியை திருடியதாக கூறி பட்டியலின சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.