இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மருந்து முதல் வீட்டு உபயோக பொருளான சிலிண்டர் வரை அனைத்து பொருட்களின் விலையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இப்படி மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் ஒன்றிய அரசை பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா காலத்தில் பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாகத் தீவிரமான கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவே தேவை என கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க கட்சிக்குள் தேர்தலே நடத்தப்படுவது இல்லை. மோடியின் ஒப்புதல் படியே பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர் என விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவில், "பா.ஜ.கவின் ஆரம்ப நாட்களில், நாங்கள் கட்சி மற்றும் நாடாளுமன்ற கட்சி தேர்தல்கள் மூலம் நிர்வாகிகள் பதவிகளை நியமிப்போம். கட்சி அரசியலமைப்புக்கு அது தேவை.ஆனால் இன்று பா.ஜ.க கட்சிக்குள் தேர்தலே நடப்பது இல்லை. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடனே உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆட்சிமன்றக்குழுவில் இருந்து நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியை சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.